Friday, February 26, 2010

”தல புராணம்” (ஸ்தல புராணம் என்று பக்தர்கள் ஏமாற வேண்டாம்...)

சின்ன சின்ன தல அஜித்: அய்யா... வணக்கம் அய்யா...

பெரிய தல : யாருப்பா அது... குரல் கேட்டால் அஜித் மாதிரி இருக்கு... என்ன விஷயம்...

சின்ன “தல” : அய்யா... எங்கள எல்லாம் மெரட்டுறாங்கய்யா.. நீங்க தான் பார்த்து ஏதாவது செய்யணும்....

”பெரிய தல” : யோவ் அஜித்து.. நீ ஒரு வெவரம் புரியாத ஆளுய்யா.... என்ன கூட தான் மெரட்டினாங்க... நான் உன்ன மாதிரி இவ்ளோ பெரிய கூட்டத்துலயா வந்து கத்தினேன்... வீட்டுக்குள்ளவே கத்தினேன்... போய்யா... நீயும் உன் ஐடியாவும்....

“சின்ன தல” : உங்கள் மெரட்டி, நீங்க கத்துனீங்களா?? அது எப்போய்யா... எனக்கு தெரியாதே... என்னன்னு சொல்லி கத்தினீங்க...

“பெரிய தல” : அய்யோ.... கொல பண்றாங்கோ.... கொல பண்றாங்கோ...

“சின்ன தல” : இந்த அளவு எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லேங்கய்யா.... அப்படி நடிச்சு இருந்தா ..... தமிழ் நாட்டுக்கு இந்நேரம் 10 / 15 ஆஸ்கார் கெடச்சு இருக்கும்யா....

Sunday, February 21, 2010

மனைவி அமைவதெல்லாம் – (சிறுகதை)

ச்சே...... என்ன வாழ்க்கை இது...... சலிப்புடன் சொல்லியவாறு ஷூவை கழற்றி வீசினான், ஆபீசிலிருந்து திரும்பிய மோகன். ஏங்க, என்னிக்குமே இல்லாம, இன்னிக்கி ஏன் இவ்வளவு சலிப்பு என்று கேட்டாள் மனைவி வினோதினி.

இல்லேம்மா, இந்த கடவுளை நினைச்சா, ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.... இன்னொரு பக்கம், வெறுப்பா இருக்கு என்றான். சற்று நெருங்கி அமர்ந்து ’பக்திமானுக்கு, திடீர்னு கடவுள் மேல வெறுப்பு வர்றதுக்கு என்ன காரணம்? சொல்லுங்க’ என்றாள் வினோதினி. குரலில் அன்பை குழைத்து அவனை சமனமாக்கும் முயற்சியில் தொடங்கினாள்.

இல்ல வினோ, என்னோட ஆபீஸ்ல கூட வேலை செய்யற அக்கௌண்டன்ட் பரந்தாமன் சார் இருக்காரே. அவ‌ரோட பொண்ணுக்கு, ரொம்ப நாளைக்கப்புறம் இப்போதான் ஒரு நல்ல வரன் வந்து இருக்கு....பையன் நல்ல வேலையில இருக்கானாம். எங்கேயோ ஒரு கல்யாணத்துல சாரோட பெண்ணை பார்த்து இருக்கான். அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு..... பையனோட வீட்டுல, அங்க இங்க விசாரிச்சு, ஜாதகம் குடுத்து இருக்காங்க..... ஜாதகம் கூட நல்லா பொருந்தி இருக்காம்.

கல்யாணத்த சீக்கிரம் நடத்திடணும்னு பையனோட குடும்பத்துல ரொம்ப பிடிவாதமா இருக்காங்களாம். பையன் கொஞ்சம் பெரிய இடம். அதனாலே, இவரு நினைக்கறதைவிட கூட செலவு ஆகுமேன்னு பரந்தாமன் சார் வருத்தப்படறார். இன்னிக்கி வரைக்கும், யார்கிட்டயும் சொல்லாம, லன்ச் சாப்பிடறப்போ, என்கிட்டே சொல்லி கண் கலங்கினார்.

கடவுள் இருக்கார்...அதான், அவரோட பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் வந்ததுன்னு எடுத்துண்டா கூட... அந்த கல்யாணத்த நல்லபடியா நடத்தறதுக்கு அவர் படற கஷ்டத்த பார்த்தா, அந்த கடவுள் மேல ஒரு கோபமும், வெறுப்பும் வர்றது...

நண்பர்களை மதிப்பதிலும் அவர்கள் பிரச்சனையை தன் பிரச்சனையாய் பாவிப்பதும் தன் கணவனின் குணம் என்பதை அவள் அறிவாள். கணவன் மனைவி இருவருமே நண்பர்கள் போல தத்துவ விவாதத்தில் கலந்து, பிரச்சனையின் ஆழ செல்வர்.

நல்லது நடந்தா கடவுளை போற்றுவதும், நினைத்தது நடக்கலேன்னா அவரை தூற்றுவதும் தான் நாம எல்லாரும், எப்போவும் பண்றது தானேன்னும் தோணறது... நமக்கு மட்டும் ஏன் இந்த ரெட்டை புத்தின்னு கூட ஆச்சரியமா இருக்கு...

அவரோட இவ்வளவு வருஷ சேவிங்க்ஸ் எல்லாம் கணக்கு எடுத்தாகூட ஒரு ரெண்டு லட்சம் கொறைச்சலா இருக்காம். ரொம்ப வருத்தப்பட்டு என்கிட்டே சொன்னார். அதான், என்ன பண்றது.....அவருக்கு எப்படி உதவி செய்யறதுன்னு யோசிச்சுண்டு இருக்கேன்...கவலையுடன் நிறுத்தினான் மோகன்.....

எனக்கு சட்டுன்னு ஒண்ணுமே தோணல வினோ........ நீ ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு... நம்மளால ஏதாவது உதவி செய்ய முடியுமா? அவர் நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கார்....... நம்ம பொண்ணோட கல்யாணத்தப்போ கூட இதுபோல பணத்துக்கு நாம தவிச்சப்போ, அவர்தான், எங்கேயோ ஜாமீன் போட்டு ஒன்றரை லட்சம் வாங்கி கொடுத்தார்....

அட என்னங்க. அவர் பண்ணின உதவியை, நாம ஆயுசுக்கும் மறக்க முடியுமா..சரி, இப்போ பரந்தாமன் சார், வீட்டுல இருப்பாரா? கேட்டாள் வினோதினி.....மோகன் தலை நிமிர்ந்து பார்த்தான்......சொல்லுங்க, உடனே அவருக்கு ஒரு போன் போட்டு, வீட்டுலேயே இருக்க சொல்லுங்க..... நல்ல விஷயம்தான்...நான் இப்போ வரேன் என்று உள்ளே சென்றாள்.... சுவர் கடிகாரத்தில் நிமிட முள்ளை துரத்தும் வினாடி முள், ரெஃப்ரியாய் மணி முள் எனும் விளையாட்டை மும்முரமாய் விளையாடியது.

திரும்பி வரும்போது, ஒரு ஹேண்ட்பேக் வைத்து இருந்தாள்....இந்தாங்க, இதை கொஞ்சம் பிரிச்சு பாருங்க இது நம்மோட சேமிப்பு பணம் என்றாள்.... உள்ளே, கரன்சிகள் முண்டியடித்து கொண்டு இருந்தது..... மோகன் விழிகள் ஆச்சரியத்தில் விரிய......ஹேய்...நம்ம கிட்ட ஏதும்மா வினோ, இவ்ளோ பணம்.....அதுவும் சேமிப்பா!!. . எனக்கு ஆச்சரியமா இருக்கே...

இது, நான் எட்டு-பத்து வருஷமா கொஞ்சம், கொஞ்சமா சேர்த்து வச்ச பணம்... ஏதாவது வீடு வாங்கணும்னு ப்ளான் பண்ணினா, அப்போ உபயோகமா இருக்கட்டுமேன்னு கொஞ்சம், கொஞ்சமா எடுத்து வச்சது...

இல்லேன்னா.. எப்போவாவது, நமக்கோ, நம்மை தெரிஞ்சவங்களுக்கோ, ஏதாவது கஷ்டம்னு வந்தா, அன்னிக்கி இத எடுத்து உபயோகப்படுத்தணும்னு வச்சு இருந்தேன்.....இப்போதைக்கு இருக்கற வீடே போதும்னு தோணித்து... அதான், இந்த பணத்தை இதுவரைக்கும் எடுக்கவே இல்லை. அதுக்கு இப்போதான் வேளை வந்திருக்கு.. ஒரு 2-3 லட்சத்துக்கு மேலயே இருக்கும்னு நெனக்கறேன். உங்களுக்கு கூட இதை பத்தி சொல்லல..... ப்ளீஸ். என்ன மன்னிச்சுடுங்க....

அந்த கடவுள் புண்ணியத்துல, நம்ம யாருக்கும் பெரிசா ஒண்ணும் கஷ்டமோ, பெரிய அளவுல பணத்தேவையோ வரலை..... அதான், இந்த பணம் அப்படியே செலவாகாம, சேமிப்பாவே இருக்கு... என்றாள்...... இந்த பணம், இப்போ பரந்தாமன் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு தான் உபயோகபடணும்...... இதை விட இந்த பணத்த உபயோகப்படுத்த நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வராது என்று, அந்த ஹேண்ட்பேகை மோகனிடம் கொடுத்தாள் வினோதினி..

சட்டென்று சோபாவில் இருந்து எழுந்த மோகன், விநோதினியை கண்ணீர் மல்க கட்டி அணைத்து... முத்த மழை பொழிந்தான்.....வினோ.... உன்ன நெனச்சு நான் ரொம்ப பெருமை படறேன்...... அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன்..... அதுவும், நமக்கு உதவி செய்தவர்க்கு ஒரு கஷ்டம்னு சொல்றப்போ, அவருக்கு உதவி பண்றதுக்கு நம்ம கையில பணம் எதுவுமே இல்லையேன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்த போது இதை கொடுத்தியே, யூ ஆர் ரியலி க்ரேட் டியர்..இப்போ, நாம இந்த பணத்தை கொடுத்து, பரந்தாமன் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு உதவி செய்யப்போறோம்.....

வள்ளுவர் சொன்ன மாதிரி "காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மானப்பெரிது"..........அதாவது, முழுசா கல்யாண செலவுக்கான உதவி பண்ணலேன்னா கூட அவருக்கு இப்போ தேவையா இருக்கற இந்த பணம், நிஜமாவே பெரிய உதவிதான்.. உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் என்று சொல்லி, பரந்தாமன் சார் வீட்டுக்கு போன் செய்தான்......

சார், நான் மோகன் பேசறேன் ....... கவலைப்படாதீங்க சார்.. நீங்க மத்தியானம் என்கிட்ட சொன்ன, பண பிரச்சனை தீர்ந்தது....உங்க பொண்ணோட கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்க போறது.... நீங்க கேட்ட பணம் 2 லட்சம் நான் தரேன் சார்....

என்னது நன்றியா... அது ரொம்ப பெரிய வார்த்தை சார். அப்படியே நீங்க நன்றி சொல்றதுன்னாலும் என்னோட மனைவி விநோதினிக்குதான் சொல்லணும்.... எதுக்கா.... நான் இப்போ, பணத்தோட நேர்ல வரேன்... அப்போ விபரமா சொல்றேன் என்றான் மோகன்....

Sunday, February 14, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்

12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982

மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.. ரஜினி, அம்பிகா, ராதா இணைந்து நடித்த படம்... ரஜினி அவர்களின் அமைதியான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது... அதே நாளில் பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன்., கமல் கூட்டணியில் வெளிவந்த ஒரு மசாலா படம் பட்டையை கிளப்பியது... அது “சகலகலா வல்லவன்”.

13. மூன்று முகம் – 01.10.1982

மூன்று வேடங்களில் மூன்று முகமாய் மிகவும் வித்தியாசமான நடிப்பின் பரிமாணங்களை காட்டினார். துறவறம் பூண்டு தொடங்கும் பாந்தமான காமெடி நடிப்பு, பின் பொறி பறக்கும் அலெக்ஸ் பாண்டியன் என பரிமளித்து பின் பகுதியில் ஜான் என கலக்கிய படம். இதுவே பின்னர் ஹிந்தியில் "ஜான் ஜானி ஜனார்த்தன்" எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கொடி பறந்தது. குறிப்பாய் செந்தாமரைக்கும் ரஜினிக்கும் முட்டிக் கொள்ளும் காட்சிகள் தியேட்டரின் ஏகோபித்த ஆதரவு பெற்றது.

