Wednesday, December 30, 2009

சந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்

நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது...

அவரது ”ஆப்த மித்ரா” மனதில் நிறைந்தது, அதன் வெற்றியும் அதன் தமிழாக்கத்தில் அவரது ஆத்ம நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடைந்த வெற்றியும் அதன் சூழலும் மனதில் நிழலாடியது. கன்னடத்தில் "கில்லாடி கிட்டு", "கலாட்டா சம்சாரா" மற்றும் தமிழில் "விடுதலை", "ஸ்ரீ ராகவேந்திரர்" (சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100 வது திரைப்படம்) படங்களிலும் இணைந்த நிகழ்வும் மனதில் வருடோடியது. வருடத்தின் இறுதி பதிவில் சில சாதனைகள் பட்டியலிடும் போது, மனம் ஆக்கபூர்வமாய் ஆகும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இனிய மனங்கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைக்கும் அவர் தம் குடும்பத்துக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் “சந்திரமுகி”. ”மணிச்சித்ரதாழ்” என்ற மலையாள படத்தின் கன்னட பதிப்பான ”ஆப்தமித்ரா” விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி அடைந்திருந்த நிலையில், ரஜினிகாந்த், தமிழில் ரீமேக் செய்து நடித்த படம்... 2002௦ ஆம் ஆண்டில் வெளிவந்த “பாபா” படம் சரியாக வெற்றியடையாத நிலையில் 3 வருடங்கள் எந்த படமும் நடிக்காத நிலையில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டில் நடித்து “சந்திரமுகி” வெளிவந்தது...

”சந்திரமுகி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் சொல்லிய “நான் யானை இல்லை, குதிரை.... விழுந்தா சட்டென்று எழுந்துடுவேன்” என்ற டயலாக் ரொம்ப பிரசித்தம்…

இனி ”சந்திரமுகி” படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை ரீவைண்ட் செய்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... என்ன இருந்தாலும், பழைய நினைவுகளை அசைபோடுவது ஒரு தனி சுகம்தானே நண்பர்களே...

நாட்களாக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் படம் எடுக்காத நிலையில், ரஜினி அவர்கள் ராம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு, தயாரிக்க சொன்ன படம் தான் “சந்திரமுகி”.

தமிழில் 800 நாட்களுக்கு மேல் ஓடி, அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ்ப்படம்...

ஜப்பானிலும் பெரிய வெற்றியை ஈட்டிய படம்..

முதன் முதலாக இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு இசையமைத்த படம்.

ஜோதிகா (கிளைமாக்ஸ் காட்சியில் தன் கோழி முட்டை கண்ணை உருட்டி ”ரா ரா சரசக்கு ரா ரா” என்ற போது அரங்கே அதிர்ந்தது), வடிவேல் நடிப்பு (மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு டயலாக் கேட்டபோது ரசிகர்களின் கரகோஷம் பட்டாசாய் வெடித்தது) வெகுவாக பாராட்டப்பட்ட படம்.

ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...

படத்தின் தொடக்கத்தில் ரஜினி அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெறப்போகிறது... அதில், பாதிக்கு பாதி, அதாவது குறைந்தது 3 பாடல்களையாவது சூப்பர் ஹிட் பண்ணனும் என்று சொன்னதாகவும், அதற்கு வித்யாசாகர், ஏன் சார் 3 பாடல்கள், 6 பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கி காட்டுகிறேன் என்றதாகவும், ரஜினி அவர்கள் அதை நம்பாதது போன்ற ஒரு பார்வை பார்த்ததையும் வித்யாசாகர் ஒரு பேட்டியில் விவரித்தார்... பின்னர் படம் வெளிவந்து மகத்தான் வெற்றி பெற்ற நிலையில், ”சந்திரமுகி” வெற்றி விழாவில் ரஜினி அவர்களே இதை குறிப்பிட்டு தம்மை பாராட்டியதாகவும் தெரிவித்தார்...

