Wednesday, November 2, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-3


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

நிலம் என்ற ஒன்று செழிப்பாக இருக்க வேண்டுமென்றால், நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டும்... நீர் என்று ஒன்று பொங்கி வர வேண்டுமென்றால், மலை என்ற ஒரு உயர்ந்த விஷயம் ஒன்று இருக்க வேண்டும்....

உயர்ந்த மலை ஒன்று இருந்தால் தான் வேகமாக காற்று வீசும்... அந்த காற்று தான் பனியாக மாறும்... குளுமையாக நிற்கும்... அந்த குளுமை சூரியக் கதிரின் வெப்பம் பட்டு உருகி சொட்டு சொட்டாய் வழிந்து ஒன்று கூடி சிறு நதியாகி, அந்த சிறிய நதிகள் ஓரிடத்தில் ஒன்றாகி பெரு நதியாகி புரண்டு அடித்துக் கொண்டு சமவெளி நோக்கி ஓடும்...

நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற இந்த நான்கும் இயங்க வேண்டுமென்றால் வெளி என்ற ஒரு விஷயம் இருந்தே ஆக வேண்டும்...

இடைவெளி இருந்தால் தான் ஒன்றோடு ஒன்று கலக்க முடியும்... இந்த பூமியில் இந்த நதி இப்படி சமவெளி நோக்கி பரவுகிற போது, அங்குள்ள மனிதர்கள் மேன்மையடைகிறார்கள்...

உழுது, பயிரிட்டு, மாடுகள் வளர்த்து, வீடுகள் கட்டி, துணிகள் நெய்து, பாடங்கள் படித்து மென்மேலும் வளர்கிறார்கள்...

மனித குலத்தின் வளர்ச்சியை முன்னிட்டே கங்கை நதி இப்படி பிரவாகமாக சமவெளி நோக்கி போகிறாள்...

பரதகண்டத்தின் நாகரீகத்தை மனதில் நிறுத்தியே இப்படிப்பட்ட நதியினுடைய வருகை இருக்கிறது... இது கடவுளின் கிருபை... நாராயணன் செயல்...

எங்கோ அமர்ந்திருக்கின்ற அந்த பிரபஞ்ச சக்தி இந்த உலகத்தின் அசைவுகளை மிக துல்லியமாக கணித்திருக்கிறது...

இந்த கணிப்பை புரிந்து கொண்டவர்கள் ஞானவான்கள்... இந்த கணிப்பை தெரிந்து விட்டால் என்னுடையது, உன்னுடையது என்ற எகிறல் வராது..

நான் ஆண், நீ பெண் என்கிற பிரிவினை எழாது... நான் உயர்வு, நீ தாழ்வு என்கிற அகம்பாவம் கிளறாது...

வம்ச விருத்திக்காக பெண்ணின் துணையும், அவள் அன்பும், அவளோடு கூடலும் ஏற்படுத்திக் கொள்ளும்...

வம்ச விருத்திக்காக மட்டும் தான் ஆசை என்பது எத்தனை அற்புதமான விஷயம்... நான்கு குழந்தைகள் பிறந்து விட்டால், மனம் திசை மாறி அந்த குழந்தைகளின் வளர்ப்பிலேயே லயித்து விடும்... அவர்கள் மேன்மையில் கிறங்கி விடும்... அப்போது காமம் வெறும் நினைவு சின்னமாகவே இருக்கும்...

குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்கிற போது, வம்ச விருத்தி முக்கியம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்தும்...

இந்த பூமியிலுள்ள இயற்கை மிகத் துல்லியமாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த மனிதர்கள் தான் அந்த துல்லியத்தை மறந்து விட்டார்கள்...

முன்னுக்கு பின் முரணாக நடக்கிறார்கள்... இயற்கைக்கு எதிராக ஆடுகிறார்கள்... இயற்கை என்னை என்ன செய்யும் என்று இறுமாப்பு கொள்கிறார்கள்.... இது சிரிப்பான விஷயம்...

(இன்னும் வரும்..........)

Friday, October 21, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் எழுத்துகளை வாசித்து வந்தாலும், மிக சமீபத்தில் நிறைய பாலகுமாரன் எழுத்துகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்து இந்த தொடரில் தந்திருப்பதால்,அது கோர்வையாக இராது... இருந்தாலும் தரப்பட்டுள்ளவை நன்றாகவே இருக்கும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

”ஸ்ரீகிருஷ்ணாவதாரம்” - தொடர்ச்சி :

இயற்கை சக்தி அல்லது கடவுள் என்ற மகத்தான வலிமை பற்றிய அறிவு இல்லாதவர்கள்
, தங்களுடைய வளர்ச்சி, தங்களுடைய வலிமை, உலகத்தை ஆளக்கூடிய திறமை உடையது என்று நினைத்துக் கொள்கிறார்கள்

புஜ வலிமை என்பதும், புத்தி வலிமை என்பது, மன வலிமை என்பதும் உலகில் மிகச் சிறிய விஷயங்கள். மிக உயரமாக வளர்ந்த ஒரு மரம் போல இயற்கை கொடுத்த வரப்பிரசாதங்கள். அங்கே நிச்சயம் முயற்சியும், சட்ட திட்டங்களும், இடைவிடாத பயிற்சியும் இருந்திருக்கிறது என்பது உண்மையாயினும், இது உலகை ஆளக்கூடியது அல்ல

இந்த மனோசக்திகளும், உடல் சக்திகளும் எல்லைகள் உடையவைஒரு அளவுக்கு மேல் பயன் தராதவைலட்சக்கணக்கான மனிதருக்கு நடுவே உயரமாக கிளர்ந்து எழுந்து விட்டால், தான் உலகையே ஆளக்கூடியவன் என்ற எண்ணம் ஏற்படுவது பேதமை

மனிதர்களில் பெரும்பாலோர்க்கு அவ்வப்போது இப்படி பேதமை ஏற்படும்அவனை சுற்றியுள்ள மனிதர்களை ஜெயித்த்தால், தனக்கு அருகே இருக்கின்ற திறமையானவர்களை மீறி வெற்றி பெற்றதால், அவர்களுக்கு இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா விஷயங்களையுமே ஜெயித்து விட முடியும்வெற்றி பெற முடியும்காலடியில் கவிழ்த்து விட முடியும் என்கிற எண்ணம் தோன்றும்

தன்னைப் பற்றிய அளவு மதிப்பீடு தவறாக போய் எதிர்பக்கம் இருக்கின்றவருடைய அளவு மதிப்பீடு குறைவாகப் போய் அவர்கள் கொக்கரிக்கத் துவங்கி விடுவார்கள்

இந்த உலகம் அவ்வப்போது மனிதர்களில் இப்படிப்பட்ட கொக்கரிப்பாளர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறதுசந்தித்துக் கொண்டு தான் இருக்கிறதுசகித்து கொண்டு தான் இருக்கிறது

கடவுள் என்கிற பயம் இருந்தால்தான் வாழ்க்கை சௌலப்பியமாக, சுகமாக இருக்கும்

கடவுள் என்று ஒன்று இல்லை, நானே இந்த உலகத்தின் உச்சி என்று யார் நினைத்தாலும் அழிவின் விளிம்பில் நிற்கிறான் என்று அர்த்தம்

கடவுள் என்பதை அறிய பணிவு வேண்டும்பணிவில்லாத போது தந்திரங்கள் தான் தலைதூக்கும்.

உலக மக்களுக்கு தெளிவு ஒரே நேரத்தில் வந்துவிடாது... தெளிவுள்ள குழு என்றும், தெளிவற்ற குழு என்றும் பாதி தெளிந்த குழு என்று பிரிந்து தான் இருக்கும்.

கடவுளை நோக்கி நடக்கும்போது, கடவுளை காப்பாற்றுவதற்காக நடந்தால், கடைத்தேற முடியுமா? இரண்டும் கெட்டானாகத்தான் நிற்க முடியும்... தன்னை காப்பாற்றிக் கொள்ள நடந்தால் ஒரு வேளை கடவுள் கையில் சிக்கியிருப்பார்...

கடவுள் மீது பக்தி உள்ளவர்களுக்கு இம்மாதிரியான பேதமைகள் ஏற்படுவது வழக்கம்... கடவுளை நாம் அலங்கரிக்கிறோம் என்பதாலேயே அலங்கரிப்பவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகவும், அவர் மீது மிக உரிமை உள்ளவராகவும் தன்னை நினைத்துக் கொள்கிறார்...இது பேதமையின் உச்சகட்டம்...

ஸ்வாமியை நாங்க தான் தொடலாம்... நீங்க தொடக்கூடாது என்று அறிவார்ந்த கூட்டம் ஒன்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசும்... இப்படித்தான் பூஜை என்று ஏதோ ஒரு முறையை சொல்லும்...

எல்லா ஆஷாட அனுஷ்டானங்களும் அகந்தையை கொண்டு, அகந்தையாய் நடத்தப்படுகின்றன...

இறைவனை எங்கே காண்பது... அது இறைவனால் தீர்மானிக்கப்பட வேண்டும்...

தான், உடம்பு என்ற கர்வத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சிற்றின்பத்தில் தான் திளைத்திருக்க முடியும்... எவ்வளவு அழகான தோள்கள், எவ்வளவு உறுதியான தொடைகள், எவ்வளவு திடமான புஜம், எத்தனை அழகான கண்கள், எல்லா பெண்களும் மயங்குகிற மார்பு, அத்தனை பெண்களும் மயங்குகின்ற சிரிப்பு என்று தசை, நரம்பு, எலும்பு குவியல்களை உடம்பாக கொண்டு, தோல் போர்த்திய இந்த பொருட்களை தான் என்று நினைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்...

பெண்கள் மயங்கினார்கள் என்பது ஒரு நாடகம்... பெண்களை மயக்க முடியும் என்று நினைத்துக் கொள்வது இன்னொரு நாடகம்... ஒன்றை ஒன்று மிஞ்சிய நாடகம் தான் தொடர்ச்சியாக நடக்கிறது.

காமம் என்பது காதலின் வளர்ச்சியாக, பிள்ளை பெறுதலின் முயற்சியாக, பரஸ்பர அன்பு பரிமாறலுக்காக, குடும்பம் என்கிற அமைப்பின் அஸ்திவாரமாக, குலம் என்கிற விஷயத்தின் நடைபாதையாக, இருக்கவேண்டுமே தவிர, காமத்தை பற்றி அலட்டிக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை.

மனித இனம் அறுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தான் அது கவர்ச்சிகரமாக மனிதனுக்குள் படைக்கப்பட்டிருக்கிறது..

கல்பகோட காலங்கள் மனிதன் தொடர்ந்து பிறந்து, வளர்ந்து, உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற கருணையின் காரணமாகத் தான் காமம், இனிப்பான, சுவையான, அனுபவித்தே தீர வேண்டிய அற்புதமாக, காவியமாக இருக்கிறது.

அழகிய பெண்கள் தான் முக்கியம் என்ற அலம்பலுக்குள் மனம் சிக்கிக்கொண்டால், இங்கே மனித இனத்தின் வளர்ச்சி பற்றிய மேன்மை இல்லை... இந்த சிந்தனைகள் இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபடுகிற போது அது மிக ஆபாசமாக இருக்கும்..

பாட்டும், கூத்தும் அற்புதம் தான்... ஆனால், அதை குடும்பத்தோடு அனுபவிக்கிறது உள்ளுக்குள்ளே மிகப்பெரிய ஆசுவாசத்தை, அன்பு தளும்பலை அது ஏற்படுத்துகிறது..

அங்கே பாட்டு உன்னதமான இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை... மிக சுமாரான பாட்டு கூட தேவகானமாக காதில் ஒலிக்கும்... குழந்தையின் மழலை கூட யாழ் போல, வீணை குழல் போல காதில் வந்து மோதும்.

பெற்ற பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு, அதுகள் செய்யும் குறும்புகளை கணவன் பொறுத்துக்கொண்டு, புன்னகை செய்தால், மனைவி ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டால், அது கொடுக்கும் கிளர்ச்சி மிக அற்புதம்....

குடும்பம் என்பது தர்மத்தின் பாற்பட்ட வாழ்க்கை... தர்ம/மே மனிதனின் நாகரீகம்... அதர்மம் அநாகரீகம்....

(இன்னமும் வரும்..........)

Sunday, October 16, 2011

என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1


தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

நான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... சமீபகாலமாக நிறைய பாலகுமாரன் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... /அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்திருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக படித்தால் ஒரு கோர்வையாக இராது, மன்னிக்கவும்...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

பாலகுமாரன் காசிப்பயணம் சென்று வந்ததை பற்றி விளக்கிய ஒரு கேள்வி-பதிலில் சொன்னது :

வாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல, மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானதுஅது இருப்போர்க்கும் கொடுக்கும், இறந்தோர்க்கும் கொடுக்கும்

காசு சம்பாதிப்பது தர்மத்திற்குள் அடங்காது போயின், அதை செலவழிப்பதும் தர்மத்திற்குள் அடங்காது போகும் – “காசுமாலைநாவலில் பாலகுமாரன்

அடுத்தவருக்கு தான் எப்படி என்று காண்பித்துக் கொள்ள எதுவும் செய்யாமல் தன்னுடைய திருப்திக்காக செய்யும் போது தான் செய்கைகள் சீராகின்றனசெம்மையாகின்றனஇல்லையெனில், செய்யும் அனைத்து விஷயங்களுமே கேலிக்கூத்தாகவே முடியும்

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் :

பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.. பூமி என்பது நதி, கடல், மலை, தாவரங்கள்அதனூடே வளரும் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள். இவையெல்லாம் சேர்ந்த்து தான் பூமி

பூமி என்பது இவைகள் மட்டுமல்ல…. பூமி என்பது வெளியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதுவெளி இல்லாது பூமி இல்லைவெளி பூமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது

இந்த வெளி புனிதமானது, உயிர்ப்பானது. மனிதர்கள் மற்ற உயிரினங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இந்த வெளிதான் உதவி செய்கிறது.

வெளி இருந்தால் தான் ஒளி.. வெளி இருந்தால் தான் பார்வை.. வெளி இருந்தால் தான் ஒலி.. வெளி இருந்தால் தான் காற்று.. ஒளிபரவ, காற்று நடக்க, காற்றிலுள்ள ஒரு ஈரப்பதம் பூமியை குளிர்விக்க, ஒலி நடக்க ஒரு இடம் வேண்டுமல்லவாபூமி என்பது அந்த வெளியும் சேர்ந்தது

பூமியிலுள்ள மக்கள் ஏதுமறியா வெகுளிக்குழந்தைகளாக இருந்த போது பூமியால் வெளியும், வெளியால் பூமியும் மிகக் குளுமையாகவும், வலிமையாகவும், சாரமுள்ளதாகவும் இருந்தனபூமியிலுள்ள மக்கள் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து, வளர்ந்து ஆத்திரமும், கோபமும், துரோகமும் செய்ய ஆரம்பித்த போது அந்த வெளியில் அழுகையும், அலறலும், கேவலும், குமுறலும், தடித்த வார்த்தைகளும், தவறான பேச்சுக்களும், அதனால் கோபமான சிந்தனைகளும் பொங்க ஆரம்பித்தது

விலங்கினங்கள் பகுத்தறிவு இல்லாததுஎது நல்லது, எது கெட்டது, எது தவறு, எது சரி என்று பகுத்தறிந்து பலபேர் சொன்னதைக் கேட்டு, கேட்ட்தையே பகுத்தறிந்து வாழ்வது தான் வாழ்க்கையார் சொல்வதையும் கேட்காமல், தானும் உட்கார்ந்து எது சரி என்று ஆராயாமல், வெறும் பதட்டத்திலேயே முடிவுகள் எடுக்கிற போது அவை தன்னை சுற்றியுள்ளோரின் சீரழிவுக்குக் காரணமாகிறதுஅந்தச் சீரழிவு தான் ஒன்று திரண்டு மிகப் பெரிய மாறுதலை பூமியில் கொண்டு வந்து சேர்க்கிறது

நல்ல புருஷனோடு மனம் நிறைந்து கலவியில் ஈடுபடுவது பெண்களுக்கு பெரும் பேறுஆனந்த மயமான நிறைவுஅதுபோல நுழைந்த கரு, கருப்பையில் மிகச் சரியாக தங்கிவிட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, உடம்பு அறிவுறுத்த, அதை உற்று கவனித்து அனுபவிப்பதும் மிகப் பெரிய பேறுஇதை பெண்களால் மட்டுமே உணர முடியும்

மனிதன் தன்னிலிருந்து பொங்கிப் பெருகிய நாகரீகத்துக்கு காரணம் எங்கும் நிறைந்த பரம்பொருளே, பெரும் சக்தியே என்பதை புரிந்து கொள்ளாது, தானே, தன் உடம்பே என்ற மமதையில் ஆள்கிறான்தன் புத்தியே என்ற எண்ணம் கொள்கிறான்அதுவே தன்னைக் காப்பாற்றுகின்றன என்று நினைத்துக் கொள்கிறான்இது கால மாறுபாடுகளின் போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்..

மனித வளர்ச்சியின் உச்சியிலிருந்து கிளம்பிய நாகரீகத்தின் வேகத்தை மனிதனால் தாங்க முடியவில்லைஅவர் சரியத் துவங்குகிறான்தன்னிலிருந்து வளர்ந்த அவனுடைய நாகரீகமே அவனை அழிக்க துவங்குகிறது

எந்த உணவை எப்படி உண்பது என்பது இங்கு முக்கியமல்லஎல்லா உணவுமே தர்மத்திற்கு உகந்தவை தான்.. ஆனால், பிறர் உணவை பறிப்பது மட்டும் தான் அதர்மமானதுஅது தான் அழிவுக்கு வழிகோலாகிறதுஅழிவு என்பது அகம்பாவத்தினால் ஏற்படுகிறதுஎல்லா அகம்பாவங்களும் அழிவதற்கான ஆரம்ப கட்டங்கள்

உலகத்தில் எது தர்மம், எது அதர்மம் என்று எல்லாருக்கும் தெரியும்அப்படி உணர்ந்த பிறகும் தர்மத்தை அதர்மம் என்றும், அதர்மத்தை தர்மம் என்றும் சொல்லிக் கொள்ள மனிதர்கள் தொடர்ந்து துணிந்து முயல்வார்கள்மனிதர்களில் அதர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொள்வோர் அதிகரிக்கும் பொழுது, இல்லை இதுவே தர்மம் என்று நிலை நிறுத்த இறைவன் அவதரிப்பது வழக்கம்

ஆத்மம் என்பது பிரபஞ்ச சக்திபிரபஞ்ச சக்தியே ஆத்மம்

தான் ஆத்மம் என்பதை மறந்து விட்டு, தன்னுடைய தசைகளை, நரம்புகளை, எலும்புகள, பற்களை, சுவாசத்தை, குரலை, உணவை, படைகளை, தேசத்தை தான் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்

தன்னை உடம்பாக கருதிய அத்தனைப் பேருக்கும், பயம் தான் பிரதானம்நான் உடம்பு இல்லை என்று எவர் உதறினாரோ, அவருக்கு பயத்தையும் உதற முடியும்..

நான் யார், உண்மையில் என் நிலை எது என்று விசாரித்தவருக்கு தான் ஆத்மாவின் சாட்சாத்காரம் புரியும்ஆத்மாவின் இருப்பு அறிய முடியும்தன்னை அறிந்தவர் மரணத்தை கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார்

கொடுமையாளர்கள் விரைவில் அழிவதற்கு அவர்களின் கொடுமை தான் காரணம்அவர்கள் கொடுமையின் உச்சக்கட்டத்துக்கு வேகமாக போக, வெகு விரைவில் அவர்களுக்கு முடிவு வந்து விடுகிறதுகொடுமையாளர்கள் கொடுமைக்கு வேகமாக போவதற்கு அவர்களுடைய பயமே காரணம்

அவர்களுடைய பயத்திற்கு, தான் மட்டுமே இந்த உலகத்தில் நலமாக வாழ வேண்டும் என்ற சுயநலம் காரணம்வறுமையில் வாடுபவர்களையும், உழைப்பையே நம்பி இருப்பவர்களையும், தர்மத்தை கடைப்பிடிப்பவர்களையும், எவருக்கும் தீங்கு எண்ணக்கூடாது என்று வாழ்கின்ற சாதுக்களையும் இந்த கொடுமையாளர்கள் தங்கள் முக்கிய எதிரிகளாக நினைப்பார்கள்

வலுவில்லாத ஒரு இட்த்திலிருந்து தான் வலுவுள்ளவன் வந்து விடுவான் என்று பயப்படுவார்கள்

தைரியமுள்ளவனை, ஆயுதமுள்ளவனை, படையெடுத்து வருபவனை அவர்கள் சந்தோஷமாக எதிர்கொள்வார்கள்அவர்கள் பயப்படுவது, எவர் தனக்கு எதிரி இல்லை என்று ஒதுங்கி நிற்கிறார்களே அவர்களை கண்டே அதிகம் கலவரப்படுகிறார்கள்

மனித வாழ்க்கைக்கு மிஞ்சி, மனித பலத்திற்கு மிஞ்சி மிகப் பெரிய பலம் கொண்டது இயற்கைஅது தன்னுடைய இஷ்ட்த்திற்கு ஆடும், அந்த இயற்கைக்கு மேலாக இருக்கின்ற ஒரு சக்தி, அந்த இயற்கையை எல்லாம் ஆட்டி வைக்கின்ற சக்தி பூமிக்கு வந்து குழந்தையாக பிறந்தால், அது ஆடுகின்ற ஆட்டமும்மின்னலை போல, சூறாவளியை போல, பொங்கும் கடலை போல, சீறும் எரிமலையை போல, வேகமாகத் தான் இருக்கும்..

(தொடரும்.......)

Friday, August 12, 2011

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


தாயின் மணிக்கொடி பாரீர்

இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.


வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க

அன்று சிந்திய பலரின் குருதி

கொடியின் மேலே ஆனது காவி

உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்

அதை உண‌ர்த்தும் விதமாய்

கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை

பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி

பசுமையாய் ஆக்குவோம் நாட்டை

இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை


இடையில் உள்ள சக்கரம் போல்

ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்

உன் வாழ்வும் உயர்வு பெறும்

நம் நாடும் வளம் பெறும்


இன்றைய இந்தியா இதை உண‌ருமா?

கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை

இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்

அனைத்தும் கருகிய நிலை


விதவிதமான போதையின் பிடியில் இந்தியா

தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்

போதையின் பிடியில் சுருண்டு....

அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற

அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்

கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....


நம் இன்றைய தேவை என்ன?

ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்

கடுகு அளவுள்ள எறும்பே அதன்

உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்

உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பார்

சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை


குடியை கெடுக்கும் குடியை தவிர்

மனதை கெடுக்கும் மதுவை மற

சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து

வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து

கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்

நம் வாழ்வு சிறக்கும்....


ஜெய் ஹிந்த்.....


உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Thursday, July 14, 2011

மூன்றாவது கை


எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம்.

ச்சே. இது என்ன, யாரை பயமுறுத்த இந்த கட்டுரை?. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த ”சயின்ஸ் டுமாரோ” புத்தகத்தை தூக்கி எறிந்தான் விக்னேஷ். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்?. இப்படி எழுதி என்ன ஆகப்போகிறது, நம்மை பயமுறுத்துவதை தவிர என்று முனகினான்...

தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சிவப்பில் ஜூஸ்வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற விபரீத யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது.

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது

(எப்போதோ எழுதியது......)

Wednesday, April 6, 2011

கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-1)


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட தே.மு.தி.க.தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" ஒரு "உற்சாக" விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்... அதில் கலந்து கொண்ட நமது சிறப்பு நிருபர் "டாஸ்மாக்கார்" அளித்த சுறுசுறு ரிப்போர்ட், இதோ..

முதலில் தே.மு.தி.க தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" கட்சி தொண்டர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்...

இங்க வந்து இருக்கற எல்லாருக்கும் வணக்கம்... நான் ரெம்ப நல்லவன்னு "அம்மா" சொன்னாய்ங்க... அம்மான்னா அவிய்ங்க இல்லடா... இவிய்ங்க வேற‌டா பரதேசி... என் வீட்டம்மா... பிரேமா....
பந்தலுக்கு உள்ளார நெறைய பேரு வந்தத பாத்தேன்... ஆனா, இங்க பாதி கூட்டம்தான் இருக்கு... மிச்சம் இருக்கறவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும், ஆனா, சொல்ல மாட்டேன்... அவிய்ங்களாவே இங்க வந்து பந்தல்ல ஒக்காரணும்... இன்னும், கொஞ்ச நேரத்துல இந்த மீட்டிங் முடிஞ்சதும், நானே என் கையால ஒங்க எல்லாருக்கும், சப்ளை பண்றேன்... யேய்.... பிரியாணிய சொல்றேன்...

இந்த தேர்தல்ல கூட்டணி வச்சதால இரண்டாவது எடத்துல இருக்கோம்..அடுத்த தேர்தல்ல, மொத எடத்துக்கு வரணும்... அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க.. அவிய்ங்கள, நான் தனியா கவனிக்கறேன்...

தலீவா... இந்த தடவ அ.தி.மு.க. வோட சேர்ந்து போட்டி போடறோம்... அடுத்த தடவ, "தல" கிட்ட சொல்லி, அவிய்ங்கள போட்டி போட வேணாம்னு சொன்னா, நம்ம அடுத்த எலக்சன்ல மொத எடத்துக்கு வந்துடுவோம்...

டேய்... பரதேசி... நீ எந்த கச்சி ஆளுடா... மவனே.. நான் அங்க வந்தா, ஒன்னிய பெண்டு எடுத்துடுவேன்.. ஐடியா குடுக்கற மூஞ்சிய பாரு... ஓங்கி குத்தவா? (முஷ்டியை மடக்கி காற்றில் ஓங்கி குத்துகிறார்....)... இதை பார்த்த, முதல் நான்கு வரிசை தொண்டர்கள் படை டர்ராகிறது...

உருப்படியா ஏதாவது சொல்றதுன்னா சொல்லுங்க... இல்ல, வந்த வேலைய பார்க்க போங்க... உள்ளுக்கு ரூம்புல தான் சரக்கு இருக்கு... அடிதடி பண்ணாம, முடிங்க... அந்த பக்கம், பிரியாணி பார்சல் இருக்கு... ஆளுக்கு ஒரு பார்சல் மட்டும் எடுத்துட்டு போங்க... போன தடவ ஆயிரம் பார்சல் வந்தது...அத்த, வந்து இருந்த ஐநூறு ஆளுய்ங்களே ஆட்டைய போட்ட மாதிரி இல்லாம.... என்று ஓவர் சவுண்ட் விடுகிறார்...
கேப்டனின் கண்கள் சிவந்து, பெரிதாகி, எந்நேரமும் தெறித்து விழுவதை போல் இருப்பதை கண்டு, சுதீஷ் அலறுகிறார்... இவன் வேற... ஏண்டா... இவ்ளோ பக்கத்துல வந்து நிக்கற... என்று சுதீஷை சீறுகிறார்...

மக்களே...நேத்து ஒரு பொஸ்தகம் படிச்சேன்... அது ரொம்ப நல்ல பொஸ்தகம்...

தலீவா... அது இன்னா பொஸ்தகம்?? எதுனா பலான பலானதா??

டேய் அடங்குடா பரதேசி... நான் எல்லா பொஸ்தகமும் தான் படிக்கறேன்... இப்போ கூட என் வண்டியில ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், கல்கண்டு எல்லாம் இருக்கு... திருப்பி போறப்ப படிக்கறதுக்கு... இது வேற பொஸ்தகம்டா.. 1330 குறள், பெரிய தாடி வெச்ச ஒருத்தரு எழுதுனது... (பெரியார் இல்லடா.... கபோதி... இவரு வேற...).. அங்... அவரு பேரு நெனவுல வரலியே... இனிமே டாஸ்மாக் கொஞ்சம் கொறைக்கணும்... எப்போ, எங்க பார்த்தாலும், மங்கலாவே தெரியுது... புத்தி கூட‌ எப்போவும் போல‌வே மந்தமா, தடுமாறிகிட்டே இருக்குது...

இப்போது மெதுவாக திரும்பி பக்கத்தில் இருக்கும் பண்ரூட்டியை பார்க்க, அவர் திருவள்ளுவர், திருக்குறள் என்று எடுத்து கொடுக்க...

ஆங்... அந்த பொஸ்தகம் பேரு "திருவள்ளுவர்"...எழுதுனது "திருக்குறள்"...

அய்யோ..அய்யோ என்று தலையில் பண்ரூட்டி அடித்து கொள்வதை கவனித்த விஜயகாந்த் தன் சிவந்த விழிகளை பெரிதாக்கி, உருட்டி பார்க்க.... பண்ரூட்டி அலறிக்கொண்டே பின்னால் சாய்கிறார்...

அவர் சாய்வதை பார்த்த சிலர், சோடா கேட்க, ஒரு தொண்டர், ஒரு ஃபுல் பாட்டிலும், சோடாவும், கிளாஸூம்... கூடவே சிப்ஸூம் எடுத்து வருவதை பார்த்து கேப்டன் கர்ஜனை செய்கிறார்...

சோமாறி... மயங்கி விழுந்தவனுக்கு, மொதல்ல வெறும் சோடா குடுடா... எழுப்பி, வேணுமான்னு கேட்டு சரக்கு கலக்கி குடு... எல்லாத்தையும், நானே சொல்லி தரணுமாடா. எவ்ளோ வருசம் என்கூட இருக்க... இது கூட தெரியலியா என்று ஜெர்க்குகிறார்...

சரி. சரி.. மொதல்ல அவர எழுப்பி உள்ளார இருக்கற‌ ரூம்புல படுக்க வைங்க... என்னோட ஏ.சி.ரூம்புக்கு யாரும் போயிடாதீங்க... அங்க எனக்கு தனியா காய்ச்சின பெஸல் சரக்கு இருக்கு...தப்பித்தவறி அத எடுத்து யாராவது அடிச்சு காலி பண்ணுணீங்க, மவனே, ஒரு பய இந்த எடத்த விட்டு உருப்படியா போக முடியாது...என்று ச‌வுண்ட் விடுகிறார்...

பெருமூச்சு வாங்கி விட்டு, சிறிதே போதை தெளிந்த நிலையில், அந்த பொஸ்தகம் பேரு "திருக்குறள்", அத்த எழுதுனவரு அந்த பெரிய தாடி வெச்ச "திருவள்ளுவர்" என்று சரியாக சொல்லிவிட்டு, ஹீ...ஹீ... என்று இளிக்கிறார்... அப்போது பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு தொண்டர் ஃபோட்டோ எடுக்க... அந்த ஃபோட்டோவ வெளியே பெரிசா போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார்...

