Saturday, December 24, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-6


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் :

எது அறியப்பட முடியாதோ அதுவே நீ… எது அறிவினால் பகுத்தறிய முடியாதோ அதுவே நீ… எது எந்த செயலுமற்று வெறுமே உள்ளேயிருக்கிறதோ அதுவே நீ… எதற்குள் எந்த செயலுமற்று ஒரு விஷயம் இருக்கிறதோ அதுவே நீ… எல்லா உயிரினங்களிலும் இருப்பது எதுவோ அதுவே நீ…. இந்த பிரபஞ்சம் முழுவதையும் எது ஆக்ரமித்து கொண்டிருக்கிறாதோ அதுவே நீ…

நீ உடம்பல்ல… நீ மனமல்ல.. நீ புத்தியல்ல.. நீ பிரபஞ்ச சக்தி.. உன்னுள் இருப்பது எல்லாவற்றிலும் இருக்கிறது… யானையில், பூனையில், நாயில், எருமையில் எல்லாவற்றிலும் உன்னிலிருப்பதே இருக்கிறது…

தொடர்ச்சியாக நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கும்… காரணமின்றி காரியமில்லை… காரியம்தான் கண்ணுக்கு பட்டு மனதிற்கு சஞ்சலங்கள் தருகின்றனவே தவிர, துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி தருகின்றனவே தவிர, காரணம் பார்க்க சாதாரண மனிதனால் முடிவதில்லை… ஒவ்வொரு தெய்வீகப் பிறப்பிற்கு பின்னாலும் மிகச் சரியான ஒரு காரணம் இருக்கிறது…

உலகத்து மக்களுக்கு உதவி செய்தல், நல்லார்களுக்கு வழிகாட்ட, தீயவர்களை விலக்கி வைக்க இறை என்கிற சக்தி இடையறாது உத்தமர்களை உலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறது…

தனக்கு பின்னே ஒரு கூட்டம் கூடினால், தன்னை வாழ்க என்று வாழ்த்தினால் உடனே அவனுக்கு அடுத்தவர்களை அழவைக்கிற எண்ணம் வந்து விடுகிறது… நாம் எல்லாம் ஒன்று என்று சொல்வதற்காக, யார் வேறு என்று தேடும் புத்தி வந்து விடுகிறது…

தன்னுடைய கூட்டத்தை ஒன்றுபடுத்திக் கொள்வதற்காக எதிரியை கைகாட்ட வேண்டியிருக்கிறது… இவர்கள் மிக மோசமானவர்கள், இவர்களை அழித்து விடுங்கள் என்று நல்லவர்களை கை காட்ட அராஜகம் மிகுந்த அந்த அயோக்கியர்கள் வெறியோடு அவர்கள் மீது பாய, அப்போது கிடைத்த அல்பமான வெற்றிகளால் அவர்கள் இரும்பூ தெய்தினார்கள்…

இது இன்று வரைக்கும் நடக்கின்ற விஷயம்… தன்னுடைய வெற்றி, தன்னுடைய இருப்பு, தன்னுடைய வாழ்க்கை தன்னால் ஏற்பட்டதல்ல… அது விதியின் வசம்… விதி இறைவன் வசம் என்று புரியாத போது எல்லோரும் தடுமாறத் துவங்கி விடுகிறார்கள்…

திறந்து வைக்கப்படாத இதயம், என்ன என்று கேள்வி கேட்டுக் கொள்ளாத மனம் அழுகத் தொடங்கி விடும்… உள்ளிருந்து துர்நாற்றமும், துர்புத்தியும் தான் வெளியே வரும்… மூடிக்கிடந்த அறையிலிருந்து வெப்பமும், துர்நாற்றமும் வெளியே வருவது போல, மூடி விட்ட மனதிலிருந்து கோபமும், பொறாமைகளும் தான் உச்சமாக இருக்கும்…

எங்கும் எதுவோ இருந்தால் தானே இங்கே இயக்கம் என்பது சாத்தியமாகிறது… இங்கே எதுவும் இல்லாமல் இருந்தால், இயக்கம் சாத்தியமாகுமா?

மண் தான் தசை… நீர் தான் இரத்தம்… நெருப்பு தான் வயிற்று அமிலம்.. காற்று தான் மூச்சு. ஆகாயம் தான் இருதயத்திற்கு நடுவே இருக்கின்ற வெளி… அந்த ஆகாயத்தில் வெளி இருப்பதால் தான் ஹிருதயம் இயங்குகிறது… வெற்றிடம் இருப்பதால் தான் இரத்தம் உள்ளே பாய்கிறது… அது உள்ளே பாய்வதால் தான் இருதயம் விரிகிறாது… மறுபடியும் வெற்றிடம் ஏற்பட, மறுபடியும் இரத்தம் பாய்கிறது.

இறை உன்னிலும் மிகப் பெரியது… இறை உன்னிலும் மிக புத்திசாலியானது… இறை உன்னிலும் வலிமை மிக்கது… இறை உன்னிலும் எல்லாம் ஆற்றலும் கொண்ட்து… உன்னை அழிக்க வேறொரு இடத்தில் எதிரியைத் தோன்ற வைக்காமல் உன்னை அழிப்பதற்கு உன்னிலேயே ஒரு எதிரியை ஏற்படுத்தி விடுகிறது….

நாம் மரத்தின் ஒரு கிளை.. ஒரு சிறிய அங்கம்… வேர் கீழே மறைந்து கிடக்கிறது… என்னால் தான் மரம் இத்தனை அழகாக, வலுவாக இருக்கிறது என்று ஒரு கிளை சலசலத்தால், அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்…??

பயமுள்ளவன் எதைக்கண்டும் மிரளுவான்... எப்பொழுதும் மிரளுவான்... இடையறாக மிரட்சி தான் பயமுள்ளவர்களுக்கு இருக்கும்...

மனம் தான் வலியையும், வார்த்தையையும், வசதியையும் அனுபவிக்கிறது.. மனம் தான் நல்லதையும், கெட்டதையும் பிரித்துப் பார்த்து வேதனைப்படுகிறது... அதனால் தான் மனதை மாயை என்று சொல்கிறார்கள்... மனம் தான் தித்திப்பை சுகமென்றும், கசப்பை விஷமென்றும் பிரித்து வைத்துக் கொள்கிறது...

ஆனால், மனம் நினைத்தால் கசப்பைக் கூட சப்புக் கொட்டி சாப்பிடும்...

மனம் முழுவதும் இறை நிரம்பியிருப்பின், உடம்பினுடைய பாதகங்கள் பெரிதாகத் தெரியவே தெரியாது...

வந்து சேர்ந்த இடம் எத்தனை வளமானதாக இருந்தாலும், வாய்ப்பு வசதிகள் மிகுந்திருந்தாலும், பாதுகாப்பு பலமாக இருந்தாலும், சொந்த ஊரின் சுகம் ஒரு போதும் வரது... மனம், பிறந்து வளர்ந்த இடத்திற்குப் போக வேண்டி மிகவும் ஏங்கும்....

எலியை பூனை விரட்டினால், பூனையை நாய் விரட்டும்... அந்த நாயை எஜமானன் அடிப்பான்... இது விதி... எங்கும் இங்கு நிரந்தரமல்ல...

கடவுளை அறிவது எளிதல்ல... அதற்கு முயற்சி செய்வதே வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும்...

வாழ்க்கை என்பது ஆடலும், பாடலுமாகப் போய் விட்டது… உள்ளுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்திருக்க, தனித்திருக்க, வெறுமே கிடக்க கடவுளை உணரும் முயற்சியில் ஈடுபடவேயில்லை.. இடையறாது குதித்துக் குதித்து கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தால் என்ன வரும், கடும் பசி ஏற்படும்…. கடும் பசி ஏற்பட்டால் நிரம்ப தின்னத் தோன்றும்.. நிரம்பத் தின்றால் தூக்கம் தான் வரும்… ஆழ்ந்து தூங்கிய உடம்பு மதமதத்து ஆடும்… எல்லாச் சுகங்களும் தேடும்…

தன்னையறிதல் என்பது அங்கே செத்துப்போகும்… ஆழ்ந்த, அடர்ந்த அமைதி உள்ளுக்குள்ளே வரவே வராது... கலபரியந்தமும் குதித்துக் குதித்து, கத்திக் கத்தி, அலறி அலறி அவர்கள் வெறுமே செத்துப் போவார்களே தவிர, ஞானத்தின் வாசனை கூட மேலே படாது.

(இன்னும் வரும்............)

No comments: