என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம் - 9
தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...
நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ள விஷயங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்...
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் : தொடர்ச்சி.......
ஆசையின் உக்கிரத்தில்தான் பதட்டம்
ஏற்படுகிறது... பதட்டம்தான் கோபத்தினுடைய ஆணிவேர்... கோபம் கிளைவிட்டுப் பரவினால்,
அந்த நச்சுச்செடி பிறந்த இடத்தையும் அழித்து சுற்றுப்புற சூழ்நிலையையும்
நாசப்படுத்துகிறது... அந்த கோபத்தின் விளைவால் வஞ்சனை என்கின்ற இலைகளும், பொறாமை
என்ற கனியும் விளையும்... பொறாமை என்ற கனியினுடைய நடுவில் விதையாய் பழிவாங்குதல்
என்ற வெஞ்சினம் ஒளிந்திருக்கிறது... இந்தப் பழிவாங்குதல் மறுபடியும் நடப்பட்டால்
மீண்டும் கோபம் என்கிற விஷயம்தான் கிளறும்... இவை அனைத்திற்கும் ஆசையே... ஆசை
என்பதினுடைய ஆரம்பம் எது, நான் என்ற அகந்தை... எனக்கு என்கிற தன்மை...
மனித வாழ்க்கை சோதனைகள்
நிறைந்தது... சோதனைகளை சந்திப்பதற்காகவே
மனித வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது... சோதனைகளை முற்றிலுமாய் ஈடுபட்டு, புடம்
போடப்பட்டு, பொலிவாத மனிதன் கடைத்தேற வேண்டும் என்பது தான் கடவுளின் விருப்பம்...
பிறப்பெனும் மாயையில் சிக்காமல், ஆசையென்னும் வலையில் அகப்படாமல், தெளிவாகவும்,
உறுதியாகவும் இருக்க சோதனைகள் உதவுகின்றன... இறைவனுக்கு அணிகலமாக மாற்றப்பட வேண்டுமென்றால்
தங்கம் உருக்கப்படத்தான் வேண்டும்... தான் உடம்பு என்கிற நினைப்பில், தான் புத்தி
என்கிற நினைப்பில் வெவ்வேறு விதமான உருவகங்களை தான் எனக்கொண்டு தடுமாறியிருக்கும்
மனிதர்களை சோதனை நேரத்தில் தான் யார் என்று கேட்டுக்கொள்ள முயல்வார்கள்...
உண்மையாக கேட்டுக்கொண்டு, உண்மையாக விடை தேடுபவனுக்கு வெகு நிச்சயம் சரியான விடை
கிடைக்கும்..
கண்மூடி அமர்ந்திருந்து தன் சலனங்களைத்
தானே உற்றுப்பார்த்து தானும் தன் சலனங்களும் ஒன்றே என்ற முடிவுக்கு ஒரு மனிதன்
வருவதற்கு தவம் என்று பெயர்... சோதனைகளும் தவம் போல தான்... எனக்கு ஏன் இந்த
துன்பம் ஏற்பட்ட்து, எவரால் ஏற்பட்டது, இந்தத் துன்பத்திற்குக் காரணம் நானா,
வேறெவருமா என்று யோசித்து, நான் யார் என்ற இடத்திற்கு ஒரு மனிதன் நகருவான்
என்பதால் தான் சோதனைகள் மனித வாழ்க்கையில் தரப்படுகின்றன... தன்னை அறிந்தவனுக்கு
மரணம் இல்லை... மரணமில்லாப் பெருவாழ்வு என்பதை உடம்போடு வெகுநாள் வாழ்வதைச்
சொல்லவில்லை... மறுபடியும் பிறவாத நிலையையே மரணமில்லா பெருவாழ்வு என்று
சொல்கிறார்கள்...
ஆசையை அகற்றியவர், தெளிவும் உள்ளவர்,
எங்கும் பரவிய கடவுளின் தன்மையை தன்னுள் உணர்ந்தவர் மறுபடியும் பிறக்க மாட்டார்...
பிறப்பு இல்லையெனில் இறப்பும் இல்லை...
உண்மையிலேயே உருமாற வேண்டும்... உண்மையிலேயே கடைத்தேற வேண்டும்,
உண்மையிலேயே இந்த மாயையிலிருந்து விலகி இறைவன் பாதம் நோக்கி நகர்ந்து விட
வேண்டுமென்ற திடமான ஆசை உடையவர்கள் ஞானியை உறவாக மாற்றிக் கொள்வார்கள்....
ஒரு ஞானியை குருவாக அடைதல், தாய் தந்தையருக்கு இணையான உறவு குரு...
தெய்வத்திற்கு இணையான இடம் குரு... தெய்வம் கோபித்துக் கொண்டால், குரு
காப்பாற்றுவார்... குரு கோபித்துக் கொண்டால் தெய்வமும் காப்பாற்றாது..
ஆசை இல்லாதவர்க்கு வெகு அருகே சத்தியம் இருக்கிறது... சத்திய சொரூபமாக
இருப்பவன் தான் ஆசைகளை முற்றிலும் அகற்ற முடியும்....
பணிவோடு பேசினால் எதிர்ப்பக்கத்திலிருந்து பணிவான பதில் வரும்... அகங்காரமாக
பேசினால், அகங்காரத்திற்கு அகங்காரம் தான் பதிலாக கிடைக்கும்....
மனம் ஒரு அற்புதமான கருவி... மகான்களிடம் இந்தக் கருவி கூர்மையாகவும்,
செம்மையாகவும் இருக்கிறது... இந்த கருவியில் செய்ய இயலாத காரியங்களையெல்லாம் செய்ய
முடியும்...
இறையை அறிந்தவர்க்கு தான் என்ற கர்வம் ஒருக்காலும் வராது... ஏனெனில்
அவருடைய கைகள் இறைவனுடைய கைகள்... அவருடைய மனம் இறைவனுடைய சக்தியில்
தோய்ந்திருக்கின்ற மனம்... அவருடைய மனம் என்னும் கருவி தூய்மையாகவும்,
தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது... எனவே, எதையும் புரட்டிப் போடப்படும்... இயலாத்து
என்று எதுவும் சொல்லப்பட மாட்டாது..
பிரபஞ்ச சக்தியின் ஒரு திவலை தான் பிராணசக்தி... அந்த பிராணசக்தி
சலனமடைந்து உடல் எடுக்கிறது... உடல் எடுத்து வாழ்ந்த பிராணசக்தி உடலை விட்டுவிட்டு
மறுபடியும் பிரபஞ்ச சக்தியிடம் போவதே வழக்கமாக வைத்திருக்கிறது...
மகான்களுக்கு எல்லாரும் ஒன்று... எல்லா உயிர்களும் ஒன்று... உயர்வு,
தாழ்வு இல்லாத ஒரு பார்வை மகான்களிடம் இயல்பாய் பிறந்திருக்கிறது... தன்னை அண்டி
தனக்கு தொண்டு செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னைப் பற்றிக் கேலியாகவும்,
தூஷணையாகவும் பேசுகிறவர்களையும் கூட மகான்கள் அன்பாகவும், ஆதரவாகவும்
நடத்துகிறார்கள்.... அவர்களையும் ஆசிர்வதிக்கிறார்கள்... அவர்களுக்கும்
அருட்பிரசாதங்கள் கிடைக்கின்றன...
படிப்பு பக்குவமானதாய் உள்ளே போகாவிட்டால் கர்வம் கொடுக்கும்...
படிப்பு என்ற நெல்லிக்கனியை அனுபவரசத்தில் ஊற வைக்கா விட்டால் அது ருசி கெட்டுப்
போய் சுள்ளென்று பல்கூசப் புளிக்கும்... தொண்டையை பிடிக்கும்... தேனில் ஏறிய
நெல்லிக்கனி போல சுகமாக தொண்டைக்குள் இறங்காது. இந்தப்படிப்பு வெறும் புளித்த
நெல்லிக்கனி...
அதிகம் பேசுபவர்கள் அதிகம் செய்திகளை அறிந்திருப்பவர்களாக
இருப்பார்களே தவிர, அனுபவத்தில் திளைத்தவர்களாக இருக்க மாட்டார்கள்...
