Wednesday, November 2, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-3


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

நிலம் என்ற ஒன்று செழிப்பாக இருக்க வேண்டுமென்றால், நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டும்... நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டுமென்றால், மலை என்ற ஒரு உயர்ந்த விஷயம் ஒன்று இருக்க வேண்டும்....

உயர்ந்த மலை ஒன்று இருந்தால் தான் வேகமாக காற்று வீசும்... அந்த காற்று தான் பனியாக மாறும்... குளுமையாக நிற்கும்... அந்த குளுமை சூரியக் கதிரின் வெப்பம் பட்டு உருகி சொட்டு சொட்டாய் வழிந்து ஒன்று கூடி சிறு நதியாகி, அந்த சிறிய நதிகள் ஓரிடத்தில் ஒன்றாகி பெரு நதியாகி புரண்டு அடித்துக் கொண்டு சமவெளி நோக்கி ஓடும்...

நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற இந்த நான்கும் இயங்க வேண்டுமென்றால் வெளி என்ற ஒரு விஷயம் இருந்தே ஆக வேண்டும்...

இடைவெளி இருந்தால் தான் ஒன்றோடு ஒன்று கலக்க முடியும்... இந்த பூமியில் இந்த நதி இப்படி சமவெளி நோக்கி பரவுகிற போது, அங்குள்ள மனிதர்கள் மேன்மையடைகிறார்கள்...

உழுது, பயிரிட்டு, மாடுகள் வளர்த்து, வீடுகள் கட்டி, துணிகள் நெய்து, பாடங்கள் படித்து மென்மேலும் வளர்கிறார்கள்...

மனித குலத்தின் வளர்ச்சியை முன்னிட்டே கங்கை நதி இப்படி பிரவாகமாக சமவெளி நோக்கி போகிறாள்...

பரதகண்டத்தின் நாகரீகத்தை மனதில் நிறுத்தியே இப்படிப்பட்ட நதியினுடைய வருகை இருக்கிறது... இது கடவுளின் கிருபை... நாராயணன் செயல்...

எங்கோ அமர்ந்திருக்கின்ற அந்த பிரபஞ்ச சக்தி இந்த உலகத்தின் அசைவுகளை மிக துல்லியமாக கணித்திருக்கிறது...

இந்த கணிப்பை புரிந்து கொண்டவர்கள் ஞானவான்கள்... இந்த கணிப்பை தெரிந்து விட்டால் என்னுடையது, உன்னுடையது என்ற எகிறல் வராது..

நான் ஆண், நீ பெண் என்கிற பிரிவினை எழாது... நான் உயர்வு, நீ தாழ்வு என்கிற அகம்பாவம் கிளறாது...

வம்ச விருத்திக்காக பெண்ணின் துணையும், அவள் அன்பும், அவளோடு கூடலும் ஏற்படுத்திக் கொள்ளும்...

வம்ச விருத்திக்காக மட்டும் தான் ஆசை என்பது எத்தனை அற்புதமான விஷயம்... நான்கு குழந்தைகள் பிறந்து விட்டால், மனம் திசை மாறி அந்த குழந்தைகளின் வளர்ப்பிலேயே லயித்து விடும்... அவர்கள் மேன்மையில் கிறங்கி விடும்... அப்போது காமம் வெறும் நினைவு சின்னமாகவே இருக்கும்...

குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்கிற போது, வம்ச விருத்தி முக்கியம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தும்...

இந்த பூமியிலுள்ள இயற்கை மிகத் துல்லியமாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த மனிதர்கள் தான் அந்த துல்லியத்தை மறந்து விட்டார்கள்...

முன்னுக்கு பின் முரணாக நடக்கிறார்கள்... இயற்கைக்கு எதிராக ஆடுகிறார்கள்... இயற்கை என்னை என்ன செய்யும் என்று இறுமாப்பு கொள்கிறார்கள்.... இது சிரிப்பான விஷயம்...

(இன்னும் வரும்..........)

2 comments:

Kousalya said...

கோபி நலமா ?!

நீண்ட இடைவெளிக்கு பின் வருகிறேன்....

அவரது புக் படிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், உங்களின் இந்த தொகுப்பு மிக நன்றாக இருக்கிறது...படிக்க சுவாரசியமாக இருக்கிறது .

'ஆண் பெண் என்கிற பேதம்', 'நான் பெரிது நீ தாழ்வு ' என்கிற அகம்பாவம் எழாது...ம்...எவ்வளவு மகத்துவமா சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்து படித்தால் தெளிந்துவிடலாம்.இதற்க்கு முந்தைய பாகத்தையும் இப்போது படித்துவிட்டேன்.

வாழ்த்துக்கள் + நன்றி

R.Gopi said...

வாங்க கௌசல்யா...

நலம்... நலமறிய ஆவல்... கரெக்ட், நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களை சந்திப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே..

அவரின் எழுத்துகள் சாதாரணமாக தோன்றிய காலம் போய், இப்போது பெரிய அளவில் வீரியம் பெற்றிருப்பதை உணர்ந்தேன்...

தொடர்ந்து படித்ததில், எனக்கு பிடித்தவற்றை குறித்து வைத்து தங்களுக்கு ஒரு தொடராக தர எண்ணியே இப்போது இது தொடராக வெளிவருகிறது...

தொடர்ந்து வருகையும், ஆதரவும் தாருங்கள் கௌசல்யா...

நன்றி.....