Monday, March 9, 2009

"தல" அதிரடி தேர்தல் பிரச்சார உரை.


என் இனிய கழக கண்மணிகளே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே. ஆங்கிலம் பேசும் அயல் நாட்டவர்களே, எதிர்கட்சியின் பகட்டானவர்களே, உங்கள் அனைவருக்கும் வள்ளுவனின் அடுத்த வாரிசாம், கம்பனின் இளைய பேரனாம் இந்த கலைஞரின் தமிழ் வணக்கங்கள்.

அயல் நாட்டினர் கூட தமிழ் படிக்க ஆவல் கொள்ளும் இந்த காலத்தில், இங்கு புல் பூண்டோடு பிறந்து, கப்பி, களையோடு வளர்ந்த என் தமிழ் கூட்டம், அந்நிய மொழியாம் ஆங்கிலத்தின் மேல் மோகம் கொண்டு அலைவதை பார்த்தால், அய்யகோ, என் நெஞ்சு விண்டு விடும் போல் உள்ளதே. இதை கண்டால், என் மனம் பதைபதைக்கும், உங்கள் பணம் என் பையை நிரப்பும்.
என் பிறந்த நாளின் போது, என்மேல் பாசம் கொண்டு, என் தமிழ்மேல் நேசம் கொண்டு, என் தொண்டர்கள் (குண்டர்கள்) என்னை பண மழையில் நனைத்தனர். நான் பதிலுக்கு அவர்களை என் தமிழ் மழையில் நனைத்தேன். இவ்வளவு நனைந்தும் வசூல் மழை ஒன்றும் பிரமாதம் இல்லை. குறைந்த வசூல் கண்டு கலக்கமடைந்தேன். நிறைய வசூல் வந்தால், நெகிழ்ச்சி அடைவேன்.

இந்நாட்டில் இப்போது பல பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ள நிலையில், நான் ஒரு புதிய தொல்காப்பியப்பூங்கா திறந்துள்ளேன். அந்த தொல்காப்பிய பூங்காவில் என் தமிழ் பௌண்டன், செந்தமிழை பீய்ச்சி அடிக்கும். உள்ளே நுழைய சிறுகட்டணமாக, ஒரு ரூ.5,000௦௦௦/- மட்டும் செலுத்தி, நீங்கள் அனைவரும் தொல்காப்பிய பூங்காவில் நுழைந்தால், என் தமிழ்மழை உங்களை குளிப்பாட்டி மகிழ்விக்கும். வாருங்கள், வந்து நனையுங்கள்.
பலப்பல வேஷங்கள் போடும் பலதரப்பட்ட மனிதர்களை நான் பல காலமாக கண்டு வளர்ந்தவன். ஆனால், என் பிறந்த நாள் விழாவின் போது, என்னிடமே பகல்வேஷம் போட்டு ஒருவன் வந்தான். பிறந்த நாள் வாழ்த்து கூறியவன், தட்சிணை எதுவும் போடாமல் ஓட எத்தனிக்க, சுற்றி குழுமி இருந்த என் தொண்டர்களால் (குண்டர்களால்) நன்றாக கவனிக்கப்பட்டான்.
இன்று, போர்ப்ஸ் என்றொரு அயல்நாட்டு பத்திரிகை என்னையும், என் குடும்பத்தாரையும், உலகின் 445-வது பணக்காரர்களாக அறிவித்து, விஷம பிரச்சாரம் செய்துள்ளது. இதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. அயல்நாட்டின் அந்நியர் கூட இங்கு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார்களோ என்று ஐயப்பட வைக்கிறது. மறத்தமிழன் ஒருவன், இந்த பட்டியலில், 444 இடங்கள் பின்தங்கி உள்ளானே என்று யாரும் கோபப்படவில்லை, வெட்கப்படவில்லை, வருத்தப்படவில்லை.

