Tuesday, February 10, 2009

யோதா-3756478 ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக)


(இது ஒரு விஞ்ஞான சிறுகதை அல்ல)

விஜேஷ் - இன்றைய உலகம் எவ்வளவு விசித்திரங்களை உள்ளடக்கி உள்ளது. நாளை அது என்னென்ன மாற்றங்களை காணப்போகிறது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் விஞ்ஞானி.

பேஜோ - அவன் ஆராய்ச்சி கூடத்தில் புதிதாக சேர்ந்துள்ள உதவியாளரிணி (இது தமிழில் புது வார்த்தையோ என்னவோ?).

பேஜோ - இது என்ன உன் பெயர் இவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்று கேட்டான் விஜேஷ். இதற்கு முன் இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லையே?

ஏன், உங்கள் பெயர் கூடத்தான் அசாதாரணமாக இருக்கிறது. விஜேஷ், விஜேஷ்....இதுபோல் இரண்டு முறை என்ன, இன்று முழுவதும் கூப்பிட்டாலும், இதில் ஏதோ ஒரு தனி சுகம் உள்ளது என்றாள் பேஜோ.

பேஜோ இதுதான் காதல் என்பதா என்றான் விஜேஷ்.

விஜேஷ், உங்களை பார்த்தாலே ஏதோ ஒரு தனித்துவம் தெரிகிறது. நான் இதுவரை பார்த்த மனிதர்கள் அனைவரிலும் நீங்கள் வித்தியாசமாய் தெரிகிறீர்கள். உங்கள் கண்கள் என்னை எவ்வளவு வசீகரித்து விட்டது, உங்களின் ஒரு பார்வையில் இந்த உலகையே அடிமைப்படுத்தி விடுவது போல, ஆனால் என்ன, காதை மறைக்கும் இந்த கூந்தலை கொஞ்சம் கத்தரித்து, சிறிது உயரமாக காண்பிக்கும் ஷூ அணிந்தால், ரங்கியூர் ராஜகுமாரன் இப்போது பிறந்து வந்தது போல இருப்பீர்கள் என்றாள் பேஜோ.

பேஜோ, கொஞ்சம் அருகில் வாயேன் என்றான் விஜேஷ்.

அருகில் வந்த பேஜோ, ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். கிறக்கமாக கண்மூடி அவனை நெருங்கியவளை, ஒரு ஆழ முத்தம் இட்டான். உயிரே அவளை விட்டு பிரிந்தது போன்ற ஒரு நிலையை அடைந்தாள்.

அறையின் கதவுகள் தானாக சாத்தப்பட்டது போல் உணர்ந்தாள். கிர்ர் என்ற ஒரு ஓசை காதில் ரீங்காரம் இட்டது. தன்னிலை மறந்து, ஒரு மயக்க நிலை அடைந்ததை உணர்ந்தாள். இருப்பினும், கண்கள் முழுதும் மூடாமல், சிறிது மலர்ந்திருந்தது. அங்கே அவள் கண்ட காட்சியில், இருதயம் திடுக்கிட்டு, சிறிது நேரம் துடிக்க மறந்தது. கண்மூடி மயங்கினாள், இதுதான் அவள் பூமியில் கடைசியாக காணப்போகும் காட்சி என்பதை அறியாமலேயே. (வலது கை தன்னிச்சையாக அவளின் கோட் பாக்கெட்டில் இருந்த லேசர் துப்பாக்கியை தொட்டுப்பார்த்தது......... மயக்கமாகுமுன், இடது கை அவளின் வலது காதின் கீழ் பகுதியில் உள்ள ஒரு சுவிட்சை தட்டி விட்டது, நம் பேஜோ கிரகத்திற்கு இந்நேரம் சிக்னல் கிடைத்திருக்குமா?).

அங்கே .............

விஜேஷ், தன் தலையை தனியாக கழட்டினான். இப்போது அவன் முகம் மிகவும் விசித்திரமாக இருந்தது (முன்பு ஒரு முறை விஜேஷை பார்த்து இப்படி சொன்னது ஞாபகம் வந்தது). கண்கள் விடைத்து, வெளியே தெறித்து விழுந்து விடுவது போல இருந்தது. காதுகள் இரண்டு புறமும் நீட்டி கொண்டிருந்தது. அதுபோல் ஒரு வண்ணத்தை இப்போது தான் ஒரு முழு உருவத்தில் பார்ப்பது போல், பச்சையாக இருந்தது.

தன் கைகளால், உடல் முழுக்க உருவி விட்டான். மனித தோல் மறைந்து போய், உடலே ஒரு முதலை தோலால் போர்த்தியது போன்று இருந்தது.

கைகளிலும், கால்களிலும் மூன்று விரல்கள் மட்டுமே இருந்தது. இப்போது தன்மேல் ஒரு ஆரஞ்சு நிற அங்கியை அணிந்தான், ஒரு கைத்தடி எடுத்து கொண்டான். அவன் நடந்த போது, அந்த அறையே அதிர்ந்தது. குள்ளமான அவன் வாத்து நடை போட்டான்.

கையில் இருந்த ஒரு சின்ன டிரான்சிச்டரில், சிகப்பும், பச்சையுமான விளக்குகள் இருபுறங்களிலும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு கரகரப்பிற்கு பிறகு ஏதோ புரியாத மொழியில் சத்தங்கள் வர, இவனும் ஏதோ அதே மொழியில் சில கரகர வார்த்தைகளை பதிலாய் தந்து விட்டு, அவள் படுத்து இருக்கும் திசையை நோக்கினான்.

உம்ம்ம்...... என் ஒரு முத்தம், கட்டாயமாக உன்னை, ஒரு நான்கு மணி நேரமாவது மயக்கத்தில் ஆழ்த்தி இருக்கும், இல்லையா?? என்றவாறு அவளை நோக்கி அடி எடுத்து வந்தான்.

என் தேவதையே, நீ மறுபடியும் கண்விழித்து எழுந்திருக்கும் போது எங்கள் யோதா கிரகத்தின், அடிமை சாசன பட்டை கட்டிக்கொண்டு, ஏதோ ஒரு யோதா எண்ணை வாங்கிக்கொண்டு, என் அந்தப்புரத்து ராணியாக இருக்கபோகிறாய். ஆனாலும், இந்த முறை என் பூமி வருகை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என் அதிர்ஷ்டம். உன்னை போன்ற ஒரு அழகு தேவதை கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றான் விஜேஷ் என்கிற யோதா-3756478 எண்ணை தாங்கி கொண்டிருக்கும் யோதா கிரகத்துவாசி.

வெளியே காற்று சுழன்று அடித்தது. விஜேஷ் அவளை, தோளில் தூக்கிக்கொண்டு மொட்டைமாடியை அடைந்தான். அங்கே ஒரு உருண்டையான ஒரு விண்கலம் யோதா கிரகத்தில் இருந்து மாடியில் வந்திறங்கியது.

அதே நேரம் பேஜோ கிரகத்தின் தட்டையான ஒரு விண்கலம் அதே மாடியில் தரை இறங்கியது.

No comments: