இன்றைய ஜோருக்கு ஜோர் வி.ஐ.பி. நிகழ்ச்சியில் நாம் காணவிருக்கும் பிரபலம்... நடிகர், பாடகர், வசனகர்த்தா, திரைக்கதையாசிரியர், கவிஞர் என்ற பல்வேறு திறமைகளை ஒருங்கே உள்ளடக்கிய கலைஞானி கமல்ஹாசன் அவர்கள்..
வணக்கம் கமல் சார்...
இந்த நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் தங்களுக்கு என் வணக்கம்.... வந்தாரை வரவேற்கும் பண்பு எனக்கு என் முன்னோர்கள் கற்று கொடுத்தது.. அந்த நல்ல பண்பை தமிழ் திரையுலகமும் தொடர வழி வகுத்திருக்கிறது..
ஆகவே, இந்த இனிய மாலை பொழுதில் நாம் பல்வேறு தரப்பட்ட விஷயங்களை பற்றி உரையாட இருக்கிறோம்... இது சம்பிரதாயமான கேள்வி, பதில் நிகழ்ச்சியாக இல்லாமல், ஒரு உரையாடல் போல் இருந்தால், நான் மிகவும் மகிழ்வேன்...
அப்படியே செய்து விடுவோம் சார்... நாங்க எல்லாரும், எப்போவும், தெரிஞ்சுக்க ஆசைப்படற அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற "அப்பு" பத்தி ஏதாவது சொல்லுங்களேன்..
சொல்றேன்.. சின்ன வயசுல, எங்க வீட்டு பக்கத்துல ஒரு குட்டை இருந்தது... அதுல, "குப்பு"ன்னு ஒரு குள்ளமான பையன் வந்து, டைவ் அடிப்பான், நீச்சல் அடிப்பான், மீன்கள் பிடிப்பான்..பல சாகசங்கள் செய்வான்...
ஆனாலும், அவனை பார்க்கும் அனைவரும், கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பாதே என்று சொல்லி கேலி செய்வார்கள்...
அன்று முடிவு செய்தேன்...குட்டையானவர்கள் கெட்டவர்கள் இல்லை என்று நிரூபிப்பது என்று...
பின்னாளில், வெண்திரையில், அதை நிரூபித்தேன்... எனவே, அந்த அபூர்வ சகோதரர்கள் படமும், அதில் வரும் குள்ள "அப்பு"வும், உலகத்தில் உள்ள அனைத்து குள்ளர்களுக்கும் சமர்ப்பணம்...
இப்போது நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் "உன்னை போல் ஒருவன்" படம் பற்றிய ஒரு கேள்வி.. அது, நீங்கள் ஏற்கனவே நடித்து வெளிவந்த "எனக்குள் ஒருவன்" படம் போல் இருக்குமா?
உங்களின் முதல் கேள்வியே கோணலாக உள்ளது... இரண்டும் நான் நடித்த படங்கள் என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை... அவன் உன்னை போல், என்னை போல், நம்மை போல் ஒரு கோபமுற்ற இளைஞன் என்பதை தவிர ஒன்றுமில்லை.. நீங்கள் என்னை கோபமுற செய்யாமல் கேள்விகளை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
ஹ்ம்ம்...கந்தசாமி??
சிறு வயதில் எனக்கொரு தோழன் இருந்தான்... அவன் பெயர் கந்தசாமி... அவன் படிப்பில் சுட்டி... விளையாட்டில் கெட்டி... மொத்தத்தில் சிறு வயதில் எனக்கு போட்டி.
சார்... நான் கேட்க வந்தது விக்ரம் நடித்த "கந்தசாமி" படம் பற்றி...
ஓ... நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஆகவே, அதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை... படம் சிறப்பு காட்சி பார்த்தவர் ரஜினிதான். அதனால், இந்த கேள்வியை நீங்கள் ரஜினியிடம் தான் கேட்க வேண்டும்...
அஜித் நடிக்கும் "அசல்"??
அதை இயக்கும் சரண் என் நண்பர்... என்னை வைத்து வசூல்ராஜா எடுத்து அரங்குகளில் வசூலை அள்ளியவர்... மற்றபடி, எனக்கு அசலை விட "நகல்"தான் பிடிக்கும்... சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட எனக்கு ராவணன் பிடிக்கும் என்று சொன்னேனே..
வேட்டைக்காரன்?
புரட்சிதலைவர் நடித்த ஒரு மாபெரும் வெற்றிப்படம்... நான் சிறுவயதில் பார்த்து ரசித்த படம்... என் அபிமான நடிகை சாவித்திரி நடித்த படம்...
