Saturday, November 12, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-4


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

திறம்பட தவம் செய்ய வேண்டுமென்றால் நல்ல குருவின் ஆசிர்வாதம் வேண்டும்... குருவினுடைய அனுக்கிரகம் இல்லாமல் தவம் செய்தல் எளிதல்ல.,.. குருவின் அன்பு இருந்து விட்டால், செய்யும் தவம் முழுமையடையும்... பலிதமாகும்...

குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும்... குறும்பு செய்கிற குழந்தையை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்... நம் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும்... என்னிடம் குறும்பு செய், என்னிடம் குறும்பு செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும்... குழந்தை கொலு பொம்மையை போல வைத்த இடத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமா? இது வியாதி அல்லவா? குழந்தை என்பது ஓடி ஆடி குறும்புகள் செய்தால் தான் குழந்தை... அந்தக் குழந்தை தான் பலமுள்ள, வளமுள்ள, வாலிபனாக வளர முடியும்... குறும்பு செய்யக்கூடாது என்று ஒரு குழந்தையை கட்டிப்போடுவதோ, அடிக்க கை ஓங்குவதோ, திட்டுவதோ மிகப் பெரிய முட்டாள்தனம்... பொறுப்பில்லாத தாயார் என்று அர்த்தம்... உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உனது குழந்தையை பற்றிய அக்கறை இல்லை என்று அர்த்தம்...

ஒரே இடத்தில் நின்றபடி நீண்டு நிமிர்ந்து மரமாக வளர்வது தவம் எனில், இப்படி ஆடுவதும் ஒருவகை தவம்கடவுள் அருகினில் இருக்கையில் எது செய்தாலும், அது தவமாகிறதுகடவுளுக்காக என்று எது செய்தாலும் அது தவமாகிறது

கடவுள் என்பவரின் அருகாமை, ஒரு குடும்பத்தை சந்தோஷமாக்கும்... மென்மேலும் பலமாக வளர்க்கும்....

பாம்பை கயிறென்று நினைத்தால் கயிறு... கயிறை பாம்பென்று நினைத்தால் பாம்பு... பார்க்கின்ற பார்வையில் தான் பார்க்கப்படும் பொருளின் குணம் இருக்கிறது...

இது வெறும் கயிறுதான் என்று பாம்பை தொட்டுவிட்டு, பாம்பு சீறிய பிறகு தான், அது கயிறு இல்லை, பாம்பு என்று அலறி தூக்கி வீசி விடத் தோன்றும்... எனவே, திடமாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், தெளிவாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்ப்பதற்கு திறன் இல்லாதவர்கள் அனுபவித்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்...

கர்வம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்... எப்போது வேண்டுமானாலும் வரும்... வீரமானவர்கள் எல்லாம் கர்வத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிற கதைகள் புராணங்களில் அதிகம் உண்டு...

உண்மையான மனது வருவதற்கு கடவுள் அனுக்கிரகம் தேவை... கல்வி உண்மையான மனதை கொடுக்க வேண்டும்... அதுதான் நல்ல கல்வி...

கல்வி கர்வத்தை கொடுக்குமெனில், தான் என்ற அகம்பாவத்தை கொடுக்கும் எனில், அது தவறான கல்வி...

நான் யார் தெரியுமா என்று எவரும் ஆடையை அவிழ்த்து காட்டுவதில்லை... அப்படி காட்டுவது அநாகரீகம், அசிங்கம்...

அப்படி தான் சொல்லி தரப்பட்டிருக்கிறது....

நான் என்கிற போது, அந்த நான் ஆடைகளோடும், அணிகலன்களோடும், படிய வாரிய கேசத்தோடும், புத்திசாலித் தனத்தோடும், செல்வத்தோடும், இன்னும் பிற விஷயங்களோடும் ஒட்டிக் கொண்ட்து தான் அந்த நான்..

ஆனால் படிப்பும் நீ அல்ல... பணமும் நீ அல்ல... இந்த உடம்பும் நீ அல்ல...

நான் என்று சொல்கிற அந்த விஷயம்.... இந்த உடம்பாக இல்லை... உடம்பாகவே அது இல்லை என்றால், உடம்பின் மீது உடுத்திக் கொண்ட ஆடையாக அது எப்படி இருக்கும்...

ஆடையையே உதற முடியவில்லை என்றால், உடம்பு என்னுடையது இல்லை என்று எப்படி உதற முடியும்?

ஆன்மா என்பதை பற்றி இருக்கிற உடம்பு ஒரு வேஷம் என்றால், உடம்புக்கு மேல் போட்டுக் கொண்டிருக்கிற உடை வேஷம் தானே... உன் பணம் வேஷம் தானே.... உன் படிப்பு வேஷம் தானே... உன் அதிகாரம் வேஷம் தானே... உன் வாள்பலம் வேஷம் தானே....

சிகையும், தலைப்பாகையும், மணியும், மாலையும், சடங்குகளும், ஆச்சாரமும், அனுஷ்டானமும் வேஷம் தானே...

மதச் சின்னங்கள் வேஷம் தானே....இத்தனை வேஷங்களை வைத்துக் கொண்டு நிர்குணமான கடவுளை எப்படி அறிந்து கொள்ள முடியும்? கடவுள் தேடுதலும் இங்கு வேஷமாக போய்விடும்... பொய்மை தான் முதலில் நிற்கும்...

பொய்மையுடைய ஒருவன் உண்மையை அறிந்து கொள்வது எப்படி? தன்னை அறிந்து கொள்வது எங்கனம்? உடை உடுத்துதலில், வாசனை திரவியத்தில், கவனமாக பேசுதலில், விதம் விதமாக ஆபரணங்கள் அணிவதில், உயர்ந்த கட்டிடங்களில் வாழ்வதில், என்று இவைகளை மதிக்க துவங்கிவிட்டால், உள்ளுக்குள்ளே இருப்பது என்ன என்று தெரியாது போய்விடும்...

இறக்கும் போது, உள்ளூக்குள்ளே இருப்பதை பற்றி அறிய முற்படும் போது வெறும் இருள் தான் சூழும்...

இருக்கும் போது சிறிய வெளிச்சத்தை கூட தேடாதவர், இறந்த பின்னர் ஞானியாகி விடுவாரா? காரிருளில் தான் மூழ்கி போவார்.....

தனக்குள்ளே மிளிருகின்ற அந்த நீர் ஓட்ட்த்தை, உயிர் சக்தியை, ஆன்ம பிரதிபலிப்பை, ஜீவனை அறியமுடியாதார், அறிய முயற்சி செய்யாதார் வாழ்ந்து எந்த பயனும் இல்லை...

மதுவை அருந்தியபடி, வேதம் சொல்ல முடியுமா... அப்படி வேதம் சொன்னால் யாரேனும் கேட்க முடியுமா?

இத்தனை உடைமைகளின் மீது ஆசை வைத்துக் கொண்டு எவர் ஒருவர் கடவுளைப் பற்றி விவாதிக்க முடியும், பேச முடியும்? அறைகூட முடியும் அல்லது மற்றவர்க்கு அறிவுறுத்த முடியும்?

உலக வாழ்க்கையின் போக்கியங்கள் எல்லாம் மயக்கமானவை…. மாயையானவை...

அந்த போகத்தில் ஒன்று ஆடை, மற்றவை அணிகலன்... இன்னொன்று, அதிகாரம்... இன்னொன்று உடல் வலிமை.. அவர், இவர் என்று பிரித்துக் கொள்கின்ற அகம்பாவத் தன்மை... எஜமான், அடிமை என்கிற இறுமாப்பு.

ஆடையையே களைய முடியாதவர், இவற்றை எல்லாம் ஒரு போதும் களைய முடியாது... இவைகளை களையாதவர் எவருக்கும் இறை தரிசனம் வெகு நிச்சயம் கிடைக்காது...

இந்த பரத கண்டத்தில் பல ஞானிகள் உடையைப் பற்றி கவலைப்படாமல், தலைமுடியை பற்றி கவலைப்படாமல், வீடு வாசல் பற்றி கவலைப்படாமல், கோமணதாரிகளாக, அழுக்குடையவர்களாக, நிர்வாணிகளாக, எந்த அலங்காரகும் அற்றவர்களாக தன்னை மறந்து திரிந்திருக்கிறார்கள்...

தன்னை அலங்கரிப்பதில் ஆசை கொண்ட எவரும் கடவுளை தொட முடியாது..

தன்னை அலங்கரித்து, தன் சிகை, தன் சிரிப்பு, தன் உடை, தன் பட்டு, தன் தங்கம் என்று மினிக்கிய அத்தனை பேரும் சோகப்பட்டு இருக்கிறார்கள்... அவமானப்பட்டு இருக்கிறார்கள்...

(இன்னமும் வரும்........)

3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிந்திக்க
நல்விருந்து.

Sivamjothi said...

நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும். வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு!
http://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_26.html

R.Gopi said...

மிக்க நன்றி

நிஜாமுதீன்

சிவம் ஜோதி

தொடர்ந்து படித்து கருத்து பகிருங்கள்....