Friday, January 6, 2012

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-7


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ள விஷயங்கள் படிக்க சுவாரசியமாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”பிருந்தாவனம்” - ஸ்ரீராகவேந்திரர் பற்றிய சரிதம் : தொடர்ச்சி.......

தன்னை அறியும் போது தான் செயல் மீது பிடிப்பு இல்லாமல் போகிறது... அப்பொழுது தான் எந்த செயலையும் தீவிரமாகவும், முழுமையாகவும், வேகமாகவும் செய்ய முடிகிறது.

அமைதியாக வீணை வாசிப்பது மிகக் கடினமான காரியம்... இடையறாக பயிற்சி, அந்தப் பயிற்சிக்குத் தேவை தனிமை... கடும் தனிமையிலிருந்து பயிற்சி செய்து தன்னை ஒரு பக்குவப்படுத்திக் கொள்ள பல வருடங்கள் தேவைப்படுகின்றன....

கடவுள் தேடல் மிக மிக கடினம்ஜென்ம ஜென்மமாய் பாடுபட்டால் தான் அது ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஈடேறும்முயற்சி பலிதமாகும்

கடவுள் தேடல் என்பது தன்னை அறிதல்.. தன்னை அறிதல் என்கிற விஷயத்தில் ஏகப்பட்ட மாயைகள் இருக்கின்றன.. அந்த மாயைகளை அகற்ற மிகக் கடுமையான ஒரு தனிமை தேவைப்படுகிறது

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது போல் சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவுமில்லை.. தன்னைப் போலவே ஒரு வாரிசு உருவாக்கல்வம்சவிருத்தி, தன் சாயலிலேயே ஒரு பிரதிமையை விட்டுப்போதல் என்கிற ஆனந்தங்கள் இருப்பினும் தன்னுடைய எதிர்காலத்திற்கு தனக்கு தள்ளாத வயது வந்த போது, தான் பலகீனப்பட்டு தடுமாறுகிற போது, தன் புத்தி பலம் இழக்கிறபோது, தன்னை தேற்றுக் காப்பாற்றி, ஆறுதல் சொல்லி, தன்னை அமைதியாக மரணத்தின் நேரத்தில் இருப்பதற்கு ஒரு மனிதனை இந்த பூமியில் கொண்டு வருவதே குழந்தைப் பெறுதலின் மிக அடிப்படையான நோக்கம்..…

தன் வாலிபத்தில் தன்னைச் சுற்றியிருந்த எவரும் தன் வயோதிகத்தில் உதவி செய்ய மாட்டான்தன் வயோதிகத்தில் உதவி செய்வதற்கு தன்னுடைய வாரிசுகள் தான் உதவும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறதுகுடும்பம் என்ற விஷயம் தோன்றுவதற்கும், இந்த வயோதிகத்தின் போது காப்பாற்றுதல் என்பது தான் காரணம்.. எனவே வெறுமே பெற்றெடுத்தல் என்கிற விஷயமில்லாத, தான் பெற்றதைப் பேணிக்காப்பது என்கிற விஷயத்தையும் மனிதன் பொறுப்பேற்று கொள்கிறான்.. தன்னை விட ஞானஸ்தனாக, வலிவுள்ளவனாக, செல்வந்தனாக, சிறப்பு மிக்கவனாக அந்த குழந்தை இருக்க வேண்டும் என்று பெற்றவன் ஆசைப்படுகிறான்

மகளின் திருமணம் முடிந்தவுடனேயே பல வயோதிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி ஏற்பட்டு விடுகிறது.. போதும் வாழ்க்கை என்று தோன்றி விடுகிறது... மகள் நன்றாக குடித்தனம் செய்கிறாள் என்பது தெரியவர, அவர் மனம் இன்னமும் விடுதலை அடைகிறது...

உண்மையாய் இருக்கிற எந்த சீடனை பார்த்தாலும் குருவுக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டு விடும்..

ஒரு விஷயத்தை எப்போது கற்றுக் கொள்கிறோமோ, அதனுடைய ஆணிவேர் வரை ஆராய்வது தான், அதை நன்கு புரிந்துக் கொண்டேன் என்று விளக்கி ஊருக்கு சொல்வது தான் உண்மையான படிப்பு..

கடும் உழைப்பு என்றும் பாராட்டப்படாமல் போனதில்லை...

குரு சிஷ்யனிடம் சொல்வது : எனக்கு சொல்லிக் கொடுத்த குருவுக்கு என்ன சன்மானம் வழங்குவது என்று திகைக்கிறாயா? சீடனே... உன் படிப்பு தான், உன்னுடைய படிப்பில் காட்டும் அக்கறை தான், அதில் ஏற்படும் தெளிவு தான் எனக்கு சன்மானம்...

இலவசமாக கொடுக்கும் படிப்பு இளக்காரமாக போகாதா?

ஆஹா... அது கற்றுக் கொள்பவர் புத்தி... இலவசமாகவே கிடைத்தது என்பதாலேயே காற்றும், மழையும், மரமும் இருக்காது போய் விடுமோ? சுவாசிக்காமல் நிறுத்தி விடுவோமா? தண்ணீர் குடிக்காமல் புறக்கணிப்போமா? மரத்தில் பழுக்கின்ற பழத்தை உண்ணாமல் ஒதுக்கி விடுவோமா? இதென்ன பேச்சு... கடவுள் அளித்த பல கொடைகளில் கல்வியும் ஒன்று... அது இலவசமாக தான் தரப்பட வேண்டும்... இலவசமாய் கிடைத்ததை யாரேனும் இளக்காரமாக நினைத்தாலும் நினைத்து விட்டு போகட்டும்... கல்வியை விற்பது என்று யார் முடிவு செய்தாலும், அது விற்பவருக்கு தான் இழிவு...

சித்தத்தில் தெளிவும், வாழ்க்கையில் நேர்மையும், சத்தியமும் கொண்டவர்களுக்கு வறுமை ஒரு முக்கியமான விஷயமல்ல... அவர் கொண்டுள்ள சத்தியம் அவரை எப்போதும் காக்கும்..

எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ, அங்கு சரியான அக்கறையும் இருக்கும்... அன்பும், அக்கறையும் இணை பிரியாதவை... நாம் அக்கறை காட்டி பிறரிடமிருந்து அன்பு பெருக்கெடுத்து ஓடிவரும்...

எந்த ஒரு தேசத்தில் தலைவன் தறிகெட்டு ஆடுகிறானோ, அவனால் அந்த தேசமும், அந்த தேசத்து மக்களும் மிகப்பெரிய துயரை அனுபவிப்பார்கள்.. கடவுள் மீது நம்பிக்கை இல்லாது ஒரு தலைவன் தோன்றினால் அவன் தான்தோன்றியாகத்தான் செயல்படுவான்.. தனக்கு தெரியும் என்று யோசிக்கிற தலைவன் ஆபத்தானவன்.. எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்திருக்காது... என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்கால திட்டங்களை அடுத்தவரோடு ஆராய்ச்சி செய்கிற தலைவனே அமைதியானவன்.. அவனே ஆரோக்கியமானவன்.. கடவுளையே இழிவுபடுத்துகிறவன், தனக்கு மீறி உள்ள சக்தியையே அலட்சியம் செய்கிறவன், கற்றவர்களை, மற்றவர்களை வெகு எளிதாக இழிவு செய்வான்...

கடவுளின் மீது அசைக்க முடியாத பிடிப்பு ஏற்பட்டால், தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்பதும்... தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டால், தினசரி வாழ்சில் ஒழுக்கம் ஏற்படும்... தினசரி வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டால், உள்ளுக்குள் அமைதி பொங்கும்... உள்ளுக்குள் அமைதி பொங்கினால், மற்றவரைப்பற்றி அறிவதும், தெளிவதும், மிகச் சிறப்பாக இருக்கும்... எல்லாம் எனக்கு தெரியும் என்கிற கர்வம் மிக்க நாத்திகம் எங்கு பரவுகிறதோ, அங்கு தினசரி வாழ்க்கை சீராக இராது....

கடவுள் என்கிற தன்னை மீறிய ஒரு சக்தியின் மீது எவருக்கு நம்பிக்கை இல்லையோ, நம்பிக்கையற்றவர் நாத்திகம் பேசியோ அல்லது ஆத்திகம் பேசுவது போல் நடித்தோ அழிவு செய்வார்கள்... கடவுள் மீது நம்பிக்கை உள்ளவருக்கு தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்படும்...இப்படி வைத்துக் கொள்ளுங்கள்... யார் தர்மமாக இல்லையோ அவர்கள் கடவுளைப்பற்றி நம்பவில்லை, அலட்சியமாக இருக்கிறார்கள்...

பானை என்று ஒன்று இருந்தால், குயவன் என்று ஒருவன் இருந்திருக்க வேண்டும்... மரத்தாலான ஆசனம் என்று ஒன்று இருந்தால், அதைச் செய்த தச்சன் ஒருவன் இருக்க வேணுமே... அது போல, உலகம் என்று ஒன்று இருந்தால், அதைப் படைத்தவனும் இருக்கத்தானே வேண்டும்.. உலகத்து ஜீவராசிகளான நாம் அந்த படைத்தவரை நோக்கி வணங்குவது தானே முறை.. இயல்பு,.. அது தானே மரியாதை... நமக்கு தச்சனை தெரியும், குயவனை தெரியும்...பார்த்திருக்கிறோம்... அதே போல் கடவுள் என்பதை நாம் பார்க்க ஆசைப்படுகிறோம்.. பார்க்க முடியவில்லை, எனவேதான், அது பற்றிய சந்தேகம் வருகிறது...

பானை செய்யும் குயவன், அதே போல் உலகத்தைப் படைத்த கடவுள் என்று ஒரு அனுமானம்.. அதாவது புகை எப்படி வருகிறது... நெருப்பு என்று இருந்தால் தானே புகை எழுகிறது. ஆகவே, வெகு நிச்சயமாக கடவுள் என்பவர் உண்டு... எங்கே, என்ன ரூபத்தில் என்றுதான் தெரியவில்லை.

குயவனையும், தச்சனையும் அறிமுகமாக்கிக் கொண்டது போல், நமக்கு காணக் கிடைத்தது போல கடவுள் என்பது காணக் கிடைக்கவில்லை... இது எல்லோர் கண்ணுக்கும் தெரியவில்லை... அதனால் தான் இது பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும், இந்த விவாதங்களின் தொடர்பாக மதமும் கிளர்ந்திருக்கின்றன...

பானை செய்தவன் குயவன் என்பதையும், நாற்காலி செய்தவன் தச்சன் என்பதையும் நாம் மறுத்ததுண்டோ...?

(இன்னமும் வரும்...........)

2 comments:

Dinesh said...

இப்பொழுதுதான் பிருந்தாவனம் புத்தகம் படித்து முடித்தேன். உங்கள் பதிவில் தொகுத்தவைகளை படித்ததில் சந்தோஷம்.

R.Gopi said...

வாங்க தினேஷ்...

பிருந்தாவனம் படித்தது எனக்கும் ஒரு அருமையான அனுபவம்...

பாலகுமாரன் அவர்கள் இன்னமும் இது போல் நிறைய எழுத வேண்டும் என்ற் ஆவலை தூண்டும் வகையில் இருந்தது...