என்னை இந்த இடத்தில் வைத்து அழகு பார்த்த தமிழகமே, தமிழக மக்களே, எதிர்கட்சிகார்கள் கேட்கிறார்களே, இந்த இடம் எப்படி வந்ததென்று?? அவருக்கு சொல்லுங்கள், அது நீங்கள் எனக்கு, அன்பால் அளித்த இடம் என்று. வரும் வருடங்களில், இந்த இடம் நிரந்தரம் இல்லை, மேலும் உயரவைப்போம் என்று. அப்போதாவது அவர்களுக்கு புரியட்டும், நான் யாரென்று??

இந்த 445 இடத்தில் நான் உள்ளதை பற்றி கேள்வி எதுவும் கேட்க நினைப்போர், அந்த பட்டியலில், எனக்கு முன் உள்ள 444 பேரையும் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள், பிறகு உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். என்னை மட்டும் கேள்வி கேட்பது, என்ன கயமைத்தனம்??

டாஸ்மாக் சகோதரர் ஒருவர், அவரின் திருமண மண்டபத்தை நான் இடித்து விட்டதாக, எல்லா பத்திரிக்கைகளையும் அழைத்து சொல்லி வருகிறார். அவருக்கு ஒன்று சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன். நான் உன் மண்டபத்தை இடிக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் ஏதோ திட்டத்திற்காக அந்த இடத்தை எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். இந்த நல்ல விஷயத்தை, நீ டாஸ்மாக் போதை தெளிந்ததும், தெளிவு படுத்தி கொள்வாயாக.

நீ இது போன்று பலபல கோடிகள் செலவு செய்யும் முன், என்னையும் அழைத்து சில பல கோடிகள் கொடுத்திருந்தால், எனக்கு உன்மேல் வராது காழ்ப்பு, ஏனெனில் நான் சோற்றில் இடுவது உப்பு, நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், உனக்கு நாங்கள் வைப்போம் ஆப்பு.

தேர்தல் சுற்றுபயணம் தொடங்க வேண்டும். வசூல் பலகோடிகள் தேற்ற வேண்டும். என் உண்டிகள் வசூலில் நிரம்பும்போது, என் மனமும் நிறைந்து காணப்படுகின்றது. ஒரு சில இடங்களில் மட்டும், வசூல் மிகவும் குறைவாக உள்ளது. அதை காணும் போது, மனம் வாட்டம் அடைகிறது.
நம் நாடு மற்றும் அதன் வளர்ச்சி, உலகின் அனைத்து பல நாடுகளுக்கும் சவால் விடும் நிலையில் இருந்தாலும், சில இடங்களின் வசூல் மட்டும் யாருக்கும் எந்த சவால் விடும் நிலையிலும் இல்லையே என்று எண்ணும்போது, என் உள்ளம் குமுறுகிறது, கண்கள் பனிக்கிறது, இதயம் கனக்கிறது.

மக்கள் வாழ்வில் மற்றற்ற மகிழ்ச்சியும், முன்னேற்றமும் வந்துள்ள நிலையில், இந்த முறை, வசூலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட நீங்கள் தயவு செய்ய வேண்டும். என்னை வசூல் மன்னனாக ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. பொறுப்பில் பின்வாங்குவது தமிழனுக்கு அழகல்ல. முடிவெடு தமிழா ............... சோதனைகளை தாண்டியவன், சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்.

நான் உங்கள் கட்டுமரம், கள்ளத்தோணி, நீங்கள் அதில் ஏறி, எங்கும் பயணம் செல்லலாம், இலவசமாக. நான் உங்களுக்கு சேவை செய்வதையே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். என் சேவை நீங்கள் அறியாததா?? உதாரணத்துக்கு ஒன்று, மானாட மயிலாட, நானாட, நமீதா ஆட.....

காடுவெட்டி குரு, செடி வெட்டி சிஷ்யன் எல்லாரையும் அரவணைத்து செல்வது என் பண்பல்லவா?? எல்லோருக்கும் கையில் இருக்கும் 40அப்பத்தை சிறு சிறு பங்குகளாக கொடுத்து விட்டு, நான் என் பங்காக வைத்து கொள்ள இருப்பது வெறும் 35 தான்.
(வாழ்க அண்ணா நாமம், நானும் உங்களுக்கு போடுவேன் பெரிய நாமம்)

1 comment:

Mathi said...

sema... sema.... sema...Superrrrrrrrrrrrrr