Sunday, November 20, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இம்மாதிரியான பொருட்கள் எல்லாம் மக்களை அருகே ஈர்க்கும்... ஆனால், மிகப்பெரிய அவநம்பிக்கையை கொடுத்தவரைப் பற்றி ஏற்படுத்தும்.

இது மிகப்பெரிய கௌரவம் என்று செய்த அத்தனை பேரும் கேவலப்பட்டு இருக்கிறார்கள்...

தந்திரங்கள் செய்த அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஆனால் சத்தியமானவர்களை இந்த உலகம் எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

தலைமுறை, தலைமுறையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் புகழ் போற்றிப் பாடுகிறது..
அவர் மலரடி பின் தொடர்கிறது.

கவர்ச்சிகரமான உடைகளை விட, தங்கத்தாலான உத்திராட்சங்களை விட, எண்ணெய் பூசிய தலைமுடியை விட “சத்தியம்” மிக கவர்ச்சிகரமானது...

இம்மாதிரியான யோகீஸ்வர்கள் எல்லா காலத்திலும் கொண்டாடப்படுகிறார்கள்..

ஒருவர் யாசகம் கேட்க போகும் போதே இல்லை என்று சொன்னாலும் மவுனமாக ஏற்பதற்கு தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் வழிப்பறிக்கு போனால் இல்லை என்று சொல்வதற்கு கோபப்படலாம்... ஆத்திரப்படலாம்... வெட்டி கொன்று விடுவேன் என்று கத்தியை காட்டலாம்... ஆனால், பிச்சை எடுப்பதற்காக போய் விட்டு கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டார்கள் என்று யாரும் அழுவார்களா?

மறுப்புக்கு தயாராகத் தான் யாசகம் கேட்க போயிருக்க வேண்டும்... அப்படி போவது தான் யாசகம்...

பணிவு இல்லாத இட்த்தில் பக்தி வராது, வெறும் அலட்டல் தான் வரும்... போய் நின்றால் உங்களுக்கு ராஜமரியாதை தரவேண்டும் என்ற் அகம்பாவம் தான் வரும்...

பணிவு இருப்பின், அவமானம் ஒரு முக்கியமான விஷயமாக இருக்காது.

இல்லை, இல்லை என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தவனை நீங்கள் மனதார வாழ்த்தி விட்டு வந்திருப்பீர்கள், இப்படி வெம்பி அழ மாட்டீர்கள்...

பெண்களுக்கு நான்கு வித புருஷர்களால் (ஆண்களால்) துக்கம் உண்டு என்று சொல்லப்பட்டு இருக்கிறது... தகப்பனாலும், சகோதரனாலும், கணவனாலும், பிள்ளையாலும் துக்கம் உண்டு... இவர்களில் எவரேனும் ஒருவரால் பாதிக்கப்படாத பெண்களே இருப்பதில்லை...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”கல்லூரி பூக்கள்” நாவலின் வரிகள் :

ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புவது இயல்பு… இயற்கை… ஆனால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே விரும்ப வேண்டும்… ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதே ஒழுக்கம்…

சினிமாவில் அடிப்படையான விஷயமே ஆளுக்குத் தகுந்த சர்க்கரையான பேச்சு தான்… சினிமா என்பது பேசும் படம்… அங்குள்ளவர்கள் பேசத் தெரிந்தவர்கள்… பேசத் தெரிந்தவர்களே அங்கு ஜெயிக்க முடியும்.

வாழ்க்கையில் பாதிக்கு கடவுளை நம்பணும்… மீதிக்கு மனிதர்களை நம்பணும்… வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை… இருக்க வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால், சிலருக்கு இருக்கிறது… இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது…

நட்பை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கொடுக்கலாம்… நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு… இந்த உலகம் தழுவிய காதல்… நட்பில் உறவுச் சங்கிலி இல்லை… அன்பு சுமை இல்லை… முடிந்த போது, முடிந்த வரையில், முடிந்தவர்க்கு உதவி செய்வதே நட்பு..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள்… ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு முகம் வெளியே வரும்..

வாழ்க்கையில் அதிகம் நடிப்பவர்க்கு தன் உண்மையான முகம் எதுவென்றே தெரியாமல் போகும்… தன் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கின்ற ஆவல் இல்லாமெலே போகும்….

காசு என்பது பொருட்கள், பொருட்கள் என்றால் சந்தோஷம்….

காசு என்பது அதிகாரம்…. அதிகாரம் என்றால் சந்தோஷம்..........

காசு என்பது பாதுகாப்பு… பாதுகாப்பு என்றால் சந்தோஷம்........


(இன்னமும் வரும்.....)

3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான தொகுப்பு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ithu nalla muyarchi gopi. paaraattukkal.

R.Gopi said...

மிக்க நன்றி :

நிஜாம் பாய்

வித்யா...

தொடர்ந்து படித்து வாருங்கள்...