Wednesday, March 31, 2010

”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு

அலுவலக மீட்டிங்கில் தலை தகித்து கொண்டிருந்த வேளையில், ஒரு நெருங்கிய நண்பரிடம் இருந்து ஃபோன்.... அவசர மீட்டிங்கில் இருந்ததால் எடுக்க முடியவில்லை... மறுபடி மறுபடி நண்பர் முயற்சிக்கவே... மேட்டர் அர்ஜெண்ட் என புரிந்தது.

கிடைத்த இடைவேளையில் நாங்கள் நண்பரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் சொன்ன செய்தி, கோடான கோடி மக்களின் ஆதர்சன நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பேரை கேட்டதுமே சும்மா அதிருதில்ல” .... அந்த மாபெரும் நாயகனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பற்றிய தொலைபேசி அழைப்பு அது... உடனே சுறுசுறுப்பானோம்...

தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்திக்க சூப்பர் ஸ்டார் இசைந்திருப்பதாகவும், நாம் விரும்பினால் இணையலாம் என்றது அந்த செய்தி... மகிழ்ச்சிதான் என்றாலும் எல்லோருடன் இணைந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்தால், பெரிய அளவில் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், ஒரு தனி சந்திப்புக்கு ஏங்குவதாய் சொன்னோம்... பிறகு கூப்பிடுவதாக சொல்லி இணைப்பை துண்டித்தார்...

ஒரு வார இடைவெளியில் மீண்டும் நண்பர் அழைத்தார்... சூப்பர் ஸ்டாரின் உதவியாளரிடம் பேசி விட்டதாகவும், எங்களுக்காக 30 நிமிடம் ஒதுக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்... அந்த இனிய நாளை எதிர்பார்த்து காத்திருந்தோம்... அந்த நல்ல நாளும் வந்தது...

கார் இருந்தாலும், அதில் போய் இறங்கி பந்தா காட்ட விரும்பாததாலும், பார்க்கிங் பற்றிய பயம் வந்ததாலும், ஒரே ஒரு ஆட்டோ பிடித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி முன்னதாகவே ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை அடைந்தோம்... என்ன பேசுவது, எப்படி பேசுவது என விவாதம் விருட்சமாய் விரிந்தது. எந்தெந்த படங்கள் பிடிக்கும்... இப்படி எண்ணற்ற ரசிகர்களை வசீகரித்தது எப்படி?. திரையில் அவரை பார்க்கும் போதே உணர்ச்சி வசப்படுவோமே, எழுந்து நின்று, விசில் அடித்தும், கை தட்டியும் மகிழ்வோமே, இன்று இந்த முதல் நேரடி சந்திப்பை எப்படி எதிர்கொள்வோம் என பல எண்ணங்கள்.

உதவியாளர்... கல்யாண மண்டபத்தின் வாசலுக்கே வந்து எங்களை கைப்பிடித்து வரவேற்று அழைத்து சென்றார் ஒரு அறையில் அமர செய்து விட்டு, காஃபி தருவதற்கு ஏற்பாடு செய்தார்... அறையெங்கும் ஊதுவத்தி நறுமணம் ஸ்பீக்கர்களில் மெலிதாய் வழிந்த “ஓம்” என மிக ரம்மியமான் சூழல்......

சட்டென்று அந்த சூழல் பரபரப்பாக மாறியது... எங்களுக்குள் பல வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து “தலைவர்” வந்து கொண்டிருக்கிறார் என்று சேதி சொல்லி விட்டு சென்றது... அதோ... மண்டபத்தின் உள் அறையிலிருந்து “கருப்பு சூரியன்” வெளிவந்தது... அந்த இடமே ஜோதி கிளம்பி ஒளி பிரவாகமாயிற்று. அந்த தருணத்தை விவரிக்க வார்த்தையே இல்லை... எளிமையான ஒரு கதர் சட்டை, கதர் வேட்டி (கோடானுகோடி பேர் எதிர்பார்க்கும் அதே கெட்டப்தான்!!!) சீவிய சீப்புக்கு டிமிக்கி கொடுத்த சற்றே கலைந்த நிலையில் பரட்டை தலை, கூரிய பார்வை, முகமெங்கும் ஒரு அட்டகாச சிரிப்பு, நெருங்கி வந்து வாஞ்சையாய் கை பிடித்து, வணக்கம் சொன்னார்... சூப்பர் ஸ்டார்...

அவரது வேகம் தந்த பிரமிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை... எத்தனை கோடி பேர்களை அகிலமெங்கும் தன் வசிய நடிப்பால் கட்டிப்போட்ட இந்த மனிதர் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்கிறார் என்று!!! அந்த நிமிடத்தில் பேச்சே வரவில்லை...

எங்களின் உள்ளத்தை அப்படியே படித்த அவர், என்னங்க... பார்க்கணும், பேசணும்னு வந்துட்டு... அப்படியே சைலண்டா இருக்கீங்க, பேசறதுக்கு ஒண்ணுமே இல்லையா ஹா..ஹா..ஹா.. என்று அவரின் அக்மார்க் சிரிப்பை உதிர்த்தார்..

அப்படி எல்லாம் இல்ல தலைவா... நீங்க, ஷேவ் பண்ணாம, தாடி எல்லாம் வச்சு இருப்பீங்க.. அத பார்த்துட்டு, “என்ன தலைவா...லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்கீங்க”ன்னு சொல்லணும்னு நெனச்சுட்டே வந்தோம்... .. ஆனால், இப்போ நீங்க பளபளன்னு இருக்கீங்களா, அதான் என்ன சொல்றதுன்னே தெரியல என்றோம்.. .. மீண்டும் அவர் பாணி வெடி சிரிப்பு.....

என்னோட பஞ்ச் டயலாக் எடுத்து என் கிட்டயே விட பாத்தீங்களா என்று சொல்லி விட்டு உதவியாளரை அழைத்து குடிப்பதற்கு ஜில்லென்று மோர் தருமாறு கூறினார்...

சொல்லுங்க... உங்க பேர் என்ன... என்ன வேலை செய்யறீங்க... குடும்பம் பற்றி சொல்லுங்க என்று கனிவுடன் கேட்க நல்ல நட்புக்குறிய பாவனையில் தகவல் பறிமாறப்பட்ட்து.... கஷ்டப்படுறவுங்களுக்கு ஹெல்ப் பண்ணனும், அது பொருள் உதவி மட்டுமல்ல... ரத்த தானமாக இருக்கலாம், தெரிந்த நண்பர்களின் கம்பெனிகளில் ஒரு வேலையாக இருக்கலாம்...நாம் செய்யும் எந்த ஒரு செயலும், உதவியும், இந்த சமுதாயத்திற்கும், ஏழை எளியவர்களின் குடும்பங்களுக்கும் செய்யும் நல்ல விஷயமாக இருக்க வேண்டும் என சமூக பொறுப்புணர்ச்சியுடன் பேசினார்.

அவர் கூறிய அந்த விஷயங்களை ஏற்கனவே நடைமுறையில் வைத்துள்ளோம் என்று விளக்கி சொன்ன போது, பரவசமாகி வெரி குட்... இத தான் நான் எல்லா ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன்...

ஏன்னா..., எப்போதும் அடுத்தவர் வந்து உதவி செய்வார், வாய்ப்பு வீடு தேடி வரட்டும் என்று காத்திருக்காமல், சுற்று புறங்களில் இருந்தும், நண்பர்கள் மூலமும் வரும் வாய்ப்பை சட்டென்று பிடித்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலிதனம் என தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தினார்...

பின்..., நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு, சரி என்று நினைத்து அவரிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்று அனுமதி வேண்டினோம்...
அதற்கு ஓ...ஷ்யூர்... உங்க கேள்விங்க என்ன... சொல்லுங்க... என்றார்...

திரையுலகில் தாங்கள் அடைந்த பெரிய வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள், இந்த சாதனை தொடர்பாய் எங்கள் முதல் கேள்வி, எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், உங்களை மாதிரி ஒருவர் இந்த காலத்தில் முன்னேற என்னென்ன செய்ய வேண்டும்... கண் மூடி கேள்வியை உள்வாங்கி சட்டென்று சொன்னார்...

இந்த காலம்னு இல்ல... இந்த சினிமா இண்டஸ்ட்ரி தான்னு இல்ல... எந்த வேலைன்னாலும், எடுத்துட்ட வேலைல உங்களோட சின்சியர் அண்ட் டெடிகேட்டட் அப்ரோச் இருந்தா, அப்படி இருக்கற எல்லாருமே பெரிய அளவில சாதிக்க முடியும். அதிரடியாய் பதில் வருகிறது.

இந்த சாதனைகளின் அடுத்த படி என்ன, எதிர்கால திட்டம் என்ன, இதப்பத்தி கேட்டா ஏன் எப்போவும் வானத்த கை காட்டறீங்கன்னு கேட்டோம்... அதற்கு அவர்.... ஹா... ஹா...ஹா... என்று சிரித்த படி, எல்லாரும் கேக்கறது போதாதுன்னு இப்போ நீங்களுமா என்றவாறே...

இன்னிக்கு அரசியல் சூழல் நல்லால்ல... நாட்டுல பிரச்சனைங்க ஜாஸ்தி... தீவிரவாதம் மக்களை பயமுறுத்துது... மக்கள் சேவைங்கற ஒரு விஷயத்த சுத்தமா மறந்துட்டு எல்லாரும் அரசியல் பண்றாங்க... இந்த நிலையில நான் எதுவும் முடிவு எடுக்க முடியல... எனது திரைப் பிரவேசம் கூட இறை அருள்தான், அதான், எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இறைவனை கை காட்டறேன்... என்றார்...

எப்படி ஒவ்வொரு படத்திற்கு இந்தளவு எதிர்பார்ப்பு ஏற்றி விடுகிறீர்கள் என்றதற்கு, தாம் எதுவும் திட்டமிட்டு செய்வதில்லை, எல்லாம் அந்த ஆண்டவன் செயல் என்று வானத்தை காட்டினார்...

பின், டிஃபன் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பொங்கல், வடை, இட்லி, பல்வேறு விதமான சட்னி மற்றும் சாம்பார் என்று அசத்தல் டிஃபன் எங்களுக்கு பரிமாறப்பட்ட போது... சூப்பர் ஸ்டார் கையால் ஒரு கூடுதல் வடை பெறும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது... அவர் வெறும் வேக வைத்த காய்கறிகள் ஒரு கப் மட்டுமே சாப்பிட்டார்.. கூடவே ஒரு கிளாஸ் மோர்....

பேச்சு அவரின் மாபெரும் படமான “எந்திரன்” பற்றி திரும்பியது... ”எந்திரன்” படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் பற்றி குறிப்பிடும் போது... ஷீ ஈஸ் ய வெரி வெரி டேலண்டட் ஆக்ட்ரஸ்.... எல்லாரும் அவங்களோட அழகு மட்டும் பாக்கறாங்க... நாங்க இந்த படத்துல அவங்களோட நடிப்பை பார்த்தோம், க்ரேட் பெர்ஃபாமன்ஸ் என்றார்...

முந்தைய “சிவாஜி த பாஸ்” படத்தை பற்றிய சில விஷயங்களை சிலாகித்து சொன்னார்... அந்த பட ஷூட்டிங்கின் போது, தனக்கும் டைரக்டர் ஷங்கருக்கும் இடையே இருந்த நட்பு மிக நெருக்கமானதை நினைவு கூர்ந்தார்... எழுத்தாளர், வசனகர்த்தா சுஜாதா அவர்களின் எளிமை, மொழி ஆளுமை, திறமை பற்றியெல்லாம் பாராட்டி பேசினார்...

“எந்திரன்” படத்தின் வெற்றி வாய்ப்பு, அது செய்யப்போகும சாதனைகள் பற்றி கேட்டதற்கு ....” நான் நடிக்கற படத்தின் வெற்றியை பற்றி நீங்க தான் பேசணும், நான் எதுவும் பெருமையாக பேசக்கூடாது” என்று சொல்லி சிரித்தார்... ஆனால், எந்திரன் படத்தில் ஷங்கர் மற்றும் பல நூறு பேரின் கடுமையான உழைப்பு தெரியும் என்று கூறினார்...

நாம் அந்த படத்தை பற்றி கேட்கும் முன்னமே, நாம் யாரும் இதுவரை கேள்விப்படாத, ஏன் அது பற்றி யூகிக்க கூட முடியாத ஒரு விஷயம் நடந்தது.....

பக்கத்திலிருந்த பீரோவில் இருந்து எடுத்து ஒரு ஆல்பம் தந்தார்... அது “எந்திரன்” ஆல்பம்... பார்த்தோம்... புகைப்படங்கள் எல்லாம் அசத்தல் ரகம்... தலைவரும், ஐசும் தூள் கிளப்புகிறார்கள்... அதிலிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த நாம் திகைப்பின் உச்சிக்கே போனோம்... சட்டென்று இருக்கை விட்டு எழுந்தோம்...

அதை பார்த்து சிரித்தவாறே... படம் பார்க்கும் மக்களும் இந்த விஷயம் பார்க்கும் போது, இப்படி தான் பரபரப்பா தியேட்டர்ல எழுந்திருப்பாங்கன்னு சொன்னார்... ப்ளீஸ்... இந்த விஷயம்.... கொஞ்சம் பேருக்கு தான் தெரியும்... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க... அப்புறம் படத்த பத்தின சஸ்பென்ஸ் போயிடும் என்றார்... இசைந்தோம்... இதுவரை யாரிடமும் சொல்லவில்லை... ஏன் இந்த பதிவை படிக்கும், உங்களிடம் கூட....

இதுவரை ட்யூன் செய்யப்பட்ட 5 பாடல்களை இசைத்து காட்டினார்... அத்தனையும் சார்ட் பஸ்டர்ஸ் என்று அப்போதே கன்ஃபர்ம் ஆனது... அந்த 5 பாடல்களையும் இப்போது கூட முணுமுணுத்து கொண்டே தான் இந்த பதிவை எழுதுகிறோம்... அவரின் அடுத்த படம் பற்றிய பேச்சு எழுந்த போது, தன் கவனம் முழுதும் இப்போது “எந்திரன்” தான்... அடுத்து “சுல்தான் தி வாரியர்”... இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுக்கு பிறகு தான் எதுவும் பேச முடியும் என்று சொன்னார்...

எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடையும் தறுவாயில், கிளம்ப மனமின்றி சூப்பர் ஸ்டாரிடம் விடைபெற்ற போது, எங்கள் இருவர் கைகளிலும் ஒரு புத்தகம் திணிக்கப்பட்டது... (சூப்பர் ஸ்டாரின் குருநாதர் சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ‘பொன்னான நிகழ்காலம்’ என்ற புத்தகம் என்று நினைக்கிறோம்)....அந்த புத்தக கவர் இன்னும் பிரிக்கப்படவே இல்லை என்பதை தயவு செய்து நீங்கள் வெளியில் சொல்லி விடாதீர்கள்...

எங்கள் சந்திப்பு முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியே வரும்போது, டைரக்டர் ஷங்கர், ரஜினி அவர்களை சந்திக்க அவசரமாக உள்ளே சென்றார்... அவரிடம் ஒரு ஃபோட்டோகிராஃப் ப்ளீஸ் என்ற போது மறுத்த அவர், அட்லீஸ்ட் ஒரு ஆட்டோகிராஃப் ப்ளீஸ்ஸ்ஸ்...... என்றவுடன், குபீரென்று சிரித்து ஓகே என்றார்... அது இதோ..














............
............
............
............
............
............
............
............
............
............
............
.............

இவ்வளவு நேரம் இந்த பதிவை பொறுமையா படிச்ச நீங்க, இது “ஏப்ரல் 1” தேதிக்கான ஸ்பெஷல் பதிவுங்கறத மறந்துட்டா படிச்சு இருப்பீங்க!!??


(அதானே... இவிய்ங்க போறாங்களாம்... சூப்பர் ஸ்டார இண்டர்வியூ எடுக்கறாய்ங்களாம்... போயி பார்த்து ஒரு ஃபோட்டோ எடுத்தோம்னு சொன்னாவே நம்ப மாட்டோம்... இதுல இண்டர்வியூன்னு சொன்னா!!?? யப்பா எம்புட்டு புளுகறாய்ங்கப்பான்னு நீங்க எல்லாரும் கோரஸாக திட்டுவது எங்க காதுல விழவே இல்லை!!!??)

இந்த ஒலகம் இன்னுமா எங்கள நம்பிட்டு இருக்கு.... அய்யோ....அய்யோ....

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Monday, March 1, 2010

படமும் .... பதிலும்.... பின்னே பரிசும்

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி....

நற்றமிழ் கற்ற வலைக்குடி மக்களுக்கும், குடிமக்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு....

வலையுலக வேந்தன், மெகா மொக்கை பாண்டியனுக்கு ஒரு விடயத்தில் பெருத்த சந்தேகம்... இவர் டெரர்ரா... இல்லை டெரிபிக் டெரர்ர் வேற இருக்கா...

மெகா மொக்கை பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்க்கு பரிசு....

தண்டோரா.... பரிசுத் தொகை எவ்வளவு....

அமரர் சுஜாதாவின் அசத்தலான படைப்பு ஈ-ஃபார்மட்டில் (கண்டுபிடிப்பவரின் மெயிலுக்கு) அனுப்பி வைக்கப்படும்.....

அவ்வளவும் எனக்கே எனக்கு சொக்கா என்று விடையை தருமி மாதிரி மண்டபத்தில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாலும் சரி... நீங்களே கண்டுபிடித்தாலும் சரி...

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார்... என்ன ஊர், என்ன பெயர்... என்ன செய்கிறார்... என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

ஆகவே... குடிமக்களே படத்தை பார்த்து டெர்ரர் ஆகாமல் விடை (கூடவே உங்கள் மெயில் ஐடியும்) சொல்லி பரிசை வெல்லுங்கள்.

டிஸ்கி : நெத்தி கண்ண தொறந்தாலும் குத்தம் குத்தமேன்னு சீற நக்கீரர்களும் அரசவை புலவர்களும் இங்க நிச்சயமா இல்ல, அதனால தைரியமா பதிலை சொல்லி பரிசை பெறுங்கள்.