சில கால கட்டங்களில் மனிதருக்கு புத்தி கோணலாகி விடுகிறது... இறையை
சோதித்து பார்ப்பது என்பது இயல்பாகி விடுகிறது..
நாம் எல்லோரும் இணைக்கப்பட்டிருக்கிறோம்... இந்த பூமியிலுள்ள அத்தனை
உயிரினங்களும், பிரபஞ்ச சக்தியோடு இணைக்கப்பட்டிருக்கிறது... இங்கு தனியாக எந்தத்
துணையும் இல்லாமல் இருப்பதென்பது எதுவுமில்லை... ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு
உயிரையும் பின்னிப் பிணைந்து கொண்டுதான் இருக்கிறது... பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு
கொண்டுதான் இருக்கிறது.... இந்த தொடர்பைப் புறக்கணிக்கிறபோது, பிரபஞ்ச சக்தி
உங்களை கைவிட்டு விடுகிறது... நாம் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கிறோம்.... அதை
உறுதிப்படுத்திக் கொள்ள, இங்கு என்ன வேண்டுமோ அதை உடனடியாக அனுப்புகிறது...
ஹோமத்தால் எரிகின்ற தீயும், பொருட்களும் மழையை வரவழைக்கவில்லை...
போட்டவிதம் வரவழைக்க வைத்தது... நம் மனம் ஒன்று கூடி இறைவனை இறைஞ்ச, அந்த மனதின்
சக்தி இந்த ஹோமத்தீயின் வழியாக பிரபஞ்ச சக்தியைத் தொட்டு பஞ்ச சக்தி நெகிழ்ந்து,
இங்கு உங்கள் தேவைகளை உடனே நிறைவேற்றுகிறது... இந்த தொடர்பு எந்நாளும்
அறக்கூடாது...
நீங்கள் பிரபஞ்சத் தொடர்பை அறுத்துவிட்டு நகர்ந்தீர்கள் என்றால்
பிரபஞ்சமும் நகர்ந்து விடுகிறது... பிரபஞ்ச சக்தியின் அண்மை இல்லையெனில், இந்த
பூமி இல்லை... பூமியிலுள்ள உயிர்கள் இல்லை... எனவே, இடையறாது, சகலரோடும்
நல்லவிதமாகத் தொடர்பு கொள்ளலே வாழ்க்கை....
தேவர்கள் அக்னிமயமானவர்கள்... அவர்களுக்கு அக்னியால் தான் உபசாரம்...
அதன் வழியாகத்தான் உணவு... அதாவது நைவேத்யம்... பித்ருக்கள் ஜலமயமானவர்கள்...
அவர்களுக்கு ஜலம் வழியாகத்தான் உபசாரம்... ஜலத்தின் வழியாகத்தான் பிண்டம்...
மனிதர்கள் மண் மயமானவர்கள்... அவர்களுக்கு உணவு, மண்ணில் விளையும் பொருட்கள்தான்
ஆகாரமாகவும், உணவாக மாறுபவையாகவும் இருக்கின்றன....
எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகின்ற வேலையற்ற
வீணர்கள் இருப்பார்கள்... அவர்கள் தான் பிரிவு, பேதம் காட்டுவார்கள்... தான் மிகச்
சிறந்த மதவாதி என்று காட்டிக் கொள்ள மற்ற மதத்தை தண்டிப்பது ஒரு சாதாரண
தந்திரம்... தன் மதக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதற்குள் மூழ்குதலைவிட
எதிராளியைக் குறை சொன்னால்தான் நான் மிகச் சிறந்த மதவாதியாகத்
தோற்றமளிக்க்க்கூடும் என்று சொல்லப்படும் ஒரு யுக்தி... இந்தத் தந்திரசாலிகள்தான்
மதபேதங்களையும், கடவுள் பேதங்களையும் ஏற்படுத்துகிறவர்கள்...
(இன்னமும் வரும்.......)
1 comment:
பணிவோடு பேசினால் எதிர்ப்பக்கத்திலிருந்து பணிவான பதில் வரும்... அகங்காரமாக பேசினால், அகங்காரத்திற்கு அகங்காரம் தான் பதிலாக கிடைக்கும்..
ரச்னையான பகிர்வுகள்..
Post a Comment