மஹா சிவராத்திரி விரதம்
சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:
"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 02.03.2011 புதன்கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.
தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆக
மங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என்று பொருள்படும்.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. மற்ற எல்லா சிவராத்திரிகளையும் விட இதுவே சிறப்புடையதும். பல்வேறு வகையான பெரிய நலன்களை வழங்குவதாலும், மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் ஒருசேர வழங்குவதாலும், இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறும் விரதங்களின் விளக்கங்கள்.
நித்ய சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். நித்திய சிவராத்திரி விரதம் இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை இருக்க வேண்டும். பெண்கள் 24 முறை விரதம் இருக்கலாம்.
பட்ச சிவராத்திரி:
தை மாதம் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை அணிவித்து சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.
யோக சிவராத்திரி:
ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பகலிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். இந்த யோகா சிவராத்திரி மிகவும் அரிதாக வரும்.
மகா சிவராத்திரி :
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.
சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.
சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.
காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.
இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.
இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.
சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.
சிவராத்திரி விரத முறைகள் :
சிவராத்திரி அன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி,அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.
வீட்டில் பூசை செய்வதாயின், குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையைத் ஆரம்பிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.
மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
8 comments:
எனக்கு தெரியாத பல விசயங்கள்...விளக்கமாக சொல்லி இருக்கீங்க...
சரியான நேரத்தில் வந்த பதிவு.
வாங்க கௌசல்யா மேடம்...
இது எனக்கு நண்பர் மெயிலில் அனுப்பியது... மஹா சிவராத்திரியை முன்னிட்டு பதிவிட்டேன்...
வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மேடம்...
சிவராத்திரில இவ்ளோ விஷயம் இருக்கா? எனக்கு தெரிஞ்சதெல்லாம் ராத்திரி கண் முழிக்கனும்கறது மட்டும்தான். பயனுள்ள தகவல்கள். நன்றி.
//Mrs. Krishnan said...
சிவராத்திரில இவ்ளோ விஷயம் இருக்கா? எனக்கு தெரிஞ்சதெல்லாம் ராத்திரி கண் முழிக்கனும்கறது மட்டும்தான். பயனுள்ள தகவல்கள். நன்றி.//
******
வாங்க திருமதி கிருஷ்ணன்...
வெறுமே கண்விழித்து என்ன செய்வது... சிவநாமம் சொல்லலாம் (பல்லாங்குழி, பரமபதம் விளையாடுவதை விட இது நல்லது).
பயனுள்ள தகவல்கள் அடங்கிய இந்த மெயிலை எனக்கு அனுப்பிய என் நண்பருக்கு என் நன்றி...
பவானி கூடுதுறையில் இரவு முடிந்த வரை விழித்திருப்போம்..நிறைய மக்களுடம் அந்த இரவில் சிவபெருமானை தரிசிப்பது பரவசம்
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பவானி கூடுதுறையில் இரவு முடிந்த வரை விழித்திருப்போம்..நிறைய மக்களுடம் அந்த இரவில் சிவபெருமானை தரிசிப்பது பரவசம்//
********
வாங்க சதீஷ்...
நல்ல விஷயங்களை நாளும் செய்வது வாழ்வில் நன்மையையே பயக்கும்...
நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.. தேங்க்ஸ் :-)))
வாங்க ஆனந்தி....
இது எனக்கு நண்பர் மெயிலில் அனுப்பியது... மஹா சிவராத்திரியை முன்னிட்டு பதிவிட்டேன்...
வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ...
Post a Comment