Sunday, February 14, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்

12.எங்கேயோ கேட்ட குரல் - 14.08.1982

மீண்டுமொரு முறை பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் அவர்கள் கூட்டணியில் வெளிவந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.. ரஜினி, அம்பிகா, ராதா இணைந்து நடித்த படம்... ரஜினி அவர்களின் அமைதியான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது... அதே நாளில் பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன்., கமல் கூட்டணியில் வெளிவந்த ஒரு மசாலா படம் பட்டையை கிளப்பியது... அது “சகலகலா வல்லவன்”.

13. மூன்று முகம் – 01.10.1982

மூன்று வேடங்களில் மூன்று முகமாய் மிகவும் வித்தியாசமான நடிப்பின் பரிமாணங்களை காட்டினார். துறவறம் பூண்டு தொடங்கும் பாந்தமான காமெடி நடிப்பு, பின் பொறி பறக்கும் அலெக்ஸ் பாண்டியன் என பரிமளித்து பின் பகுதியில் ஜான் என கலக்கிய படம். இதுவே பின்னர் ஹிந்தியில் "ஜான் ஜானி ஜனார்த்தன்" எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கொடி பறந்தது. குறிப்பாய் செந்தாமரைக்கும் ரஜினிக்கும் முட்டிக் கொள்ளும் காட்சிகள் தியேட்டரின் ஏகோபித்த ஆதரவு பெற்றது.

14. ஸ்ரீராகவேந்திரர் - 01.09.1985

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100வது படம்.... திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடனே மனதில் முடிவு செய்து வைத்திருந்தாராம்,.. இந்த வேடத்தை 100வது படத்தில் ஏற்பது.... குருநாதர் பேனரில் நடிப்பது என்று... அதற்காகவே, கே.பாலசந்தர் அவர்கள், எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் சொல்லி, இந்த படத்தை டைரக்ட் செய்ய சொன்னதான எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஒரு மேடையில் கூறினார்... கவிதாலயா தயாரிப்பு... எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன்... அருமையான இசை இளையராஜா... “அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்ப்பவன்”, ”ஆடல் கலையே தேவன் தந்தது”, தேடினேன் தேவ தேவா. தாமரை பாதமே” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மந்த்ராலய மகான் அவர்களின் காவியம் தமிழுக்கு கிடைத்தது...

15.படிக்காதவன் - 11.11.1985

கே.பி., எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை தொடர்ந்து ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த மற்றொரு டைரக்டர் ராஜசேகர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த “குத்தார்” படத்தின் தமிழ் ரீமேக்... நடிப்பின் இமயமும் நடிகர் திலகம் சிவாஜி இவரும் சேர்ந்து கலக்கி, மிகப் பெரிய வெற்றி. குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவியான டாக்சி டிரைவர், தம்பி சரியாக படிக்காமல், தீய வழியில் போவதை கண்டு வெம்பும் கதாபாத்திரத்தில் பின்னி இருப்பார்.. ஜோடி அம்பிகா.. 1985 தீபாவளிக்கு வெளியானது... இருவரின் நடிப்பும் வெகு பாந்தமாக வெளிப்பட்ட படமிது.. இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது...” இத்தனை அப்பாவியா என நாகேஷ் கேட்கும் காமெடிகளில் கச்சிதம். தம்பிக்கு என பாசம் கொட்டி, தன் வாழ்க்கையை அர்பணித்து விட்டு தம்பி உதாசினம் செய்து விட வெறுத்து ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் என பாடும் போது இதயம் நனையும். காமெடி யதார்த்தம் என இரு துருவங்களையும் இணைத்த பிரமிப்பு. ”ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்”, “ராஜாவுக்கு ராஜா நான்டா” “சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு” , “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.

16. தளபதி - 05.11.1991

ஜி.வி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு...டைரக்டர் மணிரத்னம் அவர்களுடன் முதலில் இணையும் படம்.. இளையராஜாவின் அதிரடி சூப்பர் ஹிட் இசை, வாலியின் வைர வரிகளில் பட்டையை கிளப்பிய பாடல்கள்... இது “தளபதி” படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த கூட்டணி..உயரிய இயக்கம், தேர்ந்த திரைக்கதை, குளு குளு ஒளிப்பதிவு என ரஜினியும் மம்முட்டியும் அதிரடியாய் நடித்தது. அரவிந்த்சாமி அறிமுகமான படம்..நட்பை கூட கற்பை போல் எண்ணுவேன் என கர்ணனாய் வாழும் கதாபாத்திரம்.மம்முட்டி ரஜினிக்கு இணையான படம் முழுதும் வந்து பாராட்டத்தக்க நடிப்பை தந்த படம்... ரஜினியின் பல பரிமாண நடிப்பை வெளிக்கொணர்ந்த படம்...

