Thursday, February 5, 2015
டேபிளார்
Sunday, February 12, 2012
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம் - 9
Friday, January 27, 2012
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம் - 8
துறவு என்றால் பணம், காசு, சௌகரியங்களை துறப்பது அல்ல... அகந்தையை துறப்பது... அகந்தையை ஒருவர் குடும்பத்திலிருந்து கொண்டு துறப்பது முடியாத காரியம்... குடும்பம் என்று இருப்பதாலேயே ஏற்படும் அகந்தையைத் துறக்கவே முடியாது... எனவே, அகந்தையை துறக்க, குடும்பத்தை துறப்பதும் முக்கியமாக கருதப்படுகிறது....
தான் என்ற அகங்காரம் கொண்டவர்கள் தான் தன் அகந்தையை அழிக்க முடியாமல் தன் உடம்பை அழித்துக் கொள்வார்கள்....
Friday, January 6, 2012
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-7
அமைதியாக வீணை வாசிப்பது மிகக் கடினமான காரியம்... இடையறாக பயிற்சி, அந்தப் பயிற்சிக்குத் தேவை தனிமை... கடும் தனிமையிலிருந்து பயிற்சி செய்து தன்னை ஒரு பக்குவப்படுத்திக் கொள்ள பல வருடங்கள் தேவைப்படுகின்றன....
கடவுள் தேடல் மிக மிக கடினம்… ஜென்ம ஜென்மமாய் பாடுபட்டால் தான் அது ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஈடேறும்… முயற்சி பலிதமாகும்…
கடவுள் தேடல் என்பது தன்னை அறிதல்.. தன்னை அறிதல் என்கிற விஷயத்தில் ஏகப்பட்ட மாயைகள் இருக்கின்றன.. அந்த மாயைகளை அகற்ற மிகக் கடுமையான ஒரு தனிமை தேவைப்படுகிறது…
ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பது போல் சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவுமில்லை.. தன்னைப் போலவே ஒரு வாரிசு உருவாக்கல்…வம்சவிருத்தி, தன் சாயலிலேயே ஒரு பிரதிமையை விட்டுப்போதல் என்கிற ஆனந்தங்கள் இருப்பினும் தன்னுடைய எதிர்காலத்திற்கு தனக்கு தள்ளாத வயது வந்த போது, தான் பலகீனப்பட்டு தடுமாறுகிற போது, தன் புத்தி பலம் இழக்கிறபோது, தன்னை தேற்றுக் காப்பாற்றி, ஆறுதல் சொல்லி, தன்னை அமைதியாக மரணத்தின் நேரத்தில் இருப்பதற்கு ஒரு மனிதனை இந்த பூமியில் கொண்டு வருவதே குழந்தைப் பெறுதலின் மிக அடிப்படையான நோக்கம்..…
தன் வாலிபத்தில் தன்னைச் சுற்றியிருந்த எவரும் தன் வயோதிகத்தில் உதவி செய்ய மாட்டான்… தன் வயோதிகத்தில் உதவி செய்வதற்கு தன்னுடைய வாரிசுகள் தான் உதவும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது… குடும்பம் என்ற விஷயம் தோன்றுவதற்கும், இந்த வயோதிகத்தின் போது காப்பாற்றுதல் என்பது தான் காரணம்.. எனவே வெறுமே பெற்றெடுத்தல் என்கிற விஷயமில்லாத, தான் பெற்றதைப் பேணிக்காப்பது என்கிற விஷயத்தையும் மனிதன் பொறுப்பேற்று கொள்கிறான்.. தன்னை விட ஞானஸ்தனாக, வலிவுள்ளவனாக, செல்வந்தனாக, சிறப்பு மிக்கவனாக அந்த குழந்தை இருக்க வேண்டும் என்று பெற்றவன் ஆசைப்படுகிறான்…
மகளின் திருமணம் முடிந்தவுடனேயே பல வயோதிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி ஏற்பட்டு விடுகிறது.. போதும் வாழ்க்கை என்று தோன்றி விடுகிறது... மகள் நன்றாக குடித்தனம் செய்கிறாள் என்பது தெரியவர, அவர் மனம் இன்னமும் விடுதலை அடைகிறது...