பொஸ்தகம் முழுசா படிச்சேன்... அதுல ஒரு கொறளு நெனவுக்கு வந்துச்சு... சொல்லவா என்று கூட்டத்தை பார்த்து கேட்க.. பசியில் எல்லா தலையும் ஒரு புறமாய் சாய, கேப்டன் சரி என்கிறார்கள் என்று எண்ணி, உற்சாசமாகி சொல்ல ஆரம்பிக்கிறார்...

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து...

அப்படின்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? சொல்றேன் கேளுங்க...

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்று கூறப்படுவது..

ஆனா, இப்போ கருணாநிதி ஆச்சில மக்களுக்கு நோய் வருது... விளைச்சலே இல்ல.. பொருளாதார வளம் அவரு வீட்டுல மட்டும் தான் இருக்கு... இன்ப நிலை.. கலைஞர் டி.வி.ல காட்டுற "மானாட மயிலாட" தான் இன்ப நிலையா?? உரிய பாதுகாப்பு... நாட்டுல எங்க இருக்கு பாதுகாப்பு...

காலைல கூட நான் வரப்போ ஒருத்தன் என் மேல தூக்கி போடறதுக்கு ஒரு பெரிய பாறாங்கல்லோட வந்தான்... அப்புறம் அவன கூப்பிட்டு சரக்கடிக்க ரூ.200 குடுத்தேன்... கம்முனு போயிட்டான்... என்ன மாதிரி ஒரு பெரிய கச்சி தலைவருக்கே இந்த நாட்டுல பாதுகாப்பு இல்ல...

(யப்பா... ஒரெ ஒரு கொறளு சொல்றதுக்குள்ளவே, வேர்த்து, விறுவிறுத்து, நாக்குல நொரை தள்ளிப்போச்சு.. இனிமேல அந்த கொறளு பொஸ்தகத்த கண்ணால கூட பாக்க கூடாதுடா அய்யனாரே...).

இன்னும் நெறைய விசயம் இருக்கு... அடுத்த வாரம் மீட்டிங்ல சொல்றேன்... போயி எல்லாரும், வந்த வேலைய தொடங்குங்க... சரக்கு, பிரியாணி எல்லாம் உள்ளாக்க இருக்கற ரூம்புல இருக்கு...நான் வர்ட்டா..ஆங்ங். என்று சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக மாடியில் இருக்கும் தன் ரூம்புக்கு எஸ்கேப் ஆகிறார்...

(கேப்டனின் அதிரடி தொடரும்....)

Tuesday, March 22, 2011

"விதை” - குறும்படம்

”சித்தம்” என்னும் குறும்படத்தை வழங்கிய நம் “ப்ளாசம் கிரியேட்டர்ஸ்” உங்களை மீண்டும் மகிழ்விக்க ”விதை” என்ற புதிய குறும்படம் வாயிலாக வருகிறது...

ஒரு சமுதாய பார்வையுடன், பார்வையாளர்களின் மனதில் விதைக்க... ஒரு வீரிய விதையுடன் வெளிவருகிறது இந்த “விதை” என்னும் குறும்படம்...

எந்த ஒரு சாமான்ய மனிதனும், தன்னையும், தன் குடும்பத்தையும்.... பொறுப்புடன் பார்த்து ... தனது...!!!! என கொள்கிறான். அதுவே தன் ஊருக்கோ, அல்லது தான் சார்ந்திருக்கும் நாடு என்றோ வரும்போது, அதில் இருந்து அன்னியமாகி, தன் பொறுப்புக்களை விட்டு விலகி விடுகிறான்.

ஒரு தனி மனிதன், தன் ஊரையும் நாட்டையும், தன் குடும்பத்தை போல் பார்க்கும்..... மாற்றம் நிகழுமா... !!! எனும் கேள்விக்கு விடை சொல்கிறான், இந்த விதை குறும்படத்தின் கதாநாயகன்.

வாழ்வின் ரகசியம் அறிய, சமூக அன்பின் அடிநாதத்தை, அறிந்து கொள்ள நகர்கிறது, இக்குறும்படம்.

இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும் எனும் நம்பிக்கையுடன், பணிவுடன் சமர்பிக்கிறோம்.

“விதை” குறும்படத்தை இங்கே கண்டுகளியுங்கள் :

http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U


உங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் என்றும் வேண்டும்


(ஆர்.கோபி / லாரன்ஸ்)