“ராக்கம்மா கைய தட்டு”, சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, காட்டுக்குயிலு மனசுக்குள்ள”, யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே”, ”சின்ன தாயவள் தந்த ராசாவே”, “மார்கழிதான் ஓடி போச்சு போகியாச்சு” என்று அனைத்து பாடல்களும் ஹிட் ஆன ஒரு படம் தான் “தளபதி”... 1991 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸ்... வெற்றி பெற்ற படம்..

17.மன்னன் - 14.01.1992

பி.வாசு.இயக்கத்தில், சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம்... ரஜினியின் அனைத்து பரிமாண நடிப்பும் வெளிப்பட்ட ஒரு படம்.. காதல், சோகம், அன்பு, பாசம், வீரம் என்று அனைத்து துறைகளிலும் ரஜினி சிக்ஸர் அடித்திருப்பார்... தாயை மதிப்பதில் மன்னன், சண்டி ராணியான மனைவி அடக்குவதில் மன்னாதி மன்னன். இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது.. அதிலும் கவிஞர் வாலி எழுதி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்... (இந்த பாடலை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளார் யேசுதாஸ் அவர்கள் தான் கட்டிய ஒரு கோயிலில்..) அம்மா என்றழைக்காத பாடலில் தன் தாயை நினைக்காத தமிழனே இல்லை என சொல்ல வைத்த பாடல். அடங்காத திமிர் பிடித்த பெண்ணாக விஜயசாந்தி ரஜினியுடன் போட்டி போட்டு நடித்து இருப்பார்... கவுண்டருடன் டிக்கிட்டு கவுண்டரில் அடிக்கும் லூட்டி எக்கச்சக்கம்.

18. அண்ணாமலை - 27.06.1992

ஆக்ரோஷமான ரஜினியை வெளிக்கொணர்ந்த, டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்த படம்.. தேவாவின் பட்டையை கிளப்பிய இசை, கலகல திரைக்கதை, உணர்வு பூர்வமான நடிப்பு என சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் செம தூள்.கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலயா தயாரிப்பாக வந்தது..

முதலில் டைரக்டர் வசந்த் இயக்குவதாக இருந்து, சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வந்தது..

இசையமைப்பாளர் தேவா முதன் முதலாம ரஜினி படத்திற்கு இசையமைத்த படம்... “கொண்டையில் தாழம்பூ” , “ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்”, வந்தேண்டா பால் காரன் அடடா, பசு மாட்ட பத்தி பாடப்போறேன்” (ரஜினியின் அட்டகாசமான அறிமுக பாடல்), “ஒரு பெண்புறா” போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த மாபெரும் வெற்றிப்படம்.. என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கியதில் முக்கிய பங்காற்றிய படம் என்று ரஜினியே சொன்ன படம் இது.

19.பாட்ஷா - 12.01.1995

சாந்தமான வம்புச் சண்டை எதற்கும் போகாத ஆட்டோக்காரன் என வலம் வந்து இடைவேளை வேளையில் ஆக்ரோஷமான அடிதடி ஆள் என உருமாறி அதகளப்படுத்தும் அற்புதமான நடிப்பு.

எழுத்தாளர் பாலகுமாரன் ரஜினிக்காக எழுதிய மறக்க முடியாத பஞ்ச் டயலாக் “ நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” மிடுக்காக அமைந்த படம்.

இதிலும், இசையமைப்பாளர் தேவாவின் இசை பெரிதும் பேசப்பட்டது... “ நான் ஆட்டோக்காரன்” (அட்டகாச அறிமுகப்பாடல்), “தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு”, “ அழகு, நீ நடந்தால் நடை அழகு” (இது ரஜினியின் தசாவதார பாடல்..... இந்த பாடலில் 10 அவதாரம் எடுத்து இருப்பார்), “ரா ரா ரா ராமையா” (இது சித்தர் சொல்லிய வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக வைத்து கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்) என்று தேவாவின் இசை ராஜாங்கம் நடந்த படம் இது...

ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கொடுத்து, அதன் பின்னர் போட்டுக்கோ என ஸ்வீட் பீடாவும் கொடுத்தது மாதிரி முழு திருப்தி தந்த படம். படம் மெகா ஹிட் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

20.சிவாஜி - 15.06.2007

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படம்.. இங்கிலாந்தின் பாக்ஸ் ஆஃபீஸ் யூ.கே.டாப்-10ல், 9வது இடம் பிடித்து, யூ.கே.டாப்-10 படங்களில் நுழைந்த முதல் தமிழ் படம் என்ற பெருமை பெற்றது... ஜூன் 2007ல் வெளிவந்த “சிவாஜி” செய்த சாதனை, இன்று (ஃபிப்ரவரி 2010) வரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது...... இந்திய படங்கள் என்றாலே பாலிவுட்டின் ஹிந்தி படங்கள் தான் என்று நினைத்திருந்த சர்வதேச திரைப்பட சந்தைக்கு, தமிழ் (கோலிவுட்) என்று ஒரு மார்க்கெட் உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய படம்..சர்வதேச சந்தைக்கு தமிழ் படத்தை கொண்டு சென்று, நினைத்துப் பார்க்க முடியாத வருவாயை ஈட்டி, தமிழ் படத்தை தரம் உயர்த்திய மைல்கல்.

இன்றைய தலைமுறையை ரசிக்க வைத்து அதிரடி, ஸ்டைல் என கலர்ஃபுல் கலக்கல். ரஜினி இன்னும் இவ்வளவு இளமையா, அழகா என ஆச்சர்யப்படவைத்த அற்புதம். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உலக அளவிலான வசூலில் மிக பெரிய சாதனை படைத்த படம்.... ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிதும் பேசப்பட்ட படம்...

அவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு எழுதியது இந்த பதிவு.

மொத்தமுள்ள 150கும் மேற்பட்ட ஒரு பட்டியலில் 20ஐ மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.

பட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே.


வணக்கம்

தோழமைகள் தங்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

Tuesday, February 9, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)

6. தப்புத் தாளங்கள் - 30.10.1978

இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய கதாநாயகரும் ஏற்க தயங்கும் ஒரு வித்தியாசமான ரவுடி கதாபாத்திரம்... வாழ்வது ஒரு விலைமாதுவுடன்.... சட்ட மீறல்களை அனாயாசமாய் செய்து கரவொலி வாங்கிய படம். சின்ன பட்ஜெட், கருப்பு வெள்ளை படம்... கமல் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்... கே.பாலசந்தர் டைரக்ட் செய்த படம்... நடிகை சரிதா அறிமுகமான படம்...
7. நினைத்தாலே இனிக்கும் - 14.04.1979
ஒரு ஆக்ரோஷமான அதிரடியான ஆக்‌ஷன் ஹீரோ என அங்கிகரிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் காமெடியில் இந்த அளவு கலக்குவாரா என ஆச்சர்யப்பட வைத்த படம். அதையும் கண்டுபிடித்தவர் அவரின் குரு நாதரே. தீபக் என்ற கதாபாத்திரத்தில், கண்ணில் பார்த்ததையெல்லாம் லவட்டும், கையில் டேப்பை வைத்து கனவுக் கன்னியை தேடும், சுண்டு விரலா, டொயோட்டா காரா என்று “பூர்ணம் விஸ்வநாதன் கேட்கும் கேள்விக்கு திணறல் போன்ற காட்சிகள் என அதிரடி அக்மார்க் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ரகம்.
அதுவும், உங்க தாடி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்று கீதா கூறும்போது, இந்தா எடுத்துக்கோ என்று தன் ஃப்ரெஞ்ச் தாடியை கழற்றி கொடுத்தல் என்று பளீர் நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பார் டைரக்டர் பாலசந்தர்.... இது ஒரு இன்னிசை மழை என்று விளம்பரப்படுத்தியது போல், படத்தின் அனைத்து பாடல்களும் தேன் விருந்து...
“எங்கேயும் எப்போதும்”, “சம்போ சிவசம்போ (இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியது), “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்”, இனிமை நிறைந்த உலகம் இருக்கு”, பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா, ஆனந்த தாண்டவமோ தாண்டவனார் ஆடுகின்றார்” போன்ற தேனினும் இனிய பாடல்கள் நிறைந்த நிஜமான “இசை மழை”யே இந்த படம்...

8. ஆறிலிருந்து அறுபது வரை - 14.09.1979

தன் குடும்பத்திற்காக தன்னையே உருக்கிக்கொள்ளும் மூத்த அண்ணன் கதாபாத்திரம்... உருக்கமான பல காட்சிகள் நிறைந்தது.. தம்பியாக எல்.ஐ.சி.நரசிம்மன் நடித்து இருப்பார்...உயிர் நண்பனாக “சோ” அவர்கள் நடித்த படம்.. “கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ” என்ற இனிய பாடல் உள்ள படம்... இசை இளையராஜா... மற்றுமொரு பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணி இணைந்து தந்த மாபெரும் வெற்றிப்படம்...

9. ஜானி - 15.08.1980
ஜானி என்ற நெகடிவ் கதாபாத்திரம் (கூட சுருளிராஜன் சாமிகண்ணுவுடன் இணையும் காட்சிகளில் படு லூட்டி...), வித்யாசாகர் என்ற முடி வெட்டும் சலூன் வைத்திருப்பவர் என்று இரு வேடங்களில் நடித்து இருப்பார்... இரு வேடங்களுக்கும் வித்தியாசம் காட்டும் வகையில் காட்சிகளை டைரக்டர் மகேந்திரன் அமைத்து இருப்பார்... ஒருவர் ஸ்ரீதேவியுடன் இணைந்து பல உருக்கமான காட்சிகள் நடித்து இருப்பார்.. அந்த பக்கம், தீபாவுடனான காட்சிகள் காமெடியாக இருக்கும்... இளையராஜாவின் இசையில் “காற்றில் உந்தன் கீதம்”, “என் வானிலே ஒரே வெண்ணிலா” போன்ற இனிமையான பாடல்கள் ஒலித்தன....
10.முரட்டுக்காளை - 20.12.1980

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிப்பில் தயாரிக்கப்பட்ட அன்பே வா
படத்தின் தயாரிப்பிற்கு பின், நீண்ட இடைவெளி விட்ட பொன்விழா கண்ட மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம்.அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கண்ட படம்... இந்த படத்திலும் இளையராஜா அவர்களின் இன்னிசையில் “பொதுவாக எம்மனசு தங்கம்”, “மாமன் மச்சான், ஏய்.. நீ தானே ஆச வச்சான்”, “எந்த பூவிலும் வாசமுண்டு” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.. இன்று பார்த்தாலும் தொய்வின்றி ரசிக்கக்கூடிய ஒரு படம் இது... ரயில் சண்டைக்காட்சி பெரிதும் பேசப்பட்டது... “சீவிடுவேன்” என்ற டயலாக், அதற்கு ரஜினி காட்டும் மேனரிஸம் பாராட்டத்தக்க வகையில் இருக்கும்...

11.தில்லு முல்லு - 01.05.1981

நகைச்சுவை அதிரடி சரவெடி... ரஜினி - தேங்காய் சீனிவாசன் அட்டகாச காம்பினேஷன்... தேங்காய் அவர்களை ஏமாற்ற ரஜினி போடும் இரு வேடங்கள் வேடங்கள் (அய்யம்பேட்டை, அறிவுடைநம்பி, கலியபெருமாள் சந்திரன்...அய்யம்பேட்டை, அறிவுடைநம்பி, கலியபெருமாள் இந்திரன்), அதன் தொடர்பான காட்சிகள் படு சூப்பராக இருக்கும்... ஆபாசமற்ற ஒரு முழு நீள நகைச்சுவை படம்... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” பாடல் சூப்பர் ஹிட்.. ஜோடியாக நடித்தவர் மாதவி... ரஜினியை வில்லனாகவே பார்த்த கே.பி.அவர்கள் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு ஒரு முழு நீள காமெடி ரோல் செய்ய வைத்த படம்...இந்த படம் தமிழில் வெளிவந்த நகைச்சுவை படங்களில் ஒரு “மைல்கல்” என்றால் அது மிகையல்ல.
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
(புகைப்படங்கள் உதவி : ரஜினிஃபேன்ஸ்.காம் மற்றும் பல இணைய தளங்கள்...)

Wednesday, February 3, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" என்றதுமே நம் எல்லோரின் மனத்திரையில் ஒரு "பாயும் புலி"யின் உருவம். நினைத்த மாத்திரத்திலேயே பரவசப் படுத்தும் பர்சனாலிட்டி. வேகம், சுறுசுறுப்பு, ஸ்டைல், திரையில் காட்டும் ஆளுமை, பெரும்பாலோரின் மனதை வசீகரித்த‌, கொள்ளை கொண்ட ஸ்டைலான நடிப்பு, என எல்லோரும் ரசிக்கும் திரை உலகின் வசூல் சக்ரவர்த்தி.

மொழி எனும் எல்லை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி (பாக்ய தேவதா... இதில் கமலஹாசன் அவர்களும் நடித்துள்ளார்) மற்றும் ஆங்கிலம் ("ப்ளட்ஸ்டோன்" என்ற ஒரு ஆங்கில படம்) உள்ளிட்ட 7 மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்திய நாட்டின் எல்லையையும் கடந்து, தமிழ் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்படையாத ஜப்பான் நாட்டில் அவர் நடித்த "முத்து" என்ற தமிழ் படம் 200 நாட்களுக்கு மேலாக பெரிய வசூலுடன் ஓடியதும், அதை தொடர்ந்து "சந்திரமுகி" படம் சக்கை போடு போட்டதும் கூட நம்மை வியப்படைய வைக்கும்.... ஜப்பானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் ("சந்திரமுகி" நூறு நாட்கள், பின்னர் வசூலில் பட்டையை கிளப்பிய "சிவாஜி தி பாஸ்") ஐரோப்பாவில் என கண்டங்களை கடந்து வசீகரிக்கிறார்.

1975 ஆம் ஆண்டு, தனது திரைப் பயணத்தை, ஒரு மிக சிறிய (ஆனால் பவர்ஃபுல்லான) வேடத்தில் ”அபூர்வ ராகங்கள்” என்ற படத்தில் அறிமுகமாகி 1985 ஆம் வருடம் (அதாவது 10 வருடங்களுக்குள்) தன் 100வது படத்தை எட்டினார்... சூப்பர் ஸ்டார் அவர்களை அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ரஜினி அவர்களை ஒரு வில்லனாகவே பார்த்து, அது போன்ற வேடங்களையே கொடுத்து வந்தார். ஒரு நாள் தான் ஒரு பெரிய வில்லனாக வரவேண்டும் என்று ஆசி வழங்குங்கள் என்று ரஜினி அவர்கள் கே.பாலசந்தர் அவர்களிடம் கேட்ட போது, ஏன் வில்லனாக, நீ ஒரு பெரிய ஹீரோவாக வருவாய் எனச் சொன்ன வாய் முகூர்த்தம் இன்று நிதர்சனமானது.

அவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு இதோ ஒரு பதிவு. தற்போதைய கணக்கின்படி, ரஜினி அவர்கள் நடித்த 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பிலிருந்து வெறும் 20 படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே ரஜினி அவர்களின் வெற்றியின் ரகசியம்.

பட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே.

1. மூன்று முடிச்சு - 22.10.1976

முக்கிய பாத்திரம், ஆனால் சற்றே முரண்பட்டதும் கூட, இது உனக்கு ஓகேதான் என்று கே.பி.அவர்கள் ரஜினியை வில்லனாக்கி ரசிக்க வைக்கும் நடிப்பு தந்தார்.. அவரது டீ.கே. ஒ.கே மிக பிரபலமாய் பேசப்பட்டது பட்த்தின் ஹைலைட். டைரக்டர் கே.பாலசந்தர்.அவர்கள் ரஜினியின் நடிப்பு மேல் வைத்த அந்த நம்பிக்கை தான், படத்தில் முழு நீள வேடத்தை பெற்று தந்தது.. ரஜினியும் தன் பங்குக்கு அட்டகாசமான “வில்லன்” நடிப்பை வாரி வழங்கி இருப்பார்... கமலுடன் போட்டி போடும் அந்த நடிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது....

2. புவனா ஒரு கேள்விக்குறி - 02.09.1977

வில்லனாகவே பார்க்கப்பட்ட ரஜினியை, ஒரு நேர் கதாபாத்திரத்திலும், பால் வடியும் முகத்துடன் நல்ல கதாபாத்திரங்களையே செய்து வந்த சிவகுமார் அவர்களை எதிர்மறையான வில்லன் வேடத்திலும் நடிக்க வைத்து பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன் கூட்டணி, விஷ பரீட்சை செய்த படம். ஆயினும், மக்கள் இருவரையும் ஏற்று கொண்டதில், படம் சூப்பர் ஹிட்... ”விழியிலே மலர்ந்தது” என்ற பாடல் சூப்பர் ஹிட்... இசை இளையராஜா...

3. 16 வயதினிலே - 15.09.1977

பரட்டை என பட்டையை கிளப்பிய நடிப்பு. சிறு வேடமே என்றாலும் ”இது எப்படி இருக்கு” என அவர் சொன்னதை நாம் ரசித்ததே பின்னர் பஞ்ச் டயலாக் எனும் பெயரில் விசுவரூபம் எடுத்தது. தியேட்டரிலிருந்து வெளிவந்த அனைவரும் சொன்ன டயலாக் “இது எப்படி இருக்கு”? இசை ராஜா இளையராஜாவின் கிராமிய இசையை பட்டி தொட்டி எங்கும் ரசிக்க வைத்தவர். தேசிய விருது பெற்ற எஸ்.ஜானகியின் இனிமையான குரலில் “செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்று” பாடல் காதில் இனிதாக கூவியது. ஸ்டுடியோவிற்குள் முடங்கிக் கிடந்த திரைப்பட குழுவை கிராமங்களின் வரப்புகளில் நடக்க வைத்த இயற்கையை அறிமுகமாக்கிய அறிமுக இயக்குனர் பாரதிராஜாவின் கை வண்ணம்.

4. இளமை ஊஞ்சலாடுகிறது - 09.06.1978

டைரக்டர் ஸ்ரீதர் - கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் வெற்றிக் கூட்டணி. கமலுக்கு இணையான முழு படத்தில் வரும் கதாபாத்திரம்... இந்த அளவு விட்டு கொடுத்தது கமல் அவர்களின் பெருந்தன்மை என்று ரஜினியே சொன்ன படம்... பாடல்கள் மெகா ஹிட்.. நண்பனாய் பின்னர் கூடப்பிறந்தவனாய் பழகியவன் தனக்கே துரோகம் செய்கிறானோ என வெகுண்டு எழுந்து, பின்னர் நிலை அறிந்து தியாகம் செய்யும் ஒரு ஸ்டைல் கேரக்டர். பேனா நீட்டி கையெழுத்திடும் ஸ்டைல் தியேட்டரின் கிளாப்ஸை அள்ளியது. பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.

5. முள்ளும் மலரும் - 15.08.1978

பிரபல எழுத்தாளர் “ரமணி சந்திரன்” அவர்கள் எழுதிய நாவல் தான் “முள்ளும் மலரும்” என்று வண்ணத்திரையில் திரைப்படமாய் விரிந்தது... ரஜினி அவர்களின் பாராட்டத்தக்க குணசித்திர நடிப்பு வெளிப்பட்ட படம்..

