
நட்பு, கற்பு இரண்டும் ஒன்றென அதுவும் தம்மென கொள்கை கொண்ட இரு நண்பர்கள்... மாலை வேளையில் பூங்காவினுள் காலாற நடந்து செல்வது அவர்களின் வாடிக்கை... கூடவே அங்கும், இங்குமாய் பார்த்து செல்வது வேடிக்கை... பகுத்தறிவு பசியும், பகிர்ந்து கொள்ளும் உத்வேகமும் அவர்கள்

பூங்காவில் புல், பச்சை பசேலென வளர்ந்து, நடக்கும் கால்களுக்கு கீழ் மெத்தை விரித்து இருந்தது. உடல் சோர்வு பாதங்களில் குறுகுறுப்பாய் குடியிருக்க, குளிர்ந்த மெத்து மெத்தென்றிருந்த புல் பாதங்களை லேசாய் முத்தமிட்டு வருடி விட, நேர்த்தியாய் நடந்த கால்களின் வலி நீங்கி... கால்களை பதித்ததும், உள்ளிழுத்தது...
சிறு வண்டுகளின் ரீங்காரம்...ஓங்காரமாய், ஏன் ”ஓம்”காரமாய் செவியை நிறைக்க, மனம் அந்த தாள லயத்தில் கிறுகிறுப்பாய் கிறங்கியது. நகரும் வாகனங்களின் சத்தம், அவை வெளியிடும் நச்சுப்புகை, நகர நெரிசல் என உணர்வுகளை பதம் பார்க்காத அமைதி அன்பாய் ஒழுகியது.
புதிதாய் பூத்த மெல்லிய பட்டு போன்ற பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது. சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...

தெற்கிலிருந்து வீசும் லேசான தென்றல் காற்று... சிலுசிலுவென அவர்களின் தேகத்தில் படர்ந்தது.
இருவரில் ஒருவர் கேட்கிறார்... வலி என்பது என்ன??
திகைத்து நின்ற மற்றவர், மிக உன்னதமான விசயத்தை எப்படி இவ்வளவு சாதாரணமாக கேட்கிறாய் என்றார். நிமிடங்கள் சில, மவுனத்தில் கரைந்தது. ஆழமான சிந்தனை என முகம் பறை அறைந்தது.
வலி இயலாமை. இனி மேல் முடியாது என உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு. தன்மையை இழந்து விடுவோமோ எனும் அச்சம். கூக்குரலிட்டு அதை அகற்ற வேண்டும் எனும் முயற்சியே வலி.
ஒவ்வொரு வார்த்தையும் இருமுறை படிக்க வேண்டி உள்ளதே. சுருங்க சொல்லி விளங்க வைக்க முயற்சிப்போமே. செய்வோம் நன்று...அதுவும் இன்று.. சொன்னதின் உண்மை புரிந்து லேசான புன்முறுவலில் ஆமோதிக்க, சம்பாஷனை தொடர்ந்தது.

வலி ஏற்றுக் கொள்ளும் தளத்தில் என பல வகைப்படும். உடல் வலி, மன வலி, உணர்வு வலி, இது தனி மனித வலிகள். சமூக வலி, மொழி வலி (அவிய்ங்க...இவிய்ங்க, லகர, ளகர சிதைத்த தொலைக்காட்சி தமிழும் - தமிழ் தாய்க்கும் வலி உண்டல்லவா... மன்னிப்பாளாக...) என புறமும் உண்டு.
உரத்த சிரிப்பில் நண்பர் தொடர்ந்தார். வலி நீக்கும் உபாயம் உண்டோ, கூறலாமே..?!!
நன்கு வலித்த நம் கால்களை, பச்சை பசும்புல் எவ்வளவு இதமாய் நீவி விட்டது.... அதுதான்...எப்படி வலி சாஸ்வதமோ, அதுபோல் வலி நீக்கியும் சாஸ்வதமே.
இருவரும் சிரிப்பில் இணைந்தனர். இதயம் இளகியது. காற்றில் அசைந்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்தது. பூக்கள் கூட்டமாய் இணைந்து கை தட்டியது...
தலையை லேசாக உயர்த்தி, மேலே அண்ணாந்து வானை நோக்கும்போல், ”சுட்டெரித்தவன்” மறைய தொடங்கி ”குளிர்விப்பவன்” வானில் லேசாய் எட்டிப் பார்க்க, அங்கே மெதுமெதுவாய் குளிர் படர தொடங்கியது.
(ஆர்.கோபி / லாரன்ஸ்)