உண்மையாய் இருக்கிற எந்த சீடனை பார்த்தாலும் குருவுக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டு விடும்..
ஒரு விஷயத்தை எப்போது கற்றுக் கொள்கிறோமோ, அதனுடைய ஆணிவேர் வரை ஆராய்வது தான், அதை நன்கு புரிந்துக் கொண்டேன் என்று விளக்கி ஊருக்கு சொல்வது தான் உண்மையான படிப்பு..
கடும் உழைப்பு என்றும் பாராட்டப்படாமல் போனதில்லை...
குரு சிஷ்யனிடம் சொல்வது : எனக்கு சொல்லிக் கொடுத்த குருவுக்கு என்ன சன்மானம் வழங்குவது என்று திகைக்கிறாயா? சீடனே... உன் படிப்பு தான், உன்னுடைய படிப்பில் காட்டும் அக்கறை தான், அதில் ஏற்படும் தெளிவு தான் எனக்கு சன்மானம்...
இலவசமாக கொடுக்கும் படிப்பு இளக்காரமாக போகாதா?
ஆஹா... அது கற்றுக் கொள்பவர் புத்தி... இலவசமாகவே கிடைத்தது என்பதாலேயே காற்றும், மழையும், மரமும் இருக்காது போய் விடுமோ? சுவாசிக்காமல் நிறுத்தி விடுவோமா? தண்ணீர் குடிக்காமல் புறக்கணிப்போமா? மரத்தில் பழுக்கின்ற பழத்தை உண்ணாமல் ஒதுக்கி விடுவோமா? இதென்ன பேச்சு... கடவுள் அளித்த பல கொடைகளில் கல்வியும் ஒன்று... அது இலவசமாக தான் தரப்பட வேண்டும்... இலவசமாய் கிடைத்ததை யாரேனும் இளக்காரமாக நினைத்தாலும் நினைத்து விட்டு போகட்டும்... கல்வியை விற்பது என்று யார் முடிவு செய்தாலும், அது விற்பவருக்கு தான் இழிவு...
சித்தத்தில் தெளிவும், வாழ்க்கையில் நேர்மையும், சத்தியமும் கொண்டவர்களுக்கு வறுமை ஒரு முக்கியமான விஷயமல்ல... அவர் கொண்டுள்ள சத்தியம் அவரை எப்போதும் காக்கும்..
எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ, அங்கு சரியான அக்கறையும் இருக்கும்... அன்பும், அக்கறையும் இணை பிரியாதவை... நாம் அக்கறை காட்டி பிறரிடமிருந்து அன்பு பெருக்கெடுத்து ஓடிவரும்...
எந்த ஒரு தேசத்தில் தலைவன் தறிகெட்டு ஆடுகிறானோ, அவனால் அந்த தேசமும், அந்த தேசத்து மக்களும் மிகப்பெரிய துயரை அனுபவிப்பார்கள்.. கடவுள் மீது நம்பிக்கை இல்லாது ஒரு தலைவன் தோன்றினால் அவன் தான்தோன்றியாகத்தான் செயல்படுவான்.. தனக்கு தெரியும் என்று யோசிக்கிற தலைவன் ஆபத்தானவன்.. எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்திருக்காது... என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்கால திட்டங்களை அடுத்தவரோடு ஆராய்ச்சி செய்கிற தலைவனே அமைதியானவன்.. அவனே ஆரோக்கியமானவன்.. கடவுளையே இழிவுபடுத்துகிறவன், தனக்கு மீறி உள்ள சக்தியையே அலட்சியம் செய்கிறவன், கற்றவர்களை, மற்றவர்களை வெகு எளிதாக இழிவு செய்வான்...
கடவுளின் மீது அசைக்க முடியாத பிடிப்பு ஏற்பட்டால், தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்பதும்... தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டால், தினசரி வாழ்சில் ஒழுக்கம் ஏற்படும்... தினசரி வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டால், உள்ளுக்குள் அமைதி பொங்கும்... உள்ளுக்குள் அமைதி பொங்கினால், மற்றவரைப்பற்றி அறிவதும், தெளிவதும், மிகச் சிறப்பாக இருக்கும்... எல்லாம் எனக்கு தெரியும் என்கிற கர்வம் மிக்க நாத்திகம் எங்கு பரவுகிறதோ, அங்கு தினசரி வாழ்க்கை சீராக இராது....
கடவுள் என்கிற தன்னை மீறிய ஒரு சக்தியின் மீது எவருக்கு நம்பிக்கை இல்லையோ, நம்பிக்கையற்றவர் நாத்திகம் பேசியோ அல்லது ஆத்திகம் பேசுவது போல் நடித்தோ அழிவு செய்வார்கள்... கடவுள் மீது நம்பிக்கை உள்ளவருக்கு தர்மத்தின் மீது பிடிப்பு ஏற்படும்...இப்படி வைத்துக் கொள்ளுங்கள்... யார் தர்மமாக இல்லையோ அவர்கள் கடவுளைப்பற்றி நம்பவில்லை, அலட்சியமாக இருக்கிறார்கள்...
பானை என்று ஒன்று இருந்தால், குயவன் என்று ஒருவன் இருந்திருக்க வேண்டும்... மரத்தாலான ஆசனம் என்று ஒன்று இருந்தால், அதைச் செய்த தச்சன் ஒருவன் இருக்க வேணுமே... அது போல, உலகம் என்று ஒன்று இருந்தால், அதைப் படைத்தவனும் இருக்கத்தானே வேண்டும்.. உலகத்து ஜீவராசிகளான நாம் அந்த படைத்தவரை நோக்கி வணங்குவது தானே முறை.. இயல்பு,.. அது தானே மரியாதை... நமக்கு தச்சனை தெரியும், குயவனை தெரியும்...பார்த்திருக்கிறோம்... அதே போல் கடவுள் என்பதை நாம் பார்க்க ஆசைப்படுகிறோம்.. பார்க்க முடியவில்லை, எனவேதான், அது பற்றிய சந்தேகம் வருகிறது...
பானை செய்யும் குயவன், அதே போல் உலகத்தைப் படைத்த கடவுள் என்று ஒரு அனுமானம்.. அதாவது புகை எப்படி வருகிறது... நெருப்பு என்று இருந்தால் தானே புகை எழுகிறது. ஆகவே, வெகு நிச்சயமாக கடவுள் என்பவர் உண்டு... எங்கே, என்ன ரூபத்தில் என்றுதான் தெரியவில்லை.
குயவனையும், தச்சனையும் அறிமுகமாக்கிக் கொண்டது போல், நமக்கு காணக் கிடைத்தது போல கடவுள் என்பது காணக் கிடைக்கவில்லை... இது எல்லோர் கண்ணுக்கும் தெரியவில்லை... அதனால் தான் இது பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும், இந்த விவாதங்களின் தொடர்பாக மதமும் கிளர்ந்திருக்கின்றன...
பானை செய்தவன் குயவன் என்பதையும், நாற்காலி செய்தவன் தச்சன் என்பதையும் நாம் மறுத்ததுண்டோ...?
(இன்னமும் வரும்...........)
Saturday, December 24, 2011
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-6
Sunday, November 20, 2011
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5
தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...
நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :
இம்மாதிரியான பொருட்கள் எல்லாம் மக்களை அருகே ஈர்க்கும்... ஆனால், மிகப்பெரிய அவநம்பிக்கையை கொடுத்தவரைப் பற்றி ஏற்படுத்தும்.
இது மிகப்பெரிய கௌரவம் என்று செய்த அத்தனை பேரும் கேவலப்பட்டு இருக்கிறார்கள்...
தந்திரங்கள் செய்த அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்...
ஆனால் சத்தியமானவர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது...
தலைமுறை, தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் புகழ் போற்றிப் பாடுகிறது..
அவர் மலரடி பின் தொடர்கிறது.
கவர்ச்சிகரமான உடைகளை விட, தங்கத்தாலான உத்திராட்சங்களை விட, எண்ணெய் பூசிய தலைமுடியை விட “சத்தியம்” மிக கவர்ச்சிகரமானது...
இம்மாதிரியான யோகீஸ்வர்கள் எல்லா காலத்திலும் கொண்டாடப்படுகிறார்கள்..
ஒருவர் யாசகம் கேட்க போகும் போதே இல்லை என்று சொன்னாலும் மவுனமாக ஏற்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் வழிப்பறிக்கு போனால் இல்லை என்று சொல்வதற்கு கோபப்படலாம்... ஆத்திரப்படலாம்... வெட்டி கொன்று விடுவேன் என்று கத்தியை காட்டலாம்... ஆனால், பிச்சை எடுப்பதற்காக போய் விட்டு கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டார்கள் என்று யாரும் அழுவார்களா?
மறுப்புக்கு தயாராகத் தான் யாசகம் கேட்க போயிருக்க வேண்டும்... அப்படி போவது தான் யாசகம்...
பணிவு இருப்பின், அவமானம் ஒரு முக்கியமான விஷயமாக இருக்காது.
இல்லை, இல்லை என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தவனை நீங்கள் மனதார வாழ்த்தி விட்டு வந்திருப்பீர்கள், இப்படி வெம்பி அழ மாட்டீர்கள்...
பெண்களுக்கு நான்கு வித புருஷர்களால் (ஆண்களால்) துக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருக்கிறது... தகப்பனாலும், சகோதரனாலும், கணவனாலும், பிள்ளையாலும் துக்கம் உண்டு... இவர்களில் எவரேனும் ஒருவரால் பாதிக்கப்படாத பெண்களே இருப்பதில்லை...
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
”கல்லூரி பூக்கள்” நாவலின் வரிகள் :
ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புவது இயல்பு… இயற்கை… ஆனால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே விரும்ப வேண்டும்… ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதே ஒழுக்கம்…
சினிமாவில் அடிப்படையான விஷயமே ஆளுக்குத் தகுந்த சர்க்கரையான பேச்சு தான்… சினிமா என்பது பேசும் படம்… அங்குள்ளவர்கள் பேசத் தெரிந்தவர்கள்… பேசத் தெரிந்தவர்களே அங்கு ஜெயிக்க முடியும்.
வாழ்க்கையில் பாதிக்கு கடவுளை நம்பணும்… மீதிக்கு மனிதர்களை நம்பணும்… வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை… இருக்க வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால், சிலருக்கு இருக்கிறது… இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது…
நட்பை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கொடுக்கலாம்… நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு… இந்த உலகம் தழுவிய காதல்… நட்பில் உறவுச் சங்கிலி இல்லை… அன்பு சுமை இல்லை… முடிந்த போது, முடிந்த வரையில், முடிந்தவர்க்கு உதவி செய்வதே நட்பு..
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள்… ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு முகம் வெளியே வரும்..
வாழ்க்கையில் அதிகம் நடிப்பவர்க்கு தன் உண்மையான முகம் எதுவென்றே தெரியாமல் போகும்… தன் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கின்ற ஆவல் இல்லாமெலே போகும்….
காசு என்பது பொருட்கள், பொருட்கள் என்றால் சந்தோஷம்….
காசு என்பது அதிகாரம்…. அதிகாரம் என்றால் சந்தோஷம்..........
காசு என்பது பாதுகாப்பு… பாதுகாப்பு என்றால் சந்தோஷம்........
(இன்னமும் வரும்.....)
Saturday, November 12, 2011
என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-4
திறம்பட தவம் செய்ய வேண்டுமென்றால் நல்ல குருவின் ஆசிர்வாதம் வேண்டும்... குருவினுடைய அனுக்கிரகம் இல்லாமல் தவம் செய்தல் எளிதல்ல.,.. குருவின் அன்பு இருந்து விட்டால், செய்யும் தவம் முழுமையடையும்... பலிதமாகும்...
குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும்... குறும்பு செய்கிற குழந்தையை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்... நம் கண் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும்... என்னிடம் குறும்பு செய், என்னிடம் குறும்பு செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும்... குழந்தை கொலு பொம்மையை போல வைத்த இடத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமா? இது வியாதி அல்லவா? குழந்தை என்பது ஓடி ஆடி குறும்புகள் செய்தால் தான் குழந்தை... அந்தக் குழந்தை தான் பலமுள்ள, வளமுள்ள, வாலிபனாக வளர முடியும்... குறும்பு செய்யக்கூடாது என்று ஒரு குழந்தையை கட்டிப்போடுவதோ, அடிக்க கை ஓங்குவதோ, திட்டுவதோ மிகப் பெரிய முட்டாள்தனம்... பொறுப்பில்லாத தாயார் என்று அர்த்தம்... உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உனது குழந்தையை பற்றிய அக்கறை இல்லை என்று அர்த்தம்...
ஒரே இடத்தில் நின்றபடி நீண்டு நிமிர்ந்து மரமாக வளர்வது தவம் எனில், இப்படி ஆடுவதும் ஒருவகை தவம்… கடவுள் அருகினில் இருக்கையில் எது செய்தாலும், அது தவமாகிறது… கடவுளுக்காக என்று எது செய்தாலும் அது தவமாகிறது…
கடவுள் என்பவரின் அருகாமை, ஒரு குடும்பத்தை சந்தோஷமாக்கும்... மென்மேலும் பலமாக வளர்க்கும்....
பாம்பை கயிறென்று நினைத்தால் கயிறு... கயிறை பாம்பென்று நினைத்தால் பாம்பு... பார்க்கின்ற பார்வையில் தான் பார்க்கப்படும் பொருளின் குணம் இருக்கிறது...
இது வெறும் கயிறுதான் என்று பாம்பை தொட்டுவிட்டு, பாம்பு சீறிய பிறகு தான், அது கயிறு இல்லை, பாம்பு என்று அலறி தூக்கி வீசி விடத் தோன்றும்... எனவே, திடமாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், தெளிவாக பார்ப்பதற்கு பார்வை இல்லாதவர்கள், விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்ப்பதற்கு திறன் இல்லாதவர்கள் அனுபவித்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்...
கர்வம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும்... எப்போது வேண்டுமானாலும் வரும்... வீரமானவர்கள் எல்லாம் கர்வத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிற கதைகள் புராணங்களில் அதிகம் உண்டு...
உண்மையான மனது வருவதற்கு கடவுள் அனுக்கிரகம் தேவை... கல்வி உண்மையான மனதை கொடுக்க வேண்டும்... அதுதான் நல்ல கல்வி...
கல்வி கர்வத்தை கொடுக்குமெனில், தான் என்ற அகம்பாவத்தை கொடுக்கும் எனில், அது தவறான கல்வி...
நான் யார் தெரியுமா என்று எவரும் ஆடையை அவிழ்த்து காட்டுவதில்லை... அப்படி காட்டுவது அநாகரீகம், அசிங்கம்...
அப்படி தான் சொல்லி தரப்பட்டிருக்கிறது....
நான் என்கிற போது, அந்த நான் ஆடைகளோடும், அணிகலன்களோடும், படிய வாரிய கேசத்தோடும், புத்திசாலித் தனத்தோடும், செல்வத்தோடும், இன்னும் பிற விஷயங்களோடும் ஒட்டிக் கொண்ட்து தான் அந்த நான்..
ஆனால் படிப்பும் நீ அல்ல... பணமும் நீ அல்ல... இந்த உடம்பும் நீ அல்ல...
நான் என்று சொல்கிற அந்த விஷயம்.... இந்த உடம்பாக இல்லை... உடம்பாகவே அது இல்லை என்றால், உடம்பின் மீது உடுத்திக் கொண்ட ஆடையாக அது எப்படி இருக்கும்...
ஆடையையே உதற முடியவில்லை என்றால், உடம்பு என்னுடையது இல்லை என்று எப்படி உதற முடியும்?
ஆன்மா என்பதை பற்றி இருக்கிற உடம்பு ஒரு வேஷம் என்றால், உடம்புக்கு மேல் போட்டுக் கொண்டிருக்கிற உடை வேஷம் தானே... உன் பணம் வேஷம் தானே.... உன் படிப்பு வேஷம் தானே... உன் அதிகாரம் வேஷம் தானே... உன் வாள்பலம் வேஷம் தானே....
சிகையும், தலைப்பாகையும், மணியும், மாலையும், சடங்குகளும், ஆச்சாரமும், அனுஷ்டானமும் வேஷம் தானே...
மதச் சின்னங்கள் வேஷம் தானே....இத்தனை வேஷங்களை வைத்துக் கொண்டு நிர்குணமான கடவுளை எப்படி அறிந்து கொள்ள முடியும்? கடவுள் தேடுதலும் இங்கு வேஷமாக போய்விடும்... பொய்மை தான் முதலில் நிற்கும்...
பொய்மையுடைய ஒருவன் உண்மையை அறிந்து கொள்வது எப்படி? தன்னை அறிந்து கொள்வது எங்கனம்? உடை உடுத்துதலில், வாசனை திரவியத்தில், கவனமாக பேசுதலில், விதம் விதமாக ஆபரணங்கள் அணிவதில், உயர்ந்த கட்டிடங்களில் வாழ்வதில், என்று இவைகளை மதிக்க துவங்கிவிட்டால், உள்ளுக்குள்ளே இருப்பது என்ன என்று தெரியாது போய்விடும்...
இறக்கும் போது, உள்ளூக்குள்ளே இருப்பதை பற்றி அறிய முற்படும் போது வெறும் இருள் தான் சூழும்...
இருக்கும் போது சிறிய வெளிச்சத்தை கூட தேடாதவர், இறந்த பின்னர் ஞானியாகி விடுவாரா? காரிருளில் தான் மூழ்கி போவார்.....
தனக்குள்ளே மிளிருகின்ற அந்த நீர் ஓட்ட்த்தை, உயிர் சக்தியை, ஆன்ம பிரதிபலிப்பை, ஜீவனை அறியமுடியாதார், அறிய முயற்சி செய்யாதார் வாழ்ந்து எந்த பயனும் இல்லை...
மதுவை அருந்தியபடி, வேதம் சொல்ல முடியுமா... அப்படி வேதம் சொன்னால் யாரேனும் கேட்க முடியுமா?
இத்தனை உடைமைகளின் மீது ஆசை வைத்துக் கொண்டு எவர் ஒருவர் கடவுளைப் பற்றி விவாதிக்க முடியும், பேச முடியும்? அறைகூட முடியும் அல்லது மற்றவர்க்கு அறிவுறுத்த முடியும்?
உலக வாழ்க்கையின் போக்கியங்கள் எல்லாம் மயக்கமானவை…. மாயையானவை...
அந்த போகத்தில் ஒன்று ஆடை, மற்றவை அணிகலன்... இன்னொன்று, அதிகாரம்... இன்னொன்று உடல் வலிமை.. அவர், இவர் என்று பிரித்துக் கொள்கின்ற அகம்பாவத் தன்மை... எஜமான், அடிமை என்கிற இறுமாப்பு.
ஆடையையே களைய முடியாதவர், இவற்றை எல்லாம் ஒரு போதும் களைய முடியாது... இவைகளை களையாதவர் எவருக்கும் இறை தரிசனம் வெகு நிச்சயம் கிடைக்காது...
இந்த பரத கண்டத்தில் பல ஞானிகள் உடையைப் பற்றி கவலைப்படாமல், தலைமுடியை பற்றி கவலைப்படாமல், வீடு வாசல் பற்றி கவலைப்படாமல், கோமணதாரிகளாக, அழுக்குடையவர்களாக, நிர்வாணிகளாக, எந்த அலங்காரகும் அற்றவர்களாக தன்னை மறந்து திரிந்திருக்கிறார்கள்...
தன்னை அலங்கரிப்பதில் ஆசை கொண்ட எவரும் கடவுளை தொட முடியாது..
தன்னை அலங்கரித்து, தன் சிகை, தன் சிரிப்பு, தன் உடை, தன் பட்டு, தன் தங்கம் என்று மினிக்கிய அத்தனை பேரும் சோகப்பட்டு இருக்கிறார்கள்... அவமானப்பட்டு இருக்கிறார்கள்...
(இன்னமும் வரும்........)