Saturday, September 25, 2010

இக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....

தமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்....

தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இது இந்த காலம்....

ஏதேனும் நல்ல கருத்தை தன் பாடல் வழியாக சொல்ல முயற்சிக்கும் கவிஞர்களை கூட, எதுவும் சொல்லாதே..... அர்த்தமற்ற வார்த்தைகளை போட்டு பாடலை எழுதி முடி.... நாங்கள் இசையால் அதை நிரப்பிக்கொள்கிறோம் என்று சொல்லி பாடல்களை எழுத வைத்து, இசையமைத்து, கண்ட மேனிக்கு படம் பிடித்து, ரிலீஸ் செய்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்... எப்படி அந்நாளில் பாடலில் வரிகளுக்கு முக்கியத்துவம் இருந்ததோ, அதே போல், இன்றைய சூழலில், பாடல் வரிகளுக்கான முக்கியத்துவத்தை அதிரடி இசை எடுத்துக்கொள்கிறது...

ஆனாலும் இன்றைக்கு சில நல்ல டைரக்டர்கள், நல்ல பாடலாசிரியர்களை கொண்டு, பல நல்ல பாடல்களை வழங்க முற்படுவதையும் காண்கிறோம்... வைரமுத்து, தாமரை போன்ற கவிஞர்கள் பல நல்ல பாடல்களை நம்மிடையே சமீப காலத்தில் படைத்ததை மறுப்பதற்கில்லை...

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படங்களில் பெரும்பாலும், பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி, ஆடியோ விற்பனையில் சாதனை படைப்பதை நாம் அறிவோம்... படத்தின் ஒரு சில பாடல்களின்றி, அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆகும்....... அவர் தம் படங்களின் பாடல்களில் நிறைய கருத்துக்களை சொல்வார்... அந்த கருத்துக்களை அடக்கிய பாடல்கள் பெரிய அளவில் மக்கள் மனதில் எடுபடுவதையும் நாம் கண்டிருக்கிறோம்... அப்படி ஒரு பாடலை பற்றியது தான் இந்த பதிவு.....

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் “பாட்சா” என்பதை உலகறியும்..... ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் “பாட்சா” படத்திற்கு உண்டு....

அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியிருந்தார்.... பிரமாதமான இசையை தேனிசை தென்றல் தேவா அவர்கள் வழங்கினார்....

இங்கே நாம் பார்க்கவிருப்பது அந்த படத்தில் வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய இந்த “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் எங்கேயோ, எப்போதோ படித்த ஒரு சித்தரின் சிந்தனையை வைரமுத்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, உடனே வைரமுத்து அவர்கள், அந்த கருத்தை ஒரு பாடல் எழுத, அதுவே பின்வரும் இந்த பாடல்....பாருங்களேன்....

ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல

இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல

நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல

ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல

எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல

************

அந்த காலத்தில் சித்தரின் மனதில் எழுந்த இந்த கருத்து, இதோ இங்கே பாடலாக தரப்பட்டுள்ளது....

இந்த பாடலும், அதன் கருத்தும், தற்போது இன்றைய நடைமுறைக்கு ஒப்பானதா? ஆம் என்றால் எப்படி?

உங்கள் கருத்தை சொல்லுங்களேன் தோழமைகளே!!