Showing posts with label சின்னதா ஒரு “சிறுகதை”. Show all posts
Showing posts with label சின்னதா ஒரு “சிறுகதை”. Show all posts

Sunday, February 21, 2010

மனைவி அமைவதெல்லாம் – (சிறுகதை)

ச்சே...... என்ன வாழ்க்கை இது...... சலிப்புடன் சொல்லியவாறு ஷூவை கழற்றி வீசினான், ஆபீசிலிருந்து திரும்பிய மோகன். ஏங்க, என்னிக்குமே இல்லாம, இன்னிக்கி ஏன் இவ்வளவு சலிப்பு என்று கேட்டாள் மனைவி வினோதினி.

இல்லேம்மா, இந்த கடவுளை நினைச்சா, ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.... இன்னொரு பக்கம், வெறுப்பா இருக்கு என்றான். சற்று நெருங்கி அமர்ந்து ’பக்திமானுக்கு, திடீர்னு கடவுள் மேல வெறுப்பு வர்றதுக்கு என்ன காரணம்? சொல்லுங்க’ என்றாள் வினோதினி. குரலில் அன்பை குழைத்து அவனை சமனமாக்கும் முயற்சியில் தொடங்கினாள்.

இல்ல வினோ, என்னோட ஆபீஸ்ல கூட வேலை செய்யற அக்கௌண்டன்ட் பரந்தாமன் சார் இருக்காரே. அவ‌ரோட பொண்ணுக்கு, ரொம்ப நாளைக்கப்புறம் இப்போதான் ஒரு நல்ல வரன் வந்து இருக்கு....பையன் நல்ல வேலையில இருக்கானாம். எங்கேயோ ஒரு கல்யாணத்துல சாரோட பெண்ணை பார்த்து இருக்கான். அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு..... பையனோட வீட்டுல, அங்க இங்க விசாரிச்சு, ஜாதகம் குடுத்து இருக்காங்க..... ஜாதகம் கூட நல்லா பொருந்தி இருக்காம்.

கல்யாணத்த சீக்கிரம் நடத்திடணும்னு பையனோட குடும்பத்துல ரொம்ப பிடிவாதமா இருக்காங்களாம். பையன் கொஞ்சம் பெரிய இடம். அதனாலே, இவரு நினைக்கறதைவிட கூட செலவு ஆகுமேன்னு பரந்தாமன் சார் வருத்தப்படறார். இன்னிக்கி வரைக்கும், யார்கிட்டயும் சொல்லாம, லன்ச் சாப்பிடறப்போ, என்கிட்டே சொல்லி கண் கலங்கினார்.

கடவுள் இருக்கார்...அதான், அவரோட பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் வந்ததுன்னு எடுத்துண்டா கூட... அந்த கல்யாணத்த நல்லபடியா நடத்தறதுக்கு அவர் படற கஷ்டத்த பார்த்தா, அந்த கடவுள் மேல ஒரு கோபமும், வெறுப்பும் வர்றது...

நண்பர்களை மதிப்பதிலும் அவர்கள் பிரச்சனையை தன் பிரச்சனையாய் பாவிப்பதும் தன் கணவனின் குணம் என்பதை அவள் அறிவாள். கணவன் மனைவி இருவருமே நண்பர்கள் போல தத்துவ விவாதத்தில் கலந்து, பிரச்சனையின் ஆழ செல்வர்.

நல்லது நடந்தா கடவுளை போற்றுவதும், நினைத்தது நடக்கலேன்னா அவரை தூற்றுவதும் தான் நாம எல்லாரும், எப்போவும் பண்றது தானேன்னும் தோணறது... நமக்கு மட்டும் ஏன் இந்த ரெட்டை புத்தின்னு கூட ஆச்சரியமா இருக்கு...

அவரோட இவ்வளவு வருஷ சேவிங்க்ஸ் எல்லாம் கணக்கு எடுத்தாகூட ஒரு ரெண்டு லட்சம் கொறைச்சலா இருக்காம். ரொம்ப வருத்தப்பட்டு என்கிட்டே சொன்னார். அதான், என்ன பண்றது.....அவருக்கு எப்படி உதவி செய்யறதுன்னு யோசிச்சுண்டு இருக்கேன்...கவலையுடன் நிறுத்தினான் மோகன்.....

எனக்கு சட்டுன்னு ஒண்ணுமே தோணல வினோ........ நீ ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு... நம்மளால ஏதாவது உதவி செய்ய முடியுமா? அவர் நம்ம குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கார்....... நம்ம பொண்ணோட கல்யாணத்தப்போ கூட இதுபோல பணத்துக்கு நாம தவிச்சப்போ, அவர்தான், எங்கேயோ ஜாமீன் போட்டு ஒன்றரை லட்சம் வாங்கி கொடுத்தார்....

அட என்னங்க. அவர் பண்ணின உதவியை, நாம ஆயுசுக்கும் மறக்க முடியுமா..சரி, இப்போ பரந்தாமன் சார், வீட்டுல இருப்பாரா? கேட்டாள் வினோதினி.....மோகன் தலை நிமிர்ந்து பார்த்தான்......சொல்லுங்க, உடனே அவருக்கு ஒரு போன் போட்டு, வீட்டுலேயே இருக்க சொல்லுங்க..... நல்ல விஷயம்தான்...நான் இப்போ வரேன் என்று உள்ளே சென்றாள்.... சுவர் கடிகாரத்தில் நிமிட முள்ளை துரத்தும் வினாடி முள், ரெஃப்ரியாய் மணி முள் எனும் விளையாட்டை மும்முரமாய் விளையாடியது.

திரும்பி வரும்போது, ஒரு ஹேண்ட்பேக் வைத்து இருந்தாள்....இந்தாங்க, இதை கொஞ்சம் பிரிச்சு பாருங்க இது நம்மோட சேமிப்பு பணம் என்றாள்.... உள்ளே, கரன்சிகள் முண்டியடித்து கொண்டு இருந்தது..... மோகன் விழிகள் ஆச்சரியத்தில் விரிய......ஹேய்...நம்ம கிட்ட ஏதும்மா வினோ, இவ்ளோ பணம்.....அதுவும் சேமிப்பா!!. . எனக்கு ஆச்சரியமா இருக்கே...

இது, நான் எட்டு-பத்து வருஷமா கொஞ்சம், கொஞ்சமா சேர்த்து வச்ச பணம்... ஏதாவது வீடு வாங்கணும்னு ப்ளான் பண்ணினா, அப்போ உபயோகமா இருக்கட்டுமேன்னு கொஞ்சம், கொஞ்சமா எடுத்து வச்சது...

இல்லேன்னா.. எப்போவாவது, நமக்கோ, நம்மை தெரிஞ்சவங்களுக்கோ, ஏதாவது கஷ்டம்னு வந்தா, அன்னிக்கி இத எடுத்து உபயோகப்படுத்தணும்னு வச்சு இருந்தேன்.....இப்போதைக்கு இருக்கற வீடே போதும்னு தோணித்து... அதான், இந்த பணத்தை இதுவரைக்கும் எடுக்கவே இல்லை. அதுக்கு இப்போதான் வேளை வந்திருக்கு.. ஒரு 2-3 லட்சத்துக்கு மேலயே இருக்கும்னு நெனக்கறேன். உங்களுக்கு கூட இதை பத்தி சொல்லல..... ப்ளீஸ். என்ன மன்னிச்சுடுங்க....

அந்த கடவுள் புண்ணியத்துல, நம்ம யாருக்கும் பெரிசா ஒண்ணும் கஷ்டமோ, பெரிய அளவுல பணத்தேவையோ வரலை..... அதான், இந்த பணம் அப்படியே செலவாகாம, சேமிப்பாவே இருக்கு... என்றாள்...... இந்த பணம், இப்போ பரந்தாமன் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு தான் உபயோகபடணும்...... இதை விட இந்த பணத்த உபயோகப்படுத்த நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வராது என்று, அந்த ஹேண்ட்பேகை மோகனிடம் கொடுத்தாள் வினோதினி..

சட்டென்று சோபாவில் இருந்து எழுந்த மோகன், விநோதினியை கண்ணீர் மல்க கட்டி அணைத்து... முத்த மழை பொழிந்தான்.....வினோ.... உன்ன நெனச்சு நான் ரொம்ப பெருமை படறேன்...... அடுத்தவங்களுக்கு கஷ்டம்னு தெரிஞ்சு உதவி செய்யறவன் தான் உண்மையான மனுஷன்..... அதுவும், நமக்கு உதவி செய்தவர்க்கு ஒரு கஷ்டம்னு சொல்றப்போ, அவருக்கு உதவி பண்றதுக்கு நம்ம கையில பணம் எதுவுமே இல்லையேன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்த போது இதை கொடுத்தியே, யூ ஆர் ரியலி க்ரேட் டியர்..இப்போ, நாம இந்த பணத்தை கொடுத்து, பரந்தாமன் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு உதவி செய்யப்போறோம்.....

வள்ளுவர் சொன்ன மாதிரி "காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மானப்பெரிது"..........அதாவது, முழுசா கல்யாண செலவுக்கான உதவி பண்ணலேன்னா கூட அவருக்கு இப்போ தேவையா இருக்கற இந்த பணம், நிஜமாவே பெரிய உதவிதான்.. உன்னோட, இந்த சேமிப்பு பழக்கத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளக்கேத்தி வைக்க போற..... அந்த கடவுள் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் என்று சொல்லி, பரந்தாமன் சார் வீட்டுக்கு போன் செய்தான்......

சார், நான் மோகன் பேசறேன் ....... கவலைப்படாதீங்க சார்.. நீங்க மத்தியானம் என்கிட்ட சொன்ன, பண பிரச்சனை தீர்ந்தது....உங்க பொண்ணோட கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்க போறது.... நீங்க கேட்ட பணம் 2 லட்சம் நான் தரேன் சார்....

என்னது நன்றியா... அது ரொம்ப பெரிய வார்த்தை சார். அப்படியே நீங்க நன்றி சொல்றதுன்னாலும் என்னோட மனைவி விநோதினிக்குதான் சொல்லணும்.... எதுக்கா.... நான் இப்போ, பணத்தோட நேர்ல வரேன்... அப்போ விபரமா சொல்றேன் என்றான் மோகன்....