14. ஸ்ரீராகவேந்திரர் - 01.09.1985

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100வது படம்.... திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடனே மனதில் முடிவு செய்து வைத்திருந்தாராம்,.. இந்த வேடத்தை 100வது படத்தில் ஏற்பது.... குருநாதர் பேனரில் நடிப்பது என்று... அதற்காகவே, கே.பாலசந்தர் அவர்கள், எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் சொல்லி, இந்த படத்தை டைரக்ட் செய்ய சொன்னதான எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஒரு மேடையில் கூறினார்... கவிதாலயா தயாரிப்பு... எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன்... அருமையான இசை இளையராஜா... “அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்ப்பவன்”, ”ஆடல் கலையே தேவன் தந்தது”, தேடினேன் தேவ தேவா. தாமரை பாதமே” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மந்த்ராலய மகான் அவர்களின் காவியம் தமிழுக்கு கிடைத்தது...

15.படிக்காதவன் - 11.11.1985

கே.பி., எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை தொடர்ந்து ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த மற்றொரு டைரக்டர் ராஜசேகர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த “குத்தார்” படத்தின் தமிழ் ரீமேக்... நடிப்பின் இமயமும் நடிகர் திலகம் சிவாஜி இவரும் சேர்ந்து கலக்கி, மிகப் பெரிய வெற்றி. குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவியான டாக்சி டிரைவர், தம்பி சரியாக படிக்காமல், தீய வழியில் போவதை கண்டு வெம்பும் கதாபாத்திரத்தில் பின்னி இருப்பார்.. ஜோடி அம்பிகா.. 1985 தீபாவளிக்கு வெளியானது... இருவரின் நடிப்பும் வெகு பாந்தமாக வெளிப்பட்ட படமிது.. இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது...” இத்தனை அப்பாவியா என நாகேஷ் கேட்கும் காமெடிகளில் கச்சிதம். தம்பிக்கு என பாசம் கொட்டி, தன் வாழ்க்கையை அர்பணித்து விட்டு தம்பி உதாசினம் செய்து விட வெறுத்து ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என பாடும் போது இதயம் நனையும். காமெடி யதார்த்தம் என இரு துருவங்களையும் இணைத்த பிரமிப்பு. ”ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்”, “ராஜாவுக்கு ராஜா நான்டா” “சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு” , “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.

16. தளபதி - 05.11.1991

ஜி.வி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு...டைரக்டர் மணிரத்னம் அவர்களுடன் முதலில் இணையும் படம்.. இளையராஜாவின் அதிரடி சூப்பர் ஹிட் இசை, வாலியின் வைர வரிகளில் பட்டையை கிளப்பிய பாடல்கள்... இது “தளபதி” படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த கூட்டணி..உயரிய இயக்கம், தேர்ந்த திரைக்கதை, குளு குளு ஒளிப்பதிவு என ரஜினியும் மம்முட்டியும் அதிரடியாய் நடித்தது. அரவிந்த்சாமி அறிமுகமான படம்..நட்பை கூட கற்பை போல் எண்ணுவேன் என கர்ணனாய் வாழும் கதாபாத்திரம்.மம்முட்டி ரஜினிக்கு இணையான படம் முழுதும் வந்து பாராட்டத்தக்க நடிப்பை தந்த படம்... ரஜினியின் பல பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த படம்...

“ராக்கம்மா கைய தட்டு”, சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, காட்டுக்குயிலு மனசுக்குள்ள”, யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே”, ”சின்ன தாயவள் தந்த ராசாவே”, “மார்கழிதான் ஓடி போச்சு போகியாச்சு” என்று அனைத்து பாடல்களும் ஹிட் ஆன ஒரு படம் தான் “தளபதி”... 1991 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ்... வெற்றி பெற்ற படம்..

17.மன்னன் - 14.01.1992

பி.வாசு.இயக்கத்தில், சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம்... ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பும் வெளிப்பட்ட ஒரு படம்.. காதல், சோகம், அன்பு, பாசம், வீரம் என்று அனைத்து துறைகளிலும் ரஜினி சிக்ஸர் அடித்திருப்பார்... தாயை மதிப்பதில் மன்னன், சண்டி ராணியான மனைவி அடக்குவதில் மன்னாதி மன்னன். இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது.. அதிலும் கவிஞர் வாலி எழுதி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்... (இந்த பாடலை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார் யேசுதாஸ் அவர்கள் தான் கட்டிய ஒரு கோயிலில்..) அம்மா என்றழைக்காத பாடலில் தன் தாயை நினைக்காத தமிழனே இல்லை என சொல்ல வைத்த பாடல். அடங்காத திமிர் பிடித்த பெண்ணாக விஜயசாந்தி ரஜினியுடன் போட்டி போட்டு நடித்து இருப்பார்... கவுண்டருடன் டிக்கிட்டு கவுண்டரில் அடிக்கும் லூட்டி எக்கச்சக்கம்.