ஆரம்பப்பாடலான “தேவுடா தேவுடா” ஒரு மெகா ஹிட் பாடல்... இந்த பாடல் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளர்களை உயர்வாக சித்தரித்தது...

“சாக்கடைக்குள் போயி, சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு

எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில்
தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!!”

கொக்கு பற பற, கோழி பற பற என்ற பட்டம் விடும் பாடல்...

இந்த பாடலின் ஆரம்பம் வெகு விளையாட்டாக இருக்கும்... ஆயினும், இடையில் சில கருத்துக்களை வெகு அழகாக சொல்லி இருப்பார்கள்...

“மீனாட்சி அம்மனை பார்த்தாக்க
கந்து வட்டியோட கொடுமைய போக்க சொல்லு
ஸ்ரீரங்கநாதர பார்த்தாக்க
தலைகாவேரிய அடிக்கடி வரச்சொல்லு”

கந்து வட்டிக்கு மதுரை பெயர் போனது என்பதும், காவிரி நீர் பகிர்வு ஒரு தீராத பிரச்சனை என்பதையும் நாம் அறிவோம்...

அத்திந்தோம், திந்தியும் தோம்தன திந்தாதிருந்தோம்...

இது மலையாள நாட்டுப்புற பாடலை சாயல் கொண்டிருந்த படம்... இந்த பாடலிலும், சில கருத்துக்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கும்...

“ஆறு மனமே ஆறு, இங்கு அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததை சேரு
அட... எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த ஆளே இல்லையம்ம்மா...”

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா


இந்த டூயட் பாடல், வெகு ரம்மியமாக படமாக்கப்பட்டிருக்கும்.... பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத ரஜினி, நயன்தாரா நடிப்பில் பாடல் வெகுவாக பிரபலமானது.... ஜோர்டான் நாட்டில் படமாக்கப்பட்டது என்று நினைவு... வெகு நாட்களுக்கு பிறகு ஹிந்தியின் மிக பிரபலமான பிண்ணனி பாடகி ஆஷா போஸ்லே, இசையமைப்பாளர் வித்யாசாகரின் விருப்ப பாடகர் மது பாலகிருஷ்ணனுடன் (இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது தெரியுமா??) இணைந்து பாடிய தமிழ் பாடல் இது... இந்த பாடலை பற்றிய இன்னொரு சுவையான தகவல்... சந்திரமுகி படத்திற்காக போடப்பட்ட பாடல் அல்ல இது... வித்யாசாகர் அவர்கள் வேறு ஒரு படத்திற்கு போட்ட இந்த ட்யூன், அந்த படத்தின் டைரக்டரால் நிராகரிக்கப்பட்டது... பின், அது வாசு/ரஜினி கூட்டணிக்கு இசைத்து காட்டப்பட்டு, ஓகேவாகி............ பின் நடந்தது எல்லாம் வரலாறு....

அண்ணனோட பாட்டு, ஆட்டம் போடுடா

இந்த வெகுஜனங்களை கவர்ந்த பாடல், பெரிய வெற்றியை பெற்றது... இந்த பாடலிலும், ரஜினி டச் இருக்கும்... பாருங்கள்...

“உள்ளம் தெளிவாக வை... எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும்
அது எனக்கு தெரியும், நாளை உனக்கு புரியும்
அஞ்சுக்குள்ள நாலை வை, ஆழம் பார்த்து காலை வை”

கிளைமாக்ஸ் பாடலான :

”ரா ரா, சரசக்கு ரா ரா”

யாராலும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்தது.... ஒரு தெலுங்கு பாடல், தமிழ்ப்பதிப்பில், முழுதாக இடம் பெற்று, பெரிய வெற்றியையும் பெற்றதை என்னவென்று சொல்வது... இதில் ரஜினியின் ட்ரேட் மார்க் வில்லத்தன நடிப்பு ”வேட்டையன்” என்ற கேரக்டரில் வெளியாகி வெகுவாக ரசிக்கப்பட்டது... அதிலும், குறிப்பாக அந்த குலை நடுங்க வைக்கும் “லக்க லக்க லக்க லக்க” டயலாக்... தியேட்டரில் பொறி பறந்ததை மறக்க முடியுமா?!!

இந்த படத்தின் இசை சேர்ப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், வித்யாசாகர் காரில் பயணித்து கொண்டிருந்த போது, சிக்னலில் அவர் காருக்கு பக்கத்தில் வந்து நின்ற ஒரு வாகனத்திலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி இவரை பார்த்து, சார், நீங்க வித்யாசாகர் தானே, சந்திரமுகி படத்தில் தலைவருக்கு அட்டகாசமா ட்யூன் போடுங்க என்று சொன்னதை ஒரு பேட்டியில் வித்யாசாகர் சிலாகித்து சொன்னார்... ரஜினி அவர்களின் ரீச் எந்த அளவு இருக்கிறது என்று மிகவும் வியப்புற்றதாக குறிப்பிட்டார்...

(பின்குறிப்பு : லக்க லக்க லக்க லக்க டயலாக் உருவான கதை ) :

ரஜினி அவர்கள் ஒரு முறை நேபாள நாட்டிற்கு சென்றிருந்த போது, கூட்டமாக மக்கள் ஒரு பெண்ணை அழைத்து (இழுத்து என்பதுதான் சரி) சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் லக்க லக்க லக்க லக்க என்ற ஒரு விநோத சப்தம் எழுப்பியதாகவும், அவர்களிடம் என்ன செய்கிறீர்கள், யார் இந்த பெண் என்று விசாரித்தபோது, அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், சிகிச்சைக்கு மந்திரவாதியிடம் அழைத்து / இழுத்து கொண்டு செல்வதாக கூறியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்... எங்கோ நேபாள நாட்டில் அவர் கேட்ட ஒரு விஷயம் ஒரு தமிழ் படத்தில் இடம்பெற்று, பின் அதுவே உலகளவில் அறியப்பட்டதையும் என்னவென்று சொல்வது!!??

ஆகவே.....நாம் அனைவரும் ஒன்று கூடி உரக்க சொல்லுவோம்... லக்க லக்க லக்க லக்க......

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியான 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........

Monday, December 21, 2009

நான் அடிச்சா தாங்க மாட்ட!!!! நாலு நாளு தூங்க மாட்ட !!!!

முன்ன ஒரு காலத்துல, முள் ஒடிஞ்ச நேரத்தில,
டங்கிரிடிங்கான்னு ஒரு ஊருக்குள்ள ... (இப்படிதேன் கதைய தொடங்கோணும், மூன்றாம் பிறைல கமல்தாசன் மாதிரி...) கலகலப்பும் சந்தோசமுமாய் ஒரு டகால்டி ஃபேமிலி இருந்துச்சு.

அவிய்ங்கள பார்த்தாலே ... டேய் வாராங்கடா, ஓடிருங்கடா.... என ஊரே கதிகலங்கும். டோட்டலி ஒரு இர்ரெஸ்பான்ஸிபிள் டெர்ரர் குடும்பம்.

குடும்பத் தலைவன் (நேரந்தேன்!! ) தங்கடாடி.... தவமாய் தவம் இருக்காமல் ரெண்டு குழந்தைகளை பெற்றார்.

சிக்கன் பிரியர், ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ட சிக்கன் நினைவா, செல்லமா "தங்ககோழி"னு பேரு வைக்க, பிறந்த குழந்தையோ தத்துவம் பேசுறேன் பேர்வழின்னு தத்து பித்துன்னு ஒளறுச்சு. இதை ஊரெல்லாம் பாத்து, போனா போகுதுன்னு அவனுக்கு "தத்துவ பித்தன்"னு பேர் வச்சுருச்சு... ஆனா, அவன் தலைய பார்த்தாலோ இல்லை அவன் வந்துட்டான்னாவோ ஊரே பெரிய அலறல் அலறி, தலை தெறிக்க ஓடிச்சு.

அடுத்ததா பொறந்தவனுக்கு "மருதமலை" என இவர் பெயர் வைக்க, ஊர் அவனுக்கு "தறுதலை" என பெயர் சூட்டின‌ர். கேட்டுக்கிட்டீங்க இல்லயா... வாசகர்களே, உங்க கைய கொடுங்க, சத்தம் இல்லாம வாங்க, வீட்டின் உள்ளார‌ போயி என்னாதான் நடக்குதுன்னு பார்ப்போம்.

அந்தா மஞ்ச கலர் பேண்டும், பச்சை கலர்ல சட்டையுமா, முண்டா பனியன சட்டைக்கு மேல போட்டுருக்கானே (சூப்பர்மேன் சுப்ரமணி மாதிரியே இருக்காரே) அந்த எடுபட்ட பய தேன் "தத்துவ பித்தன்". (எலே... இவன் அசப்புல பார்த்தா, நம்ம ராமராசன் மாதிரியே இருக்கான்டோய்...). கண்ணுல கூலிங் கிளாஸ் வேற இருக்கு.. ஆங்.. அவன் ஏதோ பாட்டு கூட பாடுற மாதிரில்ல இருக்கு. வாங்க போயி கேப்போம் என்னா பாட்டுன்னு..

டாடி! ஓங்கி அடிச்சா ஊர் கூடி
நம்ம மொக்க ராயன் டெட் பாடி
புட்டுக்கிட்ட மொக்கயன எடுத்துட்டு வர‌
தேடிக்கிட்டு இருக்காங்க ஒரு மீன் பாடி


தங்க டாடி: வாடா ஊருக்குள்ள ஒருத்தனே, தத்துவ பித்தனே! தறுதலைக்கு மூத்தவனே!!. எலே...நாமா அடிச்சா அது மொட்டை. அதுவா விழுந்தா அது சொட்டைடா. அடிச்சுறு ஒட்டடை, இல்லன்னா வீடே பன்னாடை.

தத்துவ பித்தன்: அது வந்து, நம்ம ரெட்டைவால் ராயன்......

தங்க டாடி : யாருடா.... இந்த பங்கரக் கொத்து கொத்தியிருப்பானே அவனா.

தத்துவ பித்தன் : அக்காங்... அவனே தான். ஒரு மொபைல் கம்பெனில‌ போயி கையி ரெண்டும், கால் ரெண்டும் நீட்டினானாம். பாருவே.... என் உட‌ம்புல‌ எத்த‌னையோ "செல்" இருக்கு.. அதுல‌ போடறதுக்கு ஒரு சிம்கார்டு வேணும்னானாம்.

முசுடு மூக்காயி” (மங்குனி மம்மி) : அடி ஆத்தி...டேய் டகால்டி பித்தா!!! கோவில் ம‌ணிய‌ நாம‌ அடிச்சா ச‌த்த‌ம் வ‌ரும். ஆனா, கோவில் ம‌ணி ந‌ம்ம‌ள‌ அடிச்சா ர‌த்த‌ம் தாண்டா வ‌ரும்...இதுதாண்டா வாழ்க்கையோட டெர்ரர் தத்துவம்... அவன் நல்லா கேட்டான்டா டீடேய்லு.

மம்மி... நீங்க சொன்னது டண்டணக்காத்தான்!! டாடி. யானை மேல நாம உட்கார்ந்தா அது சவாரி, யானை நம்ம மேல உட்கார்ந்தா அப்புறம் ஒப்பாரி. பக்கத்து வீட்டு கௌரி.... கொண்டு வரல டௌரி... ரெண்டு நாளா தேடியும் காணல அவிய்ங்க அம்மாவோட செளரி. மொத்துன மொத்துல ராயனுக்கு ரெண்டு நாளா ஒண்ணுமே தெரியலயாம். ஒரே கேரா இருக்காம்....

தறுதலை : டேய் மக்கா...உல‌க‌ம் தெரியாம‌ வ‌ள‌ர்ற‌வ‌ன் வெகுளி, கிரிக்கெட் தெரியாம‌ விளையாட‌ற‌வ‌ன் க‌ங்குலி. எங்க போயி, எதை பேசணும்முனு இல்லையாடா. ஆமா நல்ல பயதானேடா அவன், பின்ன ஏன் இப்படி எல்லாம் கேட்டான்.