தங்கையின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் அண்ணன் - தங்கை கதை... பாசமலருக்கு இணையாக சொல்லப்பட்டது... படத்தை தயாரித்த வேணு செட்டியார் மறுத்த ஒரு பாடல், கமல் அவர்களின் தலையீட்டால், ஷூட் செய்யப்பட்டு, படத்தில் இடம் பெற்றது. அந்த பாடலே.... ”செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்ற சூப்பர் ஹிட் பாடல்.. இளையராஜாவின் இசை பாலு மகேந்திரா ஒளிப்பதிவு என பெரிதும் பேசப்பட்ட படம்... மகேந்திரன் டைரக்‌ஷனில் யதார்த்தமான படம்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

(ஒரு சிறு குறிப்பு : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1977 ஆம் ஆண்டு 15 படங்களிலும், 1978 ஆம் ஆண்டு 20௦ படங்களிலும் நடித்திருந்தார்... )

இன்னும் வரும்...............

Saturday, January 30, 2010

என்ன எழுதலாம்? -- தங்கள் மேலான ஆலோசனைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்

முதலில் ”மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்று அன்னிய தேசம் பற்றிய ஒரு தொடர் எழுதினோம். அந்த தொடரில் துபாய் பற்றியும் அதனோடு தொடர்புடைய வாழ்வின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் எழுதினோம்.

வாசக தோழமைகள் தந்த ஆதரவினால், அடுத்ததாய் ஏன் ”வாழ்க்கை” பற்றிய ஒரு தொடர் எழுதக்கூடாது என சிந்தனை சிறகடித்தது. அதன் தொடர்ச்சியாக பின் “வாழ்க்கை” என்ற தொடரும் 12 பாகங்களாக தோழமை அனைவரின் ஆதரவும் ஊக்கமும் பெற்று வெற்றிகரமாய் பதிவேறியது

இப்போது அடுத்தது என்ன எழுதலாம் என யோசிக்கும் வேளையில், தங்களின் மேலான ஆலோசனை கேட்கிறோம். அடுத்ததாய் என்ன எழுதலாம், எதை பற்றி எழுதலாம் என பின்னூட்டத்தில் ஆலோசனை சொல்லுங்களேன்.

தங்கள் மேலான கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Sunday, January 24, 2010

கலைஞரின் பரபரப்பான லேட்டஸ்ட் கின்னஸ் (!!??) கிச்சு கிச்சு........



நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கலைஞர் அவர்கள் அதிரடியாக ஒரு முடிவு எடுத்து செய்த செயல், நாட்டின் பல்வேறு பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தது.... .

தான் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பல நிகழ்த்த இருப்பதாகவும், தமிழர்களுக்கு எங்கு பிரச்சனை என்றாலும், உடனே இது போன்ற நிகழ்வுகள் தன்னால் அரங்கேற்றப்படும் என்றும் உடன்பிறப்புகளுக்கு “முரசொலி”யில் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது... அவருக்கு உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் பாராட்டுகளை அள்ளி குவித்த வண்ணம் உள்ளனர்.. (அய்யோ..........அய்யோ.....)

அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் செய்தி தொகுப்பு தான், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*************

சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ஜக்குபாய் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.படம் சிறப்பாக வந்திருப்பதாக சரத்குமார் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டினார்.

ஜக்குபாய் படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் வாங்க ஆளில்லாததால் இதோ அதோ என்று வெளியாக போக்குக் காட்டி வந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் பலருக்கு சம்பள பாக்கி வைத்துவிட்டதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலையில், படம் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டி.யாகவும் வெளியிடப்பட்டது.இதை வைத்தே பரிதாபம் தேடிக்கொள்ள முயன்ற சரத்- ராதிகா அண்ட் கோ, முடிந்த வரை இந்த விவகாரத்தை பெரிதாக்கியது.

முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந்நிலையில், 'ஜக்குபாய்' திரைப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரத்குமார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்த்தார்.

இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் அவருக்கென சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜக்குபாய் படத்தை கலைஞர் டிவிதான் வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

*****************

இந்த நிகழ்வின் மூலம், சரத் தன்னுடைய ச.ம.க.வை கலைத்து விட்டு, தி.மு.க.வோடு சங்கமம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை சரத்குமார் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கலைஞர் தெரிவித்தார்.... தமக்கு எப்போதும் சரித்திர புத்தகத்தின் நடுவில் உள்ள வெற்றிடத்தில் ஓர் குட்டி இடம் உள்ளதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்....

இது கின்னஸ் புத்தகத்தில் இந்த வருடத்தின் சிறந்த “நகைச்சுவை நிகழ்வு” என்ற தலைப்பில் தேர்வாக சாத்தியம் இருப்பதாகவும், கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைப்பதில் கலைஞர் வல்லவர் என்றும் எதிர் கட்சிகள் கூறுகின்றன...

Tuesday, January 12, 2010

பொங்கலோ பொங்கல்

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போட்ட பல வகை நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி
அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை இதமாய் பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பளீரென பிரகாசம் காட்ட

இருண்ட சூழல் விலகி வெளிச்சம் கூட்ட
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய

நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

அனைவரும் ஒன்று கூடி உரக்க கூவுவோம் -
"பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்"

Wednesday, December 30, 2009

சந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்

நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது...

அவரது ”ஆப்த மித்ரா” மனதில் நிறைந்தது, அதன் வெற்றியும் அதன் தமிழாக்கத்தில் அவரது ஆத்ம நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடைந்த வெற்றியும் அதன் சூழலும் மனதில் நிழலாடியது. கன்னடத்தில் "கில்லாடி கிட்டு", "கலாட்டா சம்சாரா" மற்றும் தமிழில் "விடுதலை", "ஸ்ரீ ராகவேந்திரர்" (சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100 வது திரைப்படம்) படங்களிலும் இணைந்த நிகழ்வும் மனதில் வருடோடியது. வருடத்தின் இறுதி பதிவில் சில சாதனைகள் பட்டியலிடும் போது, மனம் ஆக்கபூர்வமாய் ஆகும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இனிய மனங்கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைக்கும் அவர் தம் குடும்பத்துக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் “சந்திரமுகி”. ”மணிச்சித்ரதாழ்” என்ற மலையாள படத்தின் கன்னட பதிப்பான ”ஆப்தமித்ரா” விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி அடைந்திருந்த நிலையில், ரஜினிகாந்த், தமிழில் ரீமேக் செய்து நடித்த படம்... 2002௦ ஆம் ஆண்டில் வெளிவந்த “பாபா” படம் சரியாக வெற்றியடையாத நிலையில் 3 வருடங்கள் எந்த படமும் நடிக்காத நிலையில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டில் நடித்து “சந்திரமுகி” வெளிவந்தது...

”சந்திரமுகி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் சொல்லிய “நான் யானை இல்லை, குதிரை.... விழுந்தா சட்டென்று எழுந்துடுவேன்” என்ற டயலாக் ரொம்ப பிரசித்தம்…

இனி ”சந்திரமுகி” படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை ரீவைண்ட் செய்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... என்ன இருந்தாலும், பழைய நினைவுகளை அசைபோடுவது ஒரு தனி சுகம்தானே நண்பர்களே...

நாட்களாக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் படம் எடுக்காத நிலையில், ரஜினி அவர்கள் ராம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு, தயாரிக்க சொன்ன படம் தான் “சந்திரமுகி”.

தமிழில் 800 நாட்களுக்கு மேல் ஓடி, அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ்ப்படம்...

ஜப்பானிலும் பெரிய வெற்றியை ஈட்டிய படம்..

முதன் முதலாக இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு இசையமைத்த படம்.

ஜோதிகா (கிளைமாக்ஸ் காட்சியில் தன் கோழி முட்டை கண்ணை உருட்டி ”ரா ரா சரசக்கு ரா ரா” என்ற போது அரங்கே அதிர்ந்தது), வடிவேல் நடிப்பு (மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு டயலாக் கேட்டபோது ரசிகர்களின் கரகோஷம் பட்டாசாய் வெடித்தது) வெகுவாக பாராட்டப்பட்ட படம்.

ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...

படத்தின் தொடக்கத்தில் ரஜினி அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெறப்போகிறது... அதில், பாதிக்கு பாதி, அதாவது குறைந்தது 3 பாடல்களையாவது சூப்பர் ஹிட் பண்ணனும் என்று சொன்னதாகவும், அதற்கு வித்யாசாகர், ஏன் சார் 3 பாடல்கள், 6 பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கி காட்டுகிறேன் என்றதாகவும், ரஜினி அவர்கள் அதை நம்பாதது போன்ற ஒரு பார்வை பார்த்ததையும் வித்யாசாகர் ஒரு பேட்டியில் விவரித்தார்... பின்னர் படம் வெளிவந்து மகத்தான் வெற்றி பெற்ற நிலையில், ”சந்திரமுகி” வெற்றி விழாவில் ரஜினி அவர்களே இதை குறிப்பிட்டு தம்மை பாராட்டியதாகவும் தெரிவித்தார்...

ஆரம்பப்பாடலான “தேவுடா தேவுடா” ஒரு மெகா ஹிட் பாடல்... இந்த பாடல் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளர்களை உயர்வாக சித்தரித்தது...

“சாக்கடைக்குள் போயி, சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு

எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில்
தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!!”

கொக்கு பற பற, கோழி பற பற என்ற பட்டம் விடும் பாடல்...

இந்த பாடலின் ஆரம்பம் வெகு விளையாட்டாக இருக்கும்... ஆயினும், இடையில் சில கருத்துக்களை வெகு அழகாக சொல்லி இருப்பார்கள்...

“மீனாட்சி அம்மனை பார்த்தாக்க
கந்து வட்டியோட கொடுமைய போக்க சொல்லு
ஸ்ரீரங்கநாதர பார்த்தாக்க
தலைகாவேரிய அடிக்கடி வரச்சொல்லு”

கந்து வட்டிக்கு மதுரை பெயர் போனது என்பதும், காவிரி நீர் பகிர்வு ஒரு தீராத பிரச்சனை என்பதையும் நாம் அறிவோம்...

அத்திந்தோம், திந்தியும் தோம்தன திந்தாதிருந்தோம்...

இது மலையாள நாட்டுப்புற பாடலை சாயல் கொண்டிருந்த படம்... இந்த பாடலிலும், சில கருத்துக்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கும்...

“ஆறு மனமே ஆறு, இங்கு அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததை சேரு
அட... எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த ஆளே இல்லையம்ம்மா...”

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா


இந்த டூயட் பாடல், வெகு ரம்மியமாக படமாக்கப்பட்டிருக்கும்.... பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத ரஜினி, நயன்தாரா நடிப்பில் பாடல் வெகுவாக பிரபலமானது.... ஜோர்டான் நாட்டில் படமாக்கப்பட்டது என்று நினைவு... வெகு நாட்களுக்கு பிறகு ஹிந்தியின் மிக பிரபலமான பிண்ணனி பாடகி ஆஷா போஸ்லே, இசையமைப்பாளர் வித்யாசாகரின் விருப்ப பாடகர் மது பாலகிருஷ்ணனுடன் (இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது தெரியுமா??) இணைந்து பாடிய தமிழ் பாடல் இது... இந்த பாடலை பற்றிய இன்னொரு சுவையான தகவல்... சந்திரமுகி படத்திற்காக போடப்பட்ட பாடல் அல்ல இது... வித்யாசாகர் அவர்கள் வேறு ஒரு படத்திற்கு போட்ட இந்த ட்யூன், அந்த படத்தின் டைரக்டரால் நிராகரிக்கப்பட்டது... பின், அது வாசு/ரஜினி கூட்டணிக்கு இசைத்து காட்டப்பட்டு, ஓகேவாகி............ பின் நடந்தது எல்லாம் வரலாறு....

அண்ணனோட பாட்டு, ஆட்டம் போடுடா

இந்த வெகுஜனங்களை கவர்ந்த பாடல், பெரிய வெற்றியை பெற்றது... இந்த பாடலிலும், ரஜினி டச் இருக்கும்... பாருங்கள்...

“உள்ளம் தெளிவாக வை... எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும்
அது எனக்கு தெரியும், நாளை உனக்கு புரியும்
அஞ்சுக்குள்ள நாலை வை, ஆழம் பார்த்து காலை வை”

கிளைமாக்ஸ் பாடலான :

”ரா ரா, சரசக்கு ரா ரா”

யாராலும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்தது.... ஒரு தெலுங்கு பாடல், தமிழ்ப்பதிப்பில், முழுதாக இடம் பெற்று, பெரிய வெற்றியையும் பெற்றதை என்னவென்று சொல்வது... இதில் ரஜினியின் ட்ரேட் மார்க் வில்லத்தன நடிப்பு ”வேட்டையன்” என்ற கேரக்டரில் வெளியாகி வெகுவாக ரசிக்கப்பட்டது... அதிலும், குறிப்பாக அந்த குலை நடுங்க வைக்கும் “லக்க லக்க லக்க லக்க” டயலாக்... தியேட்டரில் பொறி பறந்ததை மறக்க முடியுமா?!!

இந்த படத்தின் இசை சேர்ப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், வித்யாசாகர் காரில் பயணித்து கொண்டிருந்த போது, சிக்னலில் அவர் காருக்கு பக்கத்தில் வந்து நின்ற ஒரு வாகனத்திலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி இவரை பார்த்து, சார், நீங்க வித்யாசாகர் தானே, சந்திரமுகி படத்தில் தலைவருக்கு அட்டகாசமா ட்யூன் போடுங்க என்று சொன்னதை ஒரு பேட்டியில் வித்யாசாகர் சிலாகித்து சொன்னார்... ரஜினி அவர்களின் ரீச் எந்த அளவு இருக்கிறது என்று மிகவும் வியப்புற்றதாக குறிப்பிட்டார்...

(பின்குறிப்பு : லக்க லக்க லக்க லக்க டயலாக் உருவான கதை ) :

ரஜினி அவர்கள் ஒரு முறை நேபாள நாட்டிற்கு சென்றிருந்த போது, கூட்டமாக மக்கள் ஒரு பெண்ணை அழைத்து (இழுத்து என்பதுதான் சரி) சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் லக்க லக்க லக்க லக்க என்ற ஒரு விநோத சப்தம் எழுப்பியதாகவும், அவர்களிடம் என்ன செய்கிறீர்கள், யார் இந்த பெண் என்று விசாரித்தபோது, அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், சிகிச்சைக்கு மந்திரவாதியிடம் அழைத்து / இழுத்து கொண்டு செல்வதாக கூறியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்... எங்கோ நேபாள நாட்டில் அவர் கேட்ட ஒரு விஷயம் ஒரு தமிழ் படத்தில் இடம்பெற்று, பின் அதுவே உலகளவில் அறியப்பட்டதையும் என்னவென்று சொல்வது!!??

ஆகவே.....நாம் அனைவரும் ஒன்று கூடி உரக்க சொல்லுவோம்... லக்க லக்க லக்க லக்க......

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியான 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........