18. அண்ணாமலை - 27.06.1992

ஆக்ரோஷமான ரஜினியை வெளிக்கொணர்ந்த, டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்த படம்.. தேவாவின் பட்டையை கிளப்பிய இசை, கலகல திரைக்கதை, உணர்வு பூர்வமான நடிப்பு என சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் செம தூள்.கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலயா தயாரிப்பாக வந்தது..

முதலில் டைரக்டர் வசந்த் இயக்குவதாக இருந்து, சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வந்தது..

இசையமைப்பாளர் தேவா முதன் முதலாம ரஜினி படத்திற்கு இசையமைத்த படம்... “கொண்டையில் தாழம்பூ” , “ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்”, வந்தேண்டா பால் காரன் அடடா, பசு மாட்ட பத்தி பாடப்போறேன்” (ரஜினியின் அட்டகாசமான அறிமுக பாடல்), “ஒரு பெண்புறா” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மாபெரும் வெற்றிப்படம்.. என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கியதில் முக்கிய பங்காற்றிய படம் என்று ரஜினியே சொன்ன படம் இது.

19.பாட்ஷா - 12.01.1995

சாந்தமான வம்புச் சண்டை எதற்கும் போகாத ஆட்டோக்காரன் என வலம் வந்து இடைவேளை வேளையில் ஆக்ரோஷமான அடிதடி ஆள் என உருமாறி அதகளப்படுத்தும் அற்புதமான நடிப்பு.

எழுத்தாளர் பாலகுமாரன் ரஜினிக்காக எழுதிய மறக்க முடியாத பஞ்ச் டயலாக் “ நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” மிடுக்காக அமைந்த படம்.

இதிலும், இசையமைப்பாளர் தேவாவின் இசை பெரிதும் பேசப்பட்டது... “ நான் ஆட்டோக்காரன்” (அட்டகாச அறிமுகப்பாடல்), “தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு”, “ அழகு, நீ நடந்தால் நடை அழகு” (இது ரஜினியின் தசாவதார பாடல்..... இந்த பாடலில் 10 அவதாரம் எடுத்து இருப்பார்), “ரா ரா ரா ராமையா” (இது சித்தர் சொல்லிய வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக வைத்து கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்) என்று தேவாவின் இசை ராஜாங்கம் நடந்த படம் இது...

ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுத்து, அதன் பின்னர் போட்டுக்கோ என ஸ்வீட் பீடாவும் கொடுத்தது மாதிரி முழு திருப்தி தந்த படம். படம் மெகா ஹிட் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

20.சிவாஜி - 15.06.2007

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படம்.. இங்கிலாந்தின் பாக்ஸ் ஆஃபீஸ் யூ.கே.டாப்-10ல், 9வது இடம் பிடித்து, யூ.கே.டாப்-10 படங்களில் நுழைந்த முதல் தமிழ் படம் என்ற பெருமை பெற்றது... ஜூன் 2007ல் வெளிவந்த “சிவாஜி” செய்த சாதனை, இன்று (ஃபிப்ரவரி 2010) வரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது...... இந்திய படங்கள் என்றாலே பாலிவுட்டின் ஹிந்தி படங்கள் தான் என்று நினைத்திருந்த சர்வதேச திரைப்பட சந்தைக்கு, தமிழ் (கோலிவுட்) என்று ஒரு மார்க்கெட் உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய படம்..சர்வதேச சந்தைக்கு தமிழ் படத்தை கொண்டு சென்று, நினைத்துப் பார்க்க முடியாத வருவாயை ஈட்டி, தமிழ் படத்தை தரம் உயர்த்திய மைல்கல்.

இன்றைய தலைமுறையை ரசிக்க வைத்து அதிரடி, ஸ்டைல் என கலர்ஃபுல் கலக்கல். ரஜினி இன்னும் இவ்வளவு இளமையா, அழகா என ஆச்சர்யப்படவைத்த அற்புதம். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உலக அளவிலான வசூலில் மிக பெரிய சாதனை படைத்த படம்.... ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் பேசப்பட்ட படம்...

அவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு எழுதியது இந்த பதிவு.

மொத்தமுள்ள 150கும் மேற்பட்ட ஒரு பட்டியலில் 20ஐ மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.

பட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே.


வணக்கம்

தோழமைகள் தங்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.