கமல் சார்... நான் கேட்க வந்தது விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்" பற்றி?
ஓ.... இது போன்று பழைய படங்களின் தலைப்பை புதிய படங்களுக்கு வைக்கும்போது குழப்பம் நேரிடுகிறது... அதை பற்றி சொல்வதற்கு சுவாரசியமாகவோ, புதிதாகவோ ஒன்றும் இருக்காது..
அவரின் முந்தைய படங்களான "குருவி" "வில்லு" படங்களின் கலவையாக தான் நான் பார்க்கிறேன்... ஒரு வாரம் ஓடும் என்று அவருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும் என்பது அவருக்கு தெரியும்...
இத நீங்க சொல்றதுக்கு காரணம், உங்கள் பழைய படங்களின் பெயரை மீண்டும் எந்த தயாரிப்பாளரும் வைக்க முன்வராததாலா??
ஏற்கனவே சொன்னதுபோல், நீங்கள் என்னை தொந்தரவு செய்வதில் குறிப்பாய் இருக்கிறீர்கள்... என் "மகராசன்", "மங்கம்மா சபதம்" பட டைட்டில்களை வையுங்களேன் என்றால் யார் கேட்கிறார்கள்.
நான் அள்ளி கொடுக்காவிட்டாலும், கிள்ளி கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன்.. இப்போதும் "மகராசன்" படம் ரீமேக் செய்யப்பட்டால், அதற்கு நான் பத்து நாட்கள் கால்ஷீட் தருகிறேன்...
"எந்திரன்"?
எனக்கு தேவர் சபையில் இருக்கும் இந்திரனை தான் தெரியும்... நான் நடித்த பழைய படம் "இந்திரன் சந்திரன்" தெரியும்... யார் இந்த எந்திரன்?
சார்.. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடிக்கும் படம் ... ஷங்கர் டைரக்ஷன்... பிரம்மாண்ட படம்...முதலில் கூட நீங்கள் நடிப்பதாக இருந்து, பின் அவ்வளவு பெரிய பட்ஜெட் உங்களை நம்பி யாரும் போடாததால், இப்போது ரஜினி நடிக்கிறாரே??
இல்லை.. இதில் எள்ளளவும் உண்மையில்லை... ரஜினியை வைத்து இயக்குமாறு ஷங்கருக்கு நானே பரிந்துரை செய்தேன்.. அதன் இரண்டாம் பகுதியை நானே இயக்கி நடிக்கும்போது உங்களுக்கு அந்த உண்மை புரியும்...
நீங்கள் நடித்த "நாயகன்" படத்தை ஜே.கே.ரிதீஷ் என்கிற நடிகர், தற்போதைய ராமநாதபுரம் எம்.பி. ரீமேக் செய்ததை பற்றி??
அது தமிழ் சினிமாவில் ஒரு கருப்பு அத்தியாயம்... அது பற்றி நினைத்தாலே என் மனம் குமுறுகிறது...
இன்றைய தமிழ் சினிமா?
அதற்கு ஆக்ஸிஜன் தருவதற்கு நான் பல வழிகள் வைத்துள்ளேன்... "உன்னை போல் ஒருவன்" பட ரிலீஸின் போது அதைப்பற்றி அறிவிப்பேன்... இப்போது எனக்கு நிறைய பணிகள் உள்ளது... பாரதி வருகிறேன் என்று அலைபேசியில் தெரிவித்தார்...பாரதி என்றால் பாரதிராஜா இல்லை... இவர் சந்தானபாரதி... கொஞ்சம் நீராகாரம் அருந்தும் பழக்கம் உள்ளவர்.. அப்படியே என் அடுத்த படம் பற்றி விவாதமும் நடைபெற போகிறது... பிறகு சந்திப்போம்...
சார்... அந்த புது படத்தை பற்றி....
சுருக்கமா, விளக்கி சொல்கிறேன்...படத்தோட பெயர் "உயரமாய் ஒரு குள்ளன்".. 2 அடி உயரத்துல இருக்கற ஒருத்தன், 3 அடி உயரம் இருப்பவனை பார்த்து ஏக்கம் கொள்கிறான்... அந்த 3 அடி குள்ளன், வேறு ஒரு 5 அடி உயரத்தில் இருப்பவனை பார்ப்பது போல் காட்சி வைத்து, அவன் இவனிடம், நீ 2 அடி உயரத்தில் இருப்பவனை பார்த்து ஆறுதலும், தேறுதலும் கொள் என்பது போன்ற ஒரு கருத்தை சொல்வதுதான் இந்த "உயரமாய் ஒரு குள்ளன்" படத்தின் கதை...
நன்றி வணக்கம்...