வாழ்க்கையில ருசி வேணும்னா, பார்க்கிற படத்துல‌ பஞ்ச் டயலாக் சேர்ந்து இருக்கணும்னு ”கடலைமுடி ஜோசியர்” சொன்னாராமாம்... சரின்னு இவரும் போய் ஒரு படத்த பார்த்தாராம்... அதுல வர்ற பஞ்ச் டயலாக் கேட்டு கொல‌வெறியாயிட்டாராம்...

அப்படி என்னடா அந்த டெர்ரர் பஞ்ச் டயலாக்.. சொல்லு கேப்போம்..

ஹீரோயின.... வில்லன் கடத்திட்டு போய்டறான்... நம்ம ஹீரோ போய் சண்டை போட்டு கூட்டிட்டு வரணும்... போனோமா, சண்டை போட்டோமா, ஹீரோயின கூட்டிட்டு வந்தோமான்னு இல்லாம, சொன்னாரு பாரு ஒரு பஞ்ச் டயலாக்... நான் கேட்டுட்டு ஆடி போயிட்டேன்...

"நான் சொல்லி அடிச்சா குச்சி, சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சி".

பதிவு பூரா மொக்கை, மேசேஜே இல்லன்னா, நம்மள டின்னு கட்டிடுவாய்ங்க. அதனால அர்ஜெண்ட்டா ஒரு மெசேஜ் சொல்லுங்க பதிவை முடிச்சுடுவோம்....

உன் புடுங்கல், பெரிசாச்சேடா.... துவைக்கிறதுலதான் அர்ஜெண்ட் ஆர்டினரி.... ப்ளாக் பதிவிலேயுமாடா.... சரி வைச்சுக்கோ.... ஒரு கேள்வி கேட்டு பதில் சொன்னா மேசேஜ் வந்திரும்ல. பயம்ன்னா என்ன, பதில் சொல்லு.

முந்தா நேத்து கோழி திருடும் போது உடமஸ்தன் மஸ்தான் வந்தானே, அப்ப அவனோட சேர்ந்து நமக்கு வந்துதே, அதுதான் பயம்.

ஏ மக்கா, அசத்திப்புட்டடா..... இருந்தாலும், இன்னும் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ.. பயம் என்பது தைரியம் இல்லாத மாதிரி நடிக்கிறதுடா...

டேடி.... நீங்க பெரிய கேடி, இதே மேட்டர வேற ஒருத்தது வேற ஒரு மாதிரி சொல்ல கேட்ட மாதிரி இருக்கே...

இன்னாடா இது புது கதை... அது இன்னாடா, வேற ஒருத்தரு சொன்னது... சொல்லுடா கேப்போம்...

அதாவது நைனா... குருதிப்புனல் படத்துல நம்ம கமல்தாசன் அண்ணாத்த சொல்வாரு .... தைரியம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கறது மாதிரின்னு... இது அதோட டகால்டி வெர்ஷன்...

நீ அத்த உல்டாவா என் கையில சொல்லிகினே நைனா...

எது எப்படியோ... விடுடா ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..............

Tuesday, December 8, 2009

சூரியனோ....சந்திரனோ...யாரிவனோ சட்டென சொல்லு.....

டிசம்பர் 12 2009 அன்று அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப்பா இதோ, உங்கள் பார்வைக்கு :

ரஜினி எனும் மூன்றெழுத்து காந்தம்
உன் சிரிப்பில் தான் என்னே ஒரு பாந்தம்!!..

மலராத மலரும், மலருமே உன் சிரிப்பில்
இதை கண்ட அனைவருமே நிறைவோமே சிலிர்ப்பில்

வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி
தோல்வி என்பதே இல்லை உனக்கினி
”ஆறிலிருந்து அறுபது வரை” உன் மேல் விருப்பம்
அதுவே திரைவாழ்வில் நீ கண்ட திருப்பம்

உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்
கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை
இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை
அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை

எல்லோர்க்கும் உன் செயல் மேல் நம்பிக்கை
நீ விதைத்தாய் அவர்தம் வாழ்வில் தன்னம்பிக்கை

நீ, மன்னர்களும் மண்டியிடும் ”ராஜாதி ராஜா”
சேரனும், சோழனும் உள்ளடங்கிய - ”பாண்டியன்”
உன் படம் படையெடுக்கும் போது
பட்டையை கிளப்பும் வசூல்... நல்ல மகசூல்.
உன் படம் கண்டவர்கள் சொன்னது தூள், தூள்...
முந்தைய வசூல் சாதனைகள் ஆனதே தூள், தூள்

நீ, ரசிகர்கள் கூட்டத்தை நல்வழிப்படுத்தி
அந்த நல்வழியே அழைத்து செல்லும் ”தளபதி”
உலகில் தர்மத்தை போதித்த ”தர்மதுரை”

உழைப்பின் அருமை பெருமையை
ஓங்கி, உரக்க சொல்லிய ”உழைப்பாளி”
“வள்ளி"
என்ற நல்ல படத்தின் படைப்பாளி

தர்மத்தை போதித்து அதர்மத்தை விரட்டியவன்
அதனாலேயே உன் பெயர் “தர்மத்தின் தலைவன்”

நீ, தரணிக்கே ஒரே மகன்
இந்நாட்டின் தலைமகன் - ஆயினும்
”நான் மகான் அல்ல”, சாமான்யன் தான்
என அடக்கத்துடன் சொல்லிய ”தங்க மகன்”

நீ சொல்லி சூறாவளியாய் அடித்த படம் ”பாட்சா”
உன்னிடம் எப்போதும் பலிக்காது மற்றவர்கள் பாச்சா

உன் அவதாரத்தின் ஒரு பெயரோ ”வீரா” -
ஆனாலும் நிஜத்தில் நீயோ ஒரு சமாதான புறா

அகவை அறுபதை எட்டிய "மாவீரன்” நீ
ஆயினும்...பாசம் உள்ள மனிதன் நீ
மீசை வைத்த குழந்தை நீ

சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்
அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்
”சிவாஜி” என்ற ஒரே படத்தின் மூலம்
அகண்டு விரிய செய்த அற்புத ”மனிதன்” நீ

ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,
இன்னும் உன் ”இளமை ஊஞ்சலாடுகிறது”.

தேனையும், சர்க்கரையையும் சுவைத்தால்தான் இனிக்கும்
ஆனால், உன்னை பற்றியோ ”நினைத்தாலே இனிக்கும்”

நீ பாசத்தின் பாவலன், ”ஊர்காவலன்”
அனைவரும் விரும்பும் "ந‌ல்ல‌வ‌னுக்கு ந‌ல்ல‌வன்"

அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான ”வேலைக்காரன்”
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன் ”தர்ம யுத்தம்”

சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வந்தது வீர சிவாஜி - அன்று
சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வருவது உன் சிவாஜி தி பாஸ் - இன்று

அரிதாரமின்றி அவனியில் உலா வரும் “அதிசய பிறவி” நீ
எளியோருக்கு உதவிட இறைவன் படைத்த அற்புத கருவி நீ

தேவலோக இந்திரனும் காண தவமிருக்கும் “எந்திரனே”
உன் புகழுக்கு தடை போட இனி இல்லை ஒரு அரணே

“எந்திரன்” என்ற ஒரு மாபெரும் சித்திரம்
உலகில் படைக்க போகுதே பல பல சரித்திரம்

அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்

ஆட்சியை தேடி அனைவரும், அனுதினமும் அலைய
வெண்தாடியோடு நீ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய

பிறந்த நாள் வாழ்த்து என நான் தொடங்க
வார்த்தைகள் தேடி வந்து, சேர்ந்து ஆனது கவிதை
அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை

ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி

உனக்கே சமர்ப்பணம் இந்த ரசிகனின் பா